கருணாநிதி
அப்படி யாரோ நினைக்கும்போது, தன் தந்தைக்காக விஜயகாந்த் அழுததையும், அஞ்சலி செலுத்தியதையும் ஸ்டாலினும் நன்றாகவே அறிவார். ஆனால் இவ்வளவு நாள் இல்லாமல் இன்று எதற்காக சாலிகிராமம் சென்று விஜயகாந்த்தை சந்திக்க வேண்டும்? கருணாநிதிக்காக விஜயகாந்த் அழுதது இப்போதுதான் ஸ்டாலினுக்கு தெரியவந்ததா? அல்லது உடல்நலன் விசாரிக்க வந்தேன் என்று ஊர் திரும்பி 4 நாள் கழித்துதான் கேட்க தோன்றியதா? என தெரியவில்லை.
அமெரிக்கா
இத்தனைக்கும் விஜயகாந்த் நீண்ட நாள் நெருங்கிய நண்பர் என்று சொல்கிறார். நெருங்கிய நண்பராக இருந்திருந்தால், ஒவ்வொரு முறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும்போதும், அல்லது அமெரிக்காவிலிருந்து திரும்பியபோதும் இதுவரை ஒருமுறைகூட சென்றதில்லையே ஏன்?
இவ்வளவு நாளா?
இதேதான் ரஜினியும். அதிமுக-பாஜக மேல் உள்ள விசுவாசத்தை காட்ட இந்த சந்திப்பை பயன்படுத்தி கொண்டார். அரசியலாவது இவர்கள் இருவருக்கும் இப்போது உள்ளது. ஆனால் அந்த காலத்தில் இருந்தே இருவரும் சினிமாவில் ஒன்றாக இருந்தவர்கள். ஒரே துறையை சார்ந்த்வர் என்ற எண்ணம்கூட இவ்வளவு நாள் ரஜினிக்கு இல்லையே ஏன்?
ஏன் விசாரிக்கவில்லை
கடந்த முறை சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய சமயத்தில், ஒருவர்கூட வந்து விஜயகாந்த் உடல்நிலை குறித்து விசாரிக்கவில்லையே என்று அவரது குடும்பத்தாரே வருத்தப்பட்டதாக கூறப்பட்டது. மக்கள் நலக்கூட்டணி அமைய எத்தனை முறை அந்த தலைவர்கள் இந்த சாலிகிராம் வீட்டுக்கு நடையாய் நடந்திருப்பார்கள், ஒருவர்கூட எட்டிப் பார்க்கவில்லையே என்று பிரேமலதா ஆதங்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
சபாஷ்
அப்படி இருக்கும்போது இந்த முறை விஜயகாந்த் வீட்டுக்கு தலைவர்கள் சென்று சந்தித்ததில் சந்தர்ப்பவாத அரசியலை தவிர வேறு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்த விஷயத்தில் திருநாவுக்கரசரை பாராட்டலாம். எதற்காக விஜயகாந்த்தை சந்தித்தீர்கள் என்று கேட்டதற்கு, "தேர்தல் நேரத்தில் சந்திக்கும்போது அரசியல் குறித்து பேசாமல் இருக்க முடியுமா? அரசியல் ரீதியாக பேசினோம். நாட்டு நலனுக்கேற்ற வகையில் நல்ல முடிவு எடுக்க வேண்டுமென விஜயகாந்த்திடம் வலியுறுத்தினேன்" என்று பளிச்சென உண்மையை சொன்னதற்கு ஒரு சபாஷ் போடலாம்.
அமித்ஷா, ஸ்டாலின்
கூட்டணி விஷயம்தான் பேசவந்தோம் என்பதைகூட பகிரங்கமாக சொல்லிக் கொள்ள முடியாத தலைவர்களாக அமித்ஷா முதல், ரஜினி, ஸ்டாலின் வரை உள்ளது தமிழகத்துக்கு ஆச்சரியமாக உள்ளது. இதில் விஜயகாந்த்தின் உடல்நலனை கொண்டு வந்து முன்னிறுத்தி பேசுவது அதைவிட மோசமாக உள்ளது!