img
img

மாட்டுக்காக போராடினீர்களே! ஏன் நாட்டுக்காக போராடவில்லை?
ஞாயிறு 12 பிப்ரவரி 2017 13:43:41

img

அம்மா, அம்மா என அத்தனை தமிழக இதயங்களில் ஒலித்த ஒரு குரல் அடங்கிப் போன நாள்முதல் இன்றுவரை தமிழகமும், முதல்வர் அரியணையும் அரசியல் அனாதையாக்கப்பட்டிருக்கிறது. அம்மாவின் ஆத்மா அடங்கிப் போனதோ இல்லையோ அவரில் உடல் அடங்கிப் போன அந்த மெரினா கடற்கரை போர்க்குணம் கொண்ட பூமியாகி உருமாறியிருக்கிறது. ஏனெனில் உரிமைக்கான அத்தனை தமிழகப் போராட்டங்களின் கருவும் உருவும் இன்று மெரினாவில் முளைத்துத்தான் எழுந்து நிற்கின்றது. பன்னீர்செல்வத்தின் புரட்சிக்கு வித்திட்டதும் அந்த மெரினாதான். இரண்டாகப் பிளந்து நிற்கும் அதிமுகவின் இரு தலைமைகளையும் சமாளிக்க தமிழகமும், மத்திய அரசும் இந்தப் பாடு படுகிறதே இந்த இரு பாவிகளையும் ஒரே குடையின் கீழ் வைத்து சமாளிக்க ஜெ எப்படி பாடுபட்டிருப்பார்? வெடிக்குமா மாணவர் புரட்சி! உலக பூகோளத்தில் தமிழனுக்கென்று ஒரு தனி நாடு இல்லை என்ற ஒவ்வொரு தமிழனின் ஏக்கத்திற்குப் பின்னரும் சின்ன ஆறுதலாக இருப்பது தமிழ்நாடு எனும் பெயர்தான். ஆனால் இன்று தனக்கென்று ஒரு தலைவன் இல்லாத, தலைவர்களே சிறுபிள்ளைத்தனமாக அடித்துக் கொள்ளக்கூடிய கேவலமான அரசியலைச் செய்துகொண்டிருக்கிற தமிழகத்தை என்னவென்று விவரிப்பது. உலகத்தில் இதுவரை நிகழ்ந்திடாத அரசியல் அசிங்கங்களை நாளுக்குநாள் பரபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் நிலைப்பாடுகள் பெருத்த அவமானமே! ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தன் பண்பாடு, தன் அடையாளம் என பேரெழுச்சியுடன் காளைகளை விடவும் வேகமாக வெகுண்டெழுந்த மாணவர் சமூகம் இன்று இடம்பெறும் இத்தனை சிக்கல்களையும் பார்த்துவிட்டு அமைதி காப்பது ஏன்? அதாவது மாட்டுக்காக போராடுவதில் காட்டிய அத்தனை ஒற்றுமையும் தன்னார்வமும் இன்று நாட்டுக்காக போராடுவதில் தள்ளிப்போனது ஏன்? இதில் என்ன சுவாரஸ்யம் எனில் அன்று ஒரு முதல்வரை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இன்று முதல்வரே சமகால அரசியலை எதிர்த்துப் பேராடும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டிருக்கிறது. போட்ட ஓர் ஓட்டுக்காக இதுவரை 3 முதல்வர்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய அருவருப்பான ஒரு அசாத்திய அரசியலின் பின்னே இன்னும் தண்ணீரின் வழியே தலைசாந்திருக்கும் நாணலாக தமிழக அரசியலின் பதற்றங்களூடே பயணிக்காது இளையசமூகம் எப்போதுதான் கொதித்தெழப்போகிறது? அறம் சாராத, அநியாயத்தின் வழி நடக்கும் நாற்காலிக்கான போரை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது போல் மாணவர்களும் வேடிக்கைபார்ப்பதும் சமூக வலைத் தளங்களில் கேலிப் பதிவுகளிடுவதும் நிச்சயமாக சரியான வெற்றியை என்றும் ஏற்படுத்தப் போவதில்லை என்பது உறுதி. ஜெயலலிதாவை சாகடித்த அவசரத்திலும் அதிகம் முதல்வர் பதவியைப் பெறும் அவசரம்! குட்டியானைக்குக் கடிவாளம் கட்டி வளர்த்தால் அது வளர்ந்தும் அதற்குப் பயந்து கட்டுப்படும் என ஜெயா போட்ட தப்புக் கணக்குத் தான் இன்று ஜெயாவையே கொன்றழித்தது என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. தமிழ்நாட்டில் சசியைப் பற்றி ஜெயாவை விட யாரும் அதிகமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவேதான் சசிகலாவை அரசியலில் நுழைப்பதே அதிமுகவிற்கு பெரும் ஆபத்து எனக் கருதி எல்லைகளை வகுத்திருக்கிறார் ஜெ. ஆனால் இன்று பன்னீர்செல்வத்தை மிரட்டி கட்டாயக் கையெழுத்திட வைத்து ராஜினாமா கடிதத்தைப் பெற வைத்திருக்கிற சசிகலா அம்மா வழியில்தான் நான் ஆட்சி புரிவேன் என பாலுக்கு அழுகின்ற பாலகன்போல் முதல்வர் நாற்காலிக்காக ஒற்றைக்காலில் அடம் பிடிப்பது எவராலும் ஜீரணிக்கத் தக்கதல்ல. ஜெ. நினைத்திருந்தால் சசியை நிச்சயம் தொகுதி, சட்ட சபை என ஒவ்வொரு படிநிலைகளாக நிச்சயம் செதுக்கி வளர்த்திருப்பார். இதை நன்குணர்ந்த சசிகலா பொறுமை இழந்து ஜெயாவை போட்டுக்கட்டியதற்கு இப்போது ஆதாரங்கள் அங்குமிங்கும் முளைக்கத் தொடங்கிவிட்டனவே! ஜெயா இருமுறை தன் முதல்வர் பதவியை பன்னீருக்கு விட்டுக்கொடுத்தார். சசிகலா விட்டுக்கொடுத்த அந்தப் பதவியை இருமுறை தட்டிப் பறிக்கிறார். இதுதான் ஜெயாவுக்கும் சசிக்கும் உள்ள ஆத்மார்ந்த மன எழுச்சியும் வேறுபாடும். ஒரு முதல்வர், அதுவும் அவர் ஆண், அவரையே மிரட்டி வைத்த சசிகலா நோய்வாய்ப்பட்டிருந்த ஜெயாவை வதைப்பதிலும், அவரின் சிந்தனைகளை சிதைப்பதிலும், மருத்துவத்தில் மாற்றங்களை செய்வதிலும், வெளிநாட்டு டாக்டர்களை திசைதிருப்புவதிலும் என்ன சிக்கல் இருக்கிறது. இதில் என்ன வேறுபாடு எனில் மிரட்டப்பட்ட ஒரு முதல்வர் கொல்லப்பட்டார். இன்னொருவர் இன்னும் உயிருடன் இருக்கிறார். இதைத்தான் மிகத் தெளிவாக லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல் பத்திரிகையாளர் சந்திப்பை அப்போலோ செய்யவில்லை, தமிழ்நாடு அரசுதான் இப்படி செய்யுமாறு கூறியது என இன்று பல்டி அடித்துள்ளார். இதற்கான கதை, திரைக்கதை, வசனங்களை அமைத்துக் கொடுப்பதற்காகவே சசிகலா தன் கணவர் நடராஜனை அப்போலோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது நமக்கு நினைவிருக்கவேண்டும். மக்கள் பதற்றத்தில், மந்திரிகள் மசாஜ் நிலையங்களில். தமிழ்நாட்டின் இத்தனை பரபரப்புகளின் மத்தியில், மக்களுடன் துணை நிற்கவேண்டிய, மக்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய எம்எல்ஏக்களும், மந்திரிகளும் தாம் உல்லாசவிடுதிகளில் சிறைக்கைதிகளாக்கப் பட்டிருக்கிற உண்மையைப் புரிந்துகொண்ட பின்னரும் மக்கள் முன் நாடகமாடுவது வியப்பிற்குரியது. தம்மை ஓட்டுப்போட்டு தேர்வு செய்த மக்களின் குரல்களை செவிமடுக்க மறந்துவிட்டு மந்திரிச்ச ஆடுகளைப் போல சசிகலாவிற்காக தம்பட்டம் அடித்து மக்களை மிகப்பெரும் அதிருப்திக்குள்ளாக்கப்பட்டிருப்பதை விட அவர்களுக்கு பதவியும் பணமுமே மேலோங்கியிருப்பது அருவருக்கத் தக்கது. பன்னீர்செல்வத்திடம் பறிக்கப்பட்ட பதவியை செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட பின்னர், செங்கோட்டையனின் மனைவி அதைத் தூக்கியெறிந்துவிட்டு பன்னீருடன் சேருங்கள் என பிடிவாதம் கொண்டபோது எனக்குப் பதவிதான் பெரிது என அவர் கூறியது ஒன்றே போதும் அத்தனை எம்எல்ஏக்களின் நிலைப்பாட்டையும் அளவிட. சசிகலாவை நீளக்கயிற்றில் மேய விட்டிருக்கும் மத்திய அரசு சசிகலாவின் ஆக்கிரமிப்பு, கட்சிக் கலகங்கள், மிரட்டப்பட்டு ராஜினாமா கடிதம் பெற்றது, தான் நினைத்தாற்போல் மதுசூதனன் போன்ற அவைத் தலைவரையே பதவி நீக்கம் செய்வது, எம்எல்ஏக்களை சிறைப் பிடித்து வைத்திருப்பது, குண்டர் கும்பல் மூலம் மக்களைத் தடுப்பது என அத்தனை விவகாரங்களையும் தெளிவாக அறிந்துகொண்டும் இதுவரை மத்திய அரசு மௌனிப்பதில் நிச்சயம் அர்த்தமிருக்கிறது. தனது தலைமையின் கீழ் உள்ள ஒரு கிளை அரசியலில் இத்தனை பிரச்சினைகளும் விஸ்வரூபமெடுக்க அதை விரைந்து தீர்த்துவைக்க முடியாத மோடி அரசின் சூசகமான அரசியல் பின்னணியையும் மக்கள் அறிந்திருக்கவேண்டும். அதிமுகவை தமிழகத்தில் தழைத்தோங்காமல் முடக்கிவைத்திருக்கக் காத்திருக்கும் மத்திய அ எம்.சேரன்ரசின் நீண்டகால கனவு இப்போது கைக்கூடத் தொடங்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். காங்கிரஸ் உடன் கூட்டணியிலிருக்கும் திமுக ஆட்சியமைக்கக் கூடாது, அதிமுக பலமிழக்க வேண்டும், பாஜகவை துளிர்த்தெழச் செய்யவேண்டும் என்பதில் மோடி தலைமை மிகக் கவனமாக இருக்கிறது. இவற்றையெல்லாம் கையாளும் ஆயுதங்களாகவே சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு, ஆளுநர் வித்யாசாகர் ராவின் டில்லிப் பயணங்கள், பன்னீர் செல்வத்திற்காக உள்துறை அமைச்சு வழங்கும் ஆலோசனைகள் என பல அரசியல் இரகசியங்கள் உள்பொதிந்திருக்கின்றன என்பதை அரசியல் நோக்கர்கள் அறிவர். அதிமுகவின் பிளவு அனைத்துக் கட்சிகளையும் பலமிழக்கவே செய்யும் இன்று இரண்டாகப் பிளந்திருக்கும் அதிமுக வால் திமுக, பாமக, பாஜக, நாம் தமிழர் போன்ற இதர கட்சிகள் பலம் பெறும் அல்லது வாக்கு வங்கியை அதிகரிக்குமா எனக் கொண்டால் நிச்சயம் இல்லை. ஒருவேளை பன்னீர் செல்வத்தை முதல்வராக அதிமுக ஏற்றுக்கொண்டால் இந்தப் பிளவு எல்லாக் கட்சிகளையும் பலம் இழக்கவே செய்யும். காரணம் இதுவரை ஜெ. எனும் இரும்புப் பெண்மணியை எதிர்த்து பிரச்சாரங்களை செய்து, அந்த ஆட்சியில் அதிருப்தி அடைந்த மக்களை தம்வசம் ஈர்த்துக் கொண்ட கட்சிகளின் நடுவே பன்னீர்ச்செல்வத்தின் நகர்வு வேறு ஒரு பாதையை உருவாக்கிவிட்டது. அமைதியானவர், எதற்கும் கோபப்பட்டுப் பதில் சொல்லாதவர், அதிமுகவிற்கும் அம்மாவுக்கும் மிகப் பெரும் விசுவாசி என தனக்கென ஒரு அடையாளத்தை வகுத்துக் கொண்ட பன்னீர்செல்வத்தை அதிமுகவின் பரம எதிரியான திமுகவே அணைத்துக்கொண்டு பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. லட்சக்கணக்காக திரண்டு தீபாவை அரசியலுக்குள் இழுத்துக்கொண்டிருந்த அதிமுக தொண்டர்கள் இன்று பன்னீர்செல்வத்துடன் தீபா இணைந்து செயல்படுமாறு பகிரங்க அறிவிப்பு விடத் தொடங்கிவிட்டனர். மேலும் தீபாவின் வீட்டு முன்னே திரளும் மக்கள் தொகை படுமோசமாக குறைந்திருக்கிறது. இதுவரை பன்னீர்செல்வத்தை எந்தக் கட்சிகளும் விமர்சிக்கவில்லை. மாறாக அவரை முதல்வர் ஆக்குவதில் முனைப்புக் காட்டத் தொடங்கிவிட்டன. அதிமுகவை கடுமையாக விமர்சித்த சீமான், அன்புமணி போன்றோரும் இப்போது பன்னீரின் தலைமையை ஆதரிக்கத் தொடங்கியிருக்கின்றனர். எனவே சசிகலாவின் தலைமையை விரும்பாதவர்கள், ஜெயாவின் அரசியலில் அதிருப்தியானவர்கள், அதிமுகவின் தீவிர விசுவாசிகள் என அனைவரும் ஒன்றிணைந்து மிகப் பெரும்பான்மையைக் கொண்ட கட்சியாக பன்னீரின் தலைமை உருவாக்கப்படும் வாய்ப்பும் எழலாம். முதல்வர் பதவிக்காக நடத்தப்படும் முட்டாள்தனமான நகர்வுகள் சசிகலாவின் ஒவ்வொரு நகர்வும் கூட இருப்பவர்களையே முகம் சுழிக்கச் செய்கின்ற நடவடிக்கையாக இன்று மாறியிருக்கின்றது. தடுமாற்றமான பேச்சு, தவறான உரையாடல், தப்புத் தப்பான விமர்சனங்கள், தன்னிச்சையான முடிவுகள், தட்டிப் பறிக்கப்பட்ட பொதுச் செயலாளர் பதவி, தவம்கிடந்து அடையத் துடிக்கும் முதல்வர் பதவி என அத்தனை நகர்வுகளும் மக்கள் மத்தியில் அருவருக்கத் தக்க செயலாக பார்க்கப்படுகிறது. அதனையே சமூக வலைத் தளங்கள் கிழி கிழி என வறுத்தெடுக்கத் தொடங்கிவிட்டன. சசிகலா முதல்வர் ஆகும் முயற்சியை அறிந்த உடனேயே தமிழக அரசின் ஆலோசகராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் செயலர் நிலை-1 ஆக இருந்தவர் வெங்கட ரமணன் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன் பதவி விலகினர். இதையடுத்து, முதல்வரின் செயலர் நிலை -3 ஆக இருந்த ராமலிங்கமும் செயலர் பதவியில் இருந்து விலகினார். அரசு திட்டங்களை செயல்படுத் துவதற்காக ஜெயலலிதாவால், முதல்வர் அலுவலக தனி அதிகாரியாக நியமிக்கப்பட்ட சாந்தா ஷீலா நாயரும் பதவி விலகியுள்ளார். இவ்வாறு சசிகலாவுடன் பணிசெய்வதையே விரும்பாமல் பலரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்கின்றனர் என்பதிலிருந்து தமிழ்நாட்டின் தலையெழுத்து கண்களுக்கெட்டின தூரம் வரை தெளிவாகப் புலப்படுகிறது. இத்தனை அவலங்களுக்குப் பின்னரும் இளைய சமூகமும், மாணவர்களும் விழித்தெழுவார்களா என்பதை வருகின்ற நாட்கள் வரை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த உலகத்தில் தமிழர் விவகாரங்கள் எப்போதாவது போராடாமல் பெறப்பட்ட வரலாறு உண்டா?

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img