img
img

சசிகலாவின் மூலதனம் ஜெயலலிதா... ஜெயலலிதாவின் முகமூடி சசிகலா!
புதன் 01 மார்ச் 2017 12:26:00

img

வடக்கு நோக்கி வணங்கத் தோன்றுகிறது. தெற்கைக் காப்பாற்றியிருக்கிறது வடக்கு. நேர்மையற்ற மனிதர்கள் எந்தத் திசையில் இருந்தாலும், நீதியின் சுத்தியல் உச்சந்தலையில் நச்சென இறங்கும் என்பதை உச்ச நீதிமன்றம் நிரூபித்துள்ளது. ‘மை லாட்’ என்று நீதிபதிகளைப் பார்த்துச் சொல்வதில் அர்த்தம் உள்ளது என்பதை, பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகிய இருவரும் மெய்ப்பித்துள்ளார்கள். ‘வேதனையான மௌனம் வெகுகாலம் நீடித்ததால், கவலை தரக்கூடிய தகவல்களை இங்கு மேடையேற்ற வேண்டியிருக்கிறது’ என்ற தீர்ப்பின் சொற் களுக்குள், தமிழ்நாட்டின் கால் நூற்றாண்டுகால அசிங்கம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதன் பிறகு, நடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் (2001, 2011, 2016) மக்களால் பெருவாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆனார் ஜெயலலிதா. இன்னோர் இரண்டு வாரங்கள் ஆகியி ருந்தால் சசிகலா, தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆகியிருக்கக்கூடும். எட்டரைக் கோடித் தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் இரண்டு பேருமே, பக்கா ஊழல் பேர்வழிகள் என்று உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பில் உறுதிப்படுத்தியிருக்கிறது. எந்தவிதமான குற்றஉணர்ச்சியும் இல்லாமல், மிகத் திறமையாகத் திட்டமிட்டு சொத்துகளை இவர்கள் வாங்கிக் குவித்துள்ளார்கள். இவற்றையெல்லாம் அடுத்தடுத்து நடந்த விசாரணையில் மறைக்க முயற்சித்துள்ளார்கள். சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக இப்படிச் செயல்பட்டுள்ளார்கள். எவ் வளவு பெரிய தந்திரத்துடன் இவற்றையெல்லாம் மூடி மறைத்துள்ளார்கள் என்பதை அறியும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. இதற்கு மேல் எங்களால் எந்த வார்த்தையையும் பயன்படுத்தத் தெரியவில்லை. பணம் சம்பாதிக்கும் ஒரே குறிக்கோளுடன், அச்சம் இல்லாமல் அனைத்து மட்டங்களிலும் ஊழல் செய்துள்ளார்கள். பேராசை மட்டுமே இவர்களிடம் இருந்துள்ளது. ஆக்டோபஸ் மாதிரி அனைத்து மட்டங்களிலும் இவர்களது ஊழல் கரம் பரவியிருக்கிறது’ என்பது தீர்ப்பில் உள்ள வரிகள்.இரண்டு கோடி ரூபாயாக இருந்த சொத்து ஐந்தே ஆண்டுகளில் (1991-96) 66 கோடி ரூபாயாக எப்படி மாறியது என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக் கேல் டி குன்ஹா எழுதியதை, வரிக்கு வரி உச்ச நீதிமன்றம் வழிமொழிந்துள்ளது. ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கிறார். முதலமைச்சரின் அதிகாரபூர்வ வீட்டிலேயே சசிகலா இருக்கிறார்; இளவரசி இருக்கிறார்; சுதாகரன் இருக் கிறார்; பட்டவர்த்தனமாகப் பணம் வாங்குகிறார்கள். சென்னையில் சாந்தோம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, அண்ணாசாலை, கிண்டி, கிழக் குக் கடற்கரை சாலை, நீலாங்கரை, முட்டுக்காடு, வெட்டுவாங்கேணி, அபிராமபுரம் என எல்லா பகுதிகளிலும் வீடுகள், மனைகள் வாங்குகிறார்கள். சென் னைக்கு வெளியே பையனூர், சிறுதாவூர், சோழிங்கநல்லூர், செய்யூர் என வளைக்கிறார்கள். தலைநகர் தாண்டி தஞ்சாவூர், திருச்சி, ஊட்டி, திரு நெல்வேலி, புதுக்கோட்டை போன்ற ஊர்களில் ஏக்கர் ஏக்கராக வாங்கிப் போடுகிறார்கள். 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். இவை அனைத்துமே போயஸ் கார்டன் வீட்டு முகவரியில். இந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் தினம் தினம் லட்சம் லட்சமாகப் பணம் போடப்படுகிறது. இந்த நிறுவனத்தில் வெளியாட்கள் எவருமே முதலீடு செய்யவில்லை. இந்த நிறு வனங்கள் எந்தப் பொருளையும் உற்பத்திசெய்யவில்லை. எந்தப் பொருளையும் வாங்கவும் இல்லை... விற்கவும் இல்லை. பணம் மட்டும் போடப்படும்... எடுக்கப்படும். இந்த நிறுவனத்தின் பேரில் கடன் வாங்கப்படும்... வாங்கிய கடன் சில மாதங்களில் அடைக்கப்படும். இதன் உச்சம், வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரனின் திருமணம். எடுக்கப்பட்ட ரசீதுகளின் அடிப்படையில் சுமார் ஏழு கோடி ரூபாய் செலவில் (22 ஆண்டு களுக்கு முன்னர்) நடத்தப்பட்ட திருமணம் அது. ஆண்டு வருமானம் 44,000 ரூபாய் என்று சொல்லி வீட்டுக்கடன் வாங்கிய சுதாகரன், பல கோடி ரூபாய் செலவில் திருமணம் செய்தார். ‘என் திருமணத்துக்கு யார் செலவு செய்தார்கள் என்று எனக்கே தெரியாது’ என்றார். மயிலாப்பூர் கனரா வங்கியில் 105 ரூபாய் கொடுத்து கணக்கு தொடங்கியவரிடம் அடுத்தடுத்து ‘யார் யாரோ’ லட்சக்கணக்கில் பணம் போட்டார்கள். இளவரசியும் தனது ஆண்டு வருமானம் 40,000 ரூபாய் என்றார். அவர் வங்கிக் கணக்கிலும் ‘யார் யாரோ’ பணம் போட்டார்கள். 1991-ம் ஆண்டுக்கு முன்னர் ஜெயலலிதா, சசிகலா இருவருக்கும் 12 வங்கிக் கணக்குகள் இருந்தன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவை 52 வங்கிக் கணக் குகளாக விஸ்வரூபம் எடுத்தன. சசிகலாவுக்கு இருந்த வருமானம், கணவர் நடராசனின் ஊதியம். ஸ்கூட்டர் வாங்க 3,000 ரூபாய் கடன் வாங்கும் நிலைமை. அரசுக் கடன் மூலமாக வீடு வாங்கும் நிலைமை. அவர்தான் 'திருத்துறைப்பூண்டியில் 250 ஏக்கர் இருந்தது’ என்று நீதிமன்றத்தில் சொன்னார். ஜெயலலிதா சொன்ன பொய்கள் பலவிதம். டான்சி நிலத்துக்குக் கையெழுத்து போட்டுவிட்டு எனது கையெழுத்தே இல்லை என்றவர் அவர். ‘மைசூர் மகா ராஜா குடும்பம்' என்று சொல்லிக்கொண்ட இவர், ‘நான் அரசியலுக்கு வந்து புதிதாக எதுவும் சம்பாதிக்கவில்லை. சுதாகரன் திருமணத்துக்கு நான் எது வுமே செலவு செய்யவில்லை. சசிகலா, இளவரசி, சுதாகரன் வாங்கிய சொத்துகளுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. போலீஸ் அதிகாரி நல் லம நாயுடு எங்கேயோ இருந்து கொண்டுவந்த நகைகளை, போயஸ் கார்டனில் வைத்து படம் பிடித்துக்கொண்டார்’ என்று நீதிமன்றத்தில் நீட்டி முழக் கினார். 23 கிலோ தங்கம், 125 கிராம் வைரம், 1,116 கிலோ வெள்ளி வாங்கும் அளவுக்கு நல்லம நாயுடு என்ன விஜய் மல்லையாவா? 2,000 ஏக்கர் நிலம், 30 பங்களாக்கள், 33 நிறுவனங்கள், தங்கம் - வைரம் எனக் கூட்டிக் கழித்து 66 கோடி ரூபாய்க்குக் கணக்கு கேட்டபோது இவர்கள் நான்கு பேருமே சொன்ன பதில், ‘கருணாநிதியின் பழிவாங்கும் நடவடிக்கை இது’ என்றது மட்டும்தான். ‘தங்கள் மீது எந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளனவோ, அதன் அடிப்படையைத் தகர்க்கும் ஒரே ஓர் ஆதாரத்தைக்கூட ஜெயலலிதா தரப்பு சொல்லாமல், மேம்போக்கான அரசியல் விளக்கங்களையே நீதிமன்றத்தில் சொன்னது’ என்றார்கள் நீதிபதிகள். 'தாங்கள் வைத்திருந்த பணத்துக்கு, சொத்துக்கு நியாயமான கணக்கைக் கடைசி வரை இவர்களால் காட்ட முடியவில்லை, ஓர் ஆதாரத்தைக்கூட தரவில்லை' என்றும் நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள். 1991-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வெற்றி என்பது, தமிழக வரலாற்றில் முக்கியமானது. எதிர்க்கட்சியான தி.மு.க இரண்டே இரண்டு இடங்களில் மட் டுமே வென்ற தேர்தல் அது. ஜெயலலிதாவுக்கு முதல் அரசியல் வெற்றியைக் கொடுத்த தேர்தல். சசிகலா குடும்பத்தின் முதல் அறுவடைக் காலமும் அதுதான். கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அரசாங்க கஜானாவே போயஸ் கார்டனுக்குப் பாத் தியதைப்பட்டது என்று நினைத்தார். முந்தைய 15 ஆண்டுகள் நிரந்தர வருமானம் இல்லாமல் எம்.ஜி.ஆருக்கும், ராமச்சந்திர உடையாருக்கும், இன்னும் சிலருக்கும் கடிதம் எழுதி பணம் கேட்கும் நிலைமையிலிருந்த ஜெயலலிதாவுக்கு, முதலமைச்சர் பதவி, பணப் பாதையாகத் தெரிந்தது. சசிகலா குடும்பம் வறண்ட நிலம். எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் இழுத்துக்கொள்ளும். அதனால்தான் ஊழலையும் முறைகேட்டையும் துணிச்சலாக, பட்ட வர்த்தனமாக, கூச்சமே இல்லாமல் இன்னும் சொன்னால் பெருமையாகவே செய்தார்கள். வளர்ப்பு மகன் திருமணம் என்பது, திருட்டை, திருவிழா ஆக் கிய நிகழ்வு. உலக வழக்குகளை எல்லாம் கரைத்துக்குடித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷும் அமிதவ ராயும், ‘எங்களுக்கு இது அதிர்ச் சியாக இருக்கிறது’ என்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டு மக்களுக்கு இது பேரழிவு. நான்கு பேர் சேர்ந்து நாட்டை நாசமாக்கிச் சூறையாடியிருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பில் நாட்டு மக்கள் அதிர்ச்சி அடையவேண்டிய ஒரு தகவல் இருக்கிறது. ‘போயஸ் கார்டன் வீட்டில் வாழ்வதற்காக இவர்கள் ஒன்று சேர வில்லை. பணம் சம்பாதிக்கவே ஒரே வீட்டில் கூடினார்கள்’ என்பதுதான் அது. 'சசிகலா, இளவரசி, சுதாகரன் மூன்று பேரும் என்ன செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது' என்றோ, 'அவர்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை' என்றோ, ஜெயலலிதா சொன்னதை உச்ச நீதிமன்றம் நிராக ரித்துவிட்டது. ‘இவர்கள் கிரிமினல் சதிசெய்து சம்பாதிக்கவே கூடினார்கள்; நிறுவனங்கள் தொடங்கினார்கள். எனவே, குற்றச் சதியில் நான்கு பேருக்கும் சம பங்கு உண்டு’ என்றது நீதிமன்றம். ‘மனிதர்களை நேசிக்கும் கொடைப் பண்பு காரணமாக சசிகலாவுக்கு போயஸ் தோட்ட வீட்டில் ஜெயலலிதா இடம் கொடுக்கவில்லை. குற்ற நட வடிக்கையில் இருந்து, தான் தப்பித்துக்கொள்ளவே சசிகலாவைத் தனது வீட்டில் ஜெயலலிதா வைத்துக்கொண்டார். இவர்கள் கூட்டுச் சதியால்தான் இந்த முறைகேடுகள் நடந்துள்ளன. இவர்கள் செய்த ஒரே ஒரு வேலை, சொத்துகளை வாங்கிக் குவிப்பதே’ என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினார்கள். அதாவது, ஜெயலலிதாவை வைத்துச் சம்பாதிக்க சசிகலா அவரோடு சேர்ந்தார், தான் சம்பாதிப்பதற்கு பினாமியாக சசிகலாவை ஜெயலலிதா சேர்த் துக்கொண்டார் - இதுதான் நீதிபதிகள் சொல்லவருவது. சசிகலாவின் மூலதனம் ஜெயலலிதா; ஜெயலலிதாவின் முகமூடி சசிகலா. ஒருவர் கல்ல றைக்குள் போய்விட்டார். இன்னொருவர் சிறையறைக்குள் போய்விட்டார். சசிகலா குடும்பம் அடுத்த பாதாள அறையை உருவாக்கிவிட்டது. எம்.ஜி.ஆர் பாடலைக் கேட்டு, இரட்டை இலையைப் பச்சைக்குத்தி வாழும் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் தனியறையில் ரகசியமாக அழுகிறார்கள். இந்தப் புதைகுழியில் இருந்து அ.தி.மு.க யானையை மீட்டெடுப்பது சிரமம். அதுவும் எடப்பாடி போன்றவர்களால் சாத்தியமில்லை. அவ்வளவு கனமானது இந்தத் தீர்ப்பு. டெல்லி உச்ச நீதிமன்றத்தின் ஆறாவது அறை எண்ணில் உட்கார்ந்த நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் இருவரும் எட்டே நிமிடத்தில் இறுதித் தீர்ப்பை வாசித்து முடித்தார்கள். 27 ஆண்டுகால அநியாயத்தைச் சொல்ல 27 நிமிடங்கள்கூட தேவைப்படவில்லை. ‘இதுபோன்ற சதிகாரர்களைத் தண் டிக்காவிட்டால் நீதி, நேர்மைக்கு அஞ்சி வாழ்பவர்கள் இந்தியாவில் சிறுபான்மை ஆகிவிடுவார்கள்’ என்ற ஒற்றை வரியிலேயே அவர்களது தீர்ப்பின் 570 பக்கங்களும் அடங்கியிருக்கின்றன. ‘இந்தத் தீர்ப்பின் ஆவணங்கள் பருமனாக உள்ளன. இந்தப் பாரத்தை நாங்கள் எடுத்துக்கொண்டோம்’ என்று நீதிபதிகள் சொன்னார்கள். அரசியலைத் தூய்மைப்படுத்தும் பாரம், அந்த நீதிபதிகள் கரங்களுக்குத் தரப்பட்டிருந்தது. அதை அவர்கள் கம்பீரமாகச் செய்தார்கள். ‘திரையரங்கில் தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்க வேண்டும்’ என்று தீர்ப்பளித்தவர் அமிதவ ராய். நீதியரசர்களே... உங்களது தீர்ப்புக்காக தேசம் எப்போதும் எழுந்து நிற்கும்!

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img