img
img

ராஜினாமா செய்தால், பல பிரச்னைகள் வரும்!
சனி 04 பிப்ரவரி 2017 14:45:49

img

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் தலைமைக் கழக அலுவலத்தில் நாளை நடக்க இருக்கிறது. 'சசிகலா முதல்வர் ஆவதற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்துவிட்டார் என மன்னார்குடி உறவுகள் தகவல் பரப்புகின்றனர். ஆனால், களநிலவரம் சசிகலாவுக்கு சாதகமாக இல்லை. எம்.எல்.ஏக்கள் தன்பக்கம்தான் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்குத்தான் கூட்டம் கூடுகிறது' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக பதவியேற்ற சசிகலாவால், முதல்வர் நாற்காலியை எட்டிப் பிடிக்க முடியவில்லை. 'பொங்கலுக்குள் முதல்வர் ஆவார்; பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டார்' என மூன்று முறை கூறி வந்த மன்னார்குடி உறவுகள், கடந்த சில வாரங்களாக மௌனம் சாதித்தனர். தற்போது மீண்டும் முதல்வர் முழக்கம் தொடங்கிவிட்டது. "கட்சி வட்டாரத்திற்குள் ஆதரவு அலைகளைப் பெருக்குவதற்காக செங்கோட்டையன் உள்பட 23 பேருக்கு கட்சிப் பதவிகளை வாரி இறைத்தார் சசிகலா. ஆட்சி அதிகாரத்தில் ஓ.பி.எஸ் ஆதரவு மனநிலையில் இருக்கும் அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனை, நேற்று பதவியில் இருந்து விலகச் சொல்லிவிட்டனர். சட்டசபையில் துரைமுருகன் பேசும்போது, 'ஐந்து ஆண்டுகாலமும் நீங்களே ஆட்சியில் தொடர வேண்டும். நாங்கள் ஆதரிப்போம். உங்கள் பின்னால் உள்ள சக்தியைப் பார்த்துக் கொள்ளுங்கள்' என முதல்வருக்கு ஆதரவாக, பகிரங்கமாக பேசியதை கார்டன் தரப்பில் அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள். அதன் ஒருபகுதியாகத்தான் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் சசிகலா. 'கட்சியும் ஆட்சியும் எங்கள் பக்கம்தான்' என்பதை வெளி உலகிற்குக் காட்ட முற்படுகிறார் சசிகலா" என விவரித்தார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். "ஆளுநர் சென்னையிலேயே இல்லை. அதற்குள் பதவியேற்பு விழா வரையில் பேசுகின்றனர். கடந்த சில வாரங்களாக, நடராசன் மீதான லெச்சஸ் கார் இறக்குமதி மோசடி வழக்கு, சசிகலா மீதான அமலாக்கத்துறையின் வழக்கு ஆகியவற்றில் மத்திய அரசு வேகத்தைக் கூட்ட ஆரம்பித்துவிட்டது. சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கி சசிகலா காத்திருக்கிறார். ஊழல் வழக்கில் தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கும் ஒருவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வாய்ப்பில்லை. 'பா.ஜ.க ஆட்சியில் இருந்து அகன்றால்தான், முதல்வர் பதவியில் அமர முடியும்' என மன்னார்குடி உறவுகள் நம்புகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் 2019 வரையில் சசிகலா தரப்பினர் காத்திருக்க வேண்டும். சசிகலாவை முதல்வர் பதவியில் அமர வைப்பதால், மத்திய அரசுக்கு எந்தவித லாபமும் இல்லை. 'ஜல்லிக்கட்டில் பன்னீர்செல்வம் நல்ல பெயர் எடுக்க வேண்டும்' என்பதற்காகத்தான், மத்திய அரசு சட்ட உதவிகள் செய்தது. பிரதமரை சந்திப்பதற்கு டெல்லி செல்வதற்கு முன்பாக, ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துவிட்டுச் சென்றார் ஓ.பி.எஸ். அந்தநேரம் கார்டன் சென்று சசிகலாவை அவர் சந்திக்கவில்லை. அந்தளவுக்கு ஓ.பி.எஸ்ஸுக்கும் ஆளுநருக்கும் நல்ல உறவு இருக்கிறது. 'மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வராகவும் ஜெயலலிதா அடையாளம் காட்டிய ஒருவராகவும் நீங்கள் இருக்கிறீர்கள். ராஜினாமா நெருக்கடி ஏற்பட்டால், நம்பிக்கை ஓட்டெடுப்புக்குச் செல்லுங்கள். நீங்கள் தோற்றாலும், சட்டசபையில் இரண்டாவது பெரிய கட்சியான தி.மு.கவுக்குத்தான் வாய்ப்பு கொடுப்பேன்' என முதல்வரிடம் ஆளுநர் தெளிவாகக் கூறிவிட்டார். அ.தி.மு.கவில் இரட்டைத் தலைமை நீடிப்பது போன்ற தோற்றம் தென்படுகிறது. அதைச் சரிக்கட்டுவதற்கான வேலையில் சசிகலா இறங்கியிருக்கிறார். அவரது முயற்சிகளுக்கு மத்திய அரசு ஆதரவு கொடுக்கவில்லை. மக்கள் மத்தியில் நம்பிக்கையைப் பெற்றவராக ஓ.பி.எஸ்ஸும் தீபாவும் இருக்கின்றனர். அதையொட்டியே அரசியல் நகர்வுகளை பா.ஜ.க முன்னெடுக்கிறது. ஆளுநர் சம்மதம் தெரிவிப்பாரா? நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு உத்தரவிடுவாரா என்பதும் மிக முக்கியமான கேள்விகள்" என்கிறார் பா.ஜ.க நிர்வாகி ஒருவர். "பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட விவகாரம் குறித்து, தேர்தல் ஆணையத்தின் வசம் சில புகார்கள் சென்றுள்ளன. ஆணையத்தை சரிக்கட்ட நினைத்த, அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு தோல்வியே மிஞ்சியது. ஓ.பி.எஸ்ஸை ஓரம்கட்ட நினைத்த தம்பிதுரை, மத்திய அரசால் ஒதுக்கப்பட்டார். பா.ஜ.க தலைமையின் நம்பிக்கைக்குரியவராக ஓ.பி.எஸ் இருக்கிறார். அமித் ஷா, வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோர் முதல்வருடன் தொடர்பில் இருக்கின்றனர். அனைத்து அரசியல் கட்சிகளையும் அரவணைத்துச் செல்கிறார் ஓ.பி.எஸ். அவருக்காகத்தான் மத்திய அரசு பலவகையிலும் இறங்கி வந்திருக்கிறது. பிரதமரின் நம்பிக்கையைப் பெற்றவர், அவருக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்வாரா என்பது மிக முக்கியமானது. ' பதவியை ராஜினாமா செய்தால், பல பிரச்னைகள் வரும்' என சசிகலாவிடம் நேரடியாகவே சொல்லிவிட்டார் ஓ.பி.எஸ். இதையும் தாண்டி, 'முதல்வர் பதவியைக் கைப்பற்றியே தீருவது' என மன்னார்குடி உறவுகள் களமிறங்கினால், அடுத்தடுத்த அதிரடிகளுக்கு மத்திய அரசு தயாராகவே இருக்கிறது" என்கின்றனர் தமிழக பா.ஜ.க நிர்வாகிகள். "சசிகலாவின் ஜாதகப்படி, 'ராஜயோக பிராப்தி உச்சத்தில் இருக்கிறது. இந்த வாய்ப்பை நழுவவிட்டுவிட்டால், மீண்டும் பதவியில் அமர்வது சிரமம் ஆகிவிடும்' என கார்டன் ஜோதிடர்கள் கணித்துக் கொடுத்துள்ளனர். இவ்வாறு கணித்துக் கொடுப்பது மூன்றாவது முறை. கோட்டை நாற்காலியில் அமர்வதற்கு நல்ல நாள் குறித்தாலும், ராஜயோகம் தள்ளிக் கொண்டே போகிறது. மத்திய அரசின் கவனத்திற்கு சில உறுதிமொழிகளைக் கொடுத்திருக்கின்றனர் மன்னார்குடி உறவுகள். 'ஒட்டுமொத்த எம்.எல்.ஏக்களும் சசிகலா பக்கம் இருக்கிறார்கள். அவரை முதல்வராக பதவியில் அமர வையுங்கள்' என ஆளுநர் அலுவலகத்திற்கு ஓ.பி.எஸ்ஸே சென்றாலும் ஆச்சரியம் இல்லை. எம்.எல்.ஏக்கள் கூடி, 'சசிகலா முதல்வர்' என தீர்மானம் போட்டுவிட்டால், ஆளுநர் அதை ஏற்கத்தான் வேண்டும். ஜனநாயகரீதியிலான நடைமுறைக்கு ஆளுநர் மறுப்பு தெரிவிக்க மாட்டார். அவர் எப்போது சென்னை வருகிறாரோ அப்போது பதவிப் பிரமாணம் நடக்கும். இந்தமுறை கட்டாயம் பதவியில் அமர்வார் சசிகலா' என்கின்றனர் கார்டன் தரப்பில். 'தற்காலிக அ.தி.மு.க பொதுச் செயலாளர்; சட்டசபையில் பலம் பெற்றுவிட்ட பன்னீர்செல்வம்; மிரட்டும் வழக்குகள்; தீபாவின் வருகை' என பலமுனைத் தாக்குதலில் இருக்கிறார் சசிகலா. 'எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் ஆவது பற்றிப் பேசுவாரா? மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசிப்பாரா' என விவாதித்துக் கொண்டிருக்கின்றனர் ஆளும்கட்சி பிரமுகர்கள்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img