அந்தோணியார்புர மக்கள் தங்கள் பள்ளி வளர்ச்சிக்காக நடத்தும் பதநீர்க் கடை. ஜனவரி 15ம் தேதிக்கு பிறகு பதநீர் சீசனில் தொடங்கும் இந்தக் கடை ஆகஸ்ட் மாதம் வரை செயல்படுகிறது. ‘‘எந்தக் கலப்படமும் இல்லாத, உடலுக்கு தீங்கிழைக்காத இயற்கையான பானம் சார் பதநீர்... இன்னைக்கு வரை எங்கப் பள்ளிக் கூடத்தை மேம்படுத்துறது இந்த பதநீர்தான்...’’ என்று பெருமிதமாகச் சொல்கிறார் அந்தோணியார்புரம் பள்ளிக்கூட கமிட்டித் தலைவர் ராயப்பன். ‘‘சுதந்திரத்துக்கு முன்னாடி ஆர்.சி. திருச்சபையால தொடங்கப்பட்ட பள்ளிக்கூடம். இது 75வது வருஷம். இப்போ வரை, ஒண்ணு முதல் அஞ்சாம் கிளாஸ் வரை அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியா நடந்துக்கிட்டு வருது. ஆனா, அஞ்சாம் வகுப்புக்கு மேல நடுநிலைப் பள்ளியில படிக்க போகணும்ன்னா கிழக்கே 5 கிமீ தொலைவுல இருக்கிற தூத்துக்குடிக்குப் போகணும். அதைவிட்டா, மேற்கே 5 கி.மீ தொலைவுல இருக்கிற புதுக்கோட்டைக்குப் போகணும். அதனால, பிள்ளைங்க ரொம்ப சிரமப்பட்டாங்க. கொஞ்சம் விவரம் தெரிஞ்சு பஸ் ஏறி படிக்க போகுற வரைக்குமாவது பிள்ளைகளை இங்கே படிக்க வைக்கலாம்னு தோணுச்சு. அதனால, நடு நிலைப்பள்ளியா தரம் உயர்த்த அரசுகிட்ட கோரிக்கை வச்சோம். அது முடியாததால 6 முதல் 8ம் வகுப்பு வரை மட்டும் சுயநிதி வகுப்புகளா நாங்களே தொடங்கிட்டோம். வருஷம் தவறாம அங்கீகாரம் மட்டும் அரசுகிட்ட வாங்கிடுவோம். பள்ளியை நடத்த வேண்டிய பொறுப்பு எங்களோடது.