சரியான நேரத்தில் நாம் எடுக்கும் சரியான முடிவே ஒரு சரியான பாதைக்கு நம்மை இட்டுச்செல்லும் என்றால் அது தவறாகாது. அவ்வாறு ஒரு நிமிட நேரத்தில் தாம் எடுத்த ஒரு முடிவால் தம் வாழ்க்கையை மாற்றிக்கொள்வதில் வெற்றி கண்டுள்ளார் ஜெயலதா கணேசன்.
ஜெயலதாவுக்கு இப்போது 44 வயது. நாட்டின் பிரபலமான நிறுவனமொன்றில் விற்பனை, சந்தை ஆய்வு இயக்குநராக பதவியில் அமர்ந்துள்ளார். மலேசியாவில் உள்ள, விருது பெறும் வெளிப்புற தளவாட விற்பனை நிறுவனத்தில் ஏழாண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். அதன் பிறகு, மூன்று பதவி உயர்வு பெற்று இன்று இயக்குநர் பொறுப்பில் அமர்ந்துள்ளார்.
அந்நிறுவனத்தின் விற்பனை பிரிவில் எண்மர் கொண்ட குழுவை ஜெயலதா வழி நடத்துகிறார். நிறுவனத்திற்கான தேவையான பொருள்களை வாங்கு வதும் நிறுவனத்தின் சார்பில் மாநாடுகளில் கலந்து கொள்வது தொடர்பில் இத்தாலி, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் இவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.ஆனால், இன்று அவர் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறார் என்றால் ஒரு கரடு முரடான பாதையைக் கடந்தே அவர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலாலம்பூரில் பிறந்த இவர் மூன்று மகள்களைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையாவார். பிறந்த வீட்டில் செல்ல மகளாக வளர்ந்தாலும் புகுந்த வீட்டில் நிலைமை அப்படி அமையவில்லை. மூன்றாண்டுகள் கணவரின் கொடுமைகளைத் தாங்கிக்கொண்ட ஜெயலதா, ஒரு நாள் தம் வாழ்க்கையை மாற்றக்கூடிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.
ஒரு நாள் நான் கடுமையாகத் தாக்கப்பட்டேன். என தலையே சுற்றியது. தலை வீங்கிப்போயிருந்தது. தரையில் மயங்கிக்கிடந்தேன். நான் கண் விழித்ததும் இரண்டே எண்ணங்கள்தான் தோன்றியது. ஒன்று, தரையில் அப்படியே கிடப்பது அல்லது அந்த வீட்டை விட்டு வெளியேறுவது.
என்னை அடித்துப்போட்ட கணவர் வீட்டிற்கு திரும்பும் முன் நான் அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று தீர்மானித்தேன். பிறகு, என் நண்பரை அழைத்து, அவரின் உதவியோடு உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறினேன் என்று ஜெயலதா தமது கடந்த காலத்தை பற்றி விவரித்தார். விவாகரத்து பெற்ற இவர் தன் பெற்றோருடன் தங்கினார். கயிறு அறுந்த பட்டம் போல இவரின் வாழ்க்கை திக்கற்ற திசையில் சென்ற போது, மீண்டும் தம் வாழ்க்கையில் திருப்பம் தேவை என்பதை உணர்ந்து, செயலில் இறங்கினார்.
குறைந்தது 100 நிறுவனங்களுக்கு நான் வேலைக்கு விண்ணப்பம் செய்திருப்பேன். அப்போதுதான் இந்த பிரபலமான தளவாட நிறுவனத்தில் வேலை கிடைத்தது. என் கடுமையான உழைப்பு என்னை இன்று இந்த நிலைமைக்கு உயர்த்தி விட்டிருக்கிறது என்று ஜெயலதா பெருமையுடன் கூறுகிறார்.
நிறுவனத்தில் வெறும் பணியாளராக மட்டும் இல்லாமல் அதன் வளர்ச்சிக்காக உழைத்தேன்.
தேவையான மாற்றங்களைக் கொண்டு வந்தேன். என் வாடிக்கையாளர்கள் பலரும் இன்று என் நண்பர்களாக இருக்கின்றனர். இந்த வேலையில் தொட்ட தெல்லாம் நடந்து விடும் என்று சொல்லிவிட முடியாது. பெரும்பாலான நேரங்களில் ஏமாற்றம்தான் மிஞ்சும். 100 வாடிக்கையாளர்களை சந்திக்கும் இடத்தில் ஏதோ ஐந்து பேரை மட்டும்தான் நம்மால் வெற்றிகரமாகப் பேசி முடிக்க முடியும்.
இன்று இந்த துறையில் நான் சாதித்துள்ள வெற்றியானது பல வகைகளில் மற்றவர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது. என் வாழ்க்கையில் நான் பட்ட துன்பங்களையும் கஷ்டங்களையும் அறிந்த நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் இன்று என்னை பெருமையாகப் பார்க்கின்றனர்.
ஒரு சமச்சீரான வாழ்க்கையை அடைவதற்கு ஒரு பெண்ணுக்கு என்ன தேவை? திருமணம், வேலை, பிள்ளைகள், கணவரின் குடும்பத்தினர் முதல் பொருளாதார தேவைகள் வரை பெண்கள் அனைத்தையும் சமாளிப்பதற்கு போராட்டம் நிறைந்த வாழ்க்கையையே நடத்தி வருகின்றனர் என்பதை என் நண்பர்களை பார்த்து தெரிந்து கொள்கிறேன்.
எதற்கும் ஓர் அளவு உண்டு என்றே நான் நினைக்கிறேன். மூச்சு முட்டும் அளவிற்கு நிலைமை மோசமானால் அங்குதான் பிரேக் போட வேண்டிய நிலை ஏற்படுகிறது. பெண்களை பொறுத்த வரையில், அவர்கள் திருமணம் ஆகாதவர்களாக இருந்தால் வாழ்வில் ஒரு லட்சியத்தைக் கொண்டிருக்க வேண்டும். திருமணமானவர்களாக இருந்தால் அவர்களுக்கு ஆதரவு தரும் கணவர் அமைந்திருக்க வேண்டும்.
இளம் பெண்களுக்கு நான் கூற விரும்புவது இதுதான், வாழ்க்கையில் எந்தச் சூழலிலும் முக்கியமான முடிவுகளை எடுப்பதில் அவர்கள் வலிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் எடுக்கக்கூடிய இந்த முடிவுதான் உங்கள் வாழ்க்கைப் பாதையை மாற்றும். உங்கள் முடிவு உங்கள் தலைவிதியை மாற்றும். ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து முடிவெடுத்து செயல்படுங்கள் என்கிறார் ஜெயலதா கணேசன்.
உண்மையில் அழகு என்பது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது”
மேலும்ஒரு சரியான பாதைக்கு நம்மை இட்டுச்செல்லும்
மேலும்உலகம் முழுவது மிருந்து பல நாடுகளைச் சேர்ந்த
மேலும்குடும்ப பெண்கள் சமய தொண்டு ஆற்றினாலும்
மேலும்அழகியல் கலையில் வினோதினிக்குச் சிறு வயதிலிருந்தே ஆர்வம்
மேலும்