'சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல்' என அறிவித்துவிட்டது தேர்தல் ஆணையம். இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டால், பேரவைக்கு எப்படிப்பட்ட வரவேற்பை மக்கள் கொடுப்பார்கள் என வார்டு வாரியாக அலசி வருகிறார் தீபா. அவருடைய முயற்சிக்கு பன்னீர்செல்வம் அணியினரும் ஆதரவு தெரிவிக்கின்றனர்' என்கின்றனர் தீபா பேரவை அமைப்பினர். அ.தி.மு.க அரசுக்கு மிகப் பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். இதனை மனதில் வைத்தே இத்தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் பங்கேற்றார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 'அம்மாவுக்குக் கிடைத்த வரவேற்பை, தொகுதி மக்கள் எங்களுக்கு வழங்குவார்கள்' எனவும் பேசி வருகிறார். தொகுதி மக்களிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களைப் போக்கும் வகையில் அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். தென்சென்னை மக்களைவிடவும் கூலித் தொழிலாளர்களை அதிகமாகக்கொண்ட ஆர்.கே.நகரில், அமைச்சர்களின் பேச்சுக்கு எந்தவித மரியாதையும் கிடைப்பதில்லை. “ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள், அ.தி.மு.க-வின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதால், நலத்திட்டங்களை ஏராளமாக அறிவிக்க இருக்கிறது தமிழக அரசு. இவையெல்லாம் மக்கள் மனதில் மாற்றத்தை உருவாக்குமா எனத் தெரியவில்லை. தற்போது நிர்வாகிகளும் சசிகலா படத்தை போஸ்டரில் போட்டு சுவரொட்டி ஒட்டுவதில்லை. அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்ற நேரத்தில், ஒட்டப்பட்ட போஸ்டர்களில், அவரது படத்தை மட்டும் பொதுமக்கள் கிழித்துவிடுகின்றனர். தொடர்ந்து அவரது படத்தை முன்னிலைப்படுத்தினால், ஓட்டு கிடைக்காது என அவர்கள் புரிந்துகொண்டுவிட்டனர். எனவேதான், அம்மா வழியிலேயே ஆட்சி தொடரும் என ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தியே பேசி வருகின்றனர். ஆர்.கே.நகரில் தலித் மக்கள் நிரம்பியுள்ளனர். ஜெயலலிதாவின் அபிமானிகளாகவும் அவர்கள் உள்ளனர். 'திருமங்கலம் அளவுக்கு கரன்ஸியை வாரி இறைத்தாலும் இரட்டை இலை வெல்லுமா?' என்ற சந்தேகம் இன்னமும் தீரவில்லை" என ஆதங்கப்படுகிறார், வடசென்னை அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். அதேநேரம், 'தொகுதி மக்கள் தீபாவை எப்படிப் பார்க்கிறார்கள்?' என்பதை அறிந்துகொள்ள, ஆர்.கே.நகரில் ஆய்வுசெய்துவருகிறார் தீபா. பேரவைக்குள் ஏற்பட்டுள்ள நிர்வாகிகள் நியமனம் தொடர்பான குளறுபடிகள் ஒருபுறம் இருந்தாலும், ஆர்.கே.நகரை மையமிட்டே அவருடைய அரசியல் நடவடிக்கைகள் வேகம்பெற்றுவருகின்றன. "ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவதுதான் அவர் முன் தற்போதுள்ள ஒரே சவால். நேற்று முன்தினம் தீபாவிடம் பேசிய அரசியல் ஆலோசகர் ஒருவர், 'எம்.ஜி.ஆர் கட்சியைத் தொடங்கிய பிறகு, திண்டுக்கல் இடைத் தேர்தலில் 55 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி அது. காங்கிரஸ் கட்சிக்குப் பாதகமான முடிவு என்றாலும், அக்கட்சியின் வேட்பாளர் என்.எஸ்.வி.சித்தன், ஒரு லட்சத்து 35 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். அதேபோல ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அரசியல்ரீதியாக மிகப் பெரிய வெற்றியை உங்களுக்குக் கொடுக்கும். இந்தத் தொகுதியில் 30 சதவிகித தலித் மக்கள் வசிக்கின்றனர். 18 சதவிகித மீனவர்கள் உள்ளனர். 15 சதவிகித தெலுங்கு தாய்மொழி மக்களும் நாடார் மக்களும் நிரம்பி உள்ளனர். ஜெயலலிதாவின் ரத்த உறவான நீங்கள் களமிறங்குவதை மக்களும் வரவேற்கின்றனர். உங்களை ஜெயலலிதாவின் பிம்பமாகத்தான் பார்ப்பார்கள். பெண்களின் வாக்கை முழுமையாகக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அ.தி.மு.க-வின் தற்போதைய நிர்வாகிகள் மீது நாடார் சமூக மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்களுக்கு அமைச்சரவையிலும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. இந்த அதிருப்தி அலை உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தேர்தல் வேலை பார்ப்பார்கள். பன்னீர்செல்வம் அணியில் உள்ளவர்கள், 'நாம் ஒரு வேட்பாளரைக் களமிறக்குவோம்' என்ற மனநிலையில் இருந்தனர். இதற்குப் பதில் அளித்த பன்னீர்செல்வமோ, 'வேண்டாம். ஆர்.கே.நகரில் தீபா களமிறங்குவதுதான் சரியாக இருக்கும்' என உறுதியாகத் தெரிவித்துவிட்டார். இந்த சாதகமான அம்சங்களால், அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவீர்கள்' என விவரித்திருக்கிறார். அவரது ஆலோசனையை ஏற்றுக்கொண்ட தீபா, தொகுதி மக்களுக்கு அளிக்கவேண்டிய வாக்குறுதிகள்குறித்து குறிப்பெடுத்து வருகிறார்" என்றார் விரிவாக. ஆர்.கே.நகரை குறிவைத்து அதிரடியான அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 'சசிகலா மீதான அதிருப்திகள், தீபாவுக்கு சாதகமாக அமையுமா? திருமங்கலம் ஃபார்முலா ஆர்.கே.நகரில் செல்லுபடியாகுமா?' என்ற கேள்விகளும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்