அ.தி.மு.க - பா.ம.க - பா.ஜ.க கூட்டணி உடன்பாடு கையெழுத்தாகிவிட்ட நிலையில், தே.மு.தி.க-வை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. `எல்லோரும் ராஜ்யசபா சீட்டைக் கேட்டால் எங்கே போவது?’ என விஜயகாந்த் தரப்பினரிடம் ஆதங்கத்தைக் கொட்டியுள்ளனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.
சென்னை, நந்தனத்தில் உள்ள கிரௌன் பிளாசா ஹோட்டலில் நேற்று காலை அ.தி.மு.க, பா.ம.க இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. 7 ப்ளஸ் 1 என்ற அளவில் அ.தி.மு.க கூட்டணியில் இணைந்ததாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ராமதாஸ்.
இதன் பிறகு 11.30 மணியளவில் டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்தார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். மதியம் 4 மணியளவில் அ.தி.மு.க அணியில் 5 சீட்டுகளுக்கு பா.ஜ.க தலைவர்கள் சம்மதம் தெரிவித்தனர். தொடக்கத்தில் இரட்டை இலக்கத்தில் சீட்டுகளைப் பெற விரும்பிய பா.ஜ.க-வுக்கு, அ.தி.மு.க தலைவர்கள் பிடிகொடுக்கவில்லை. `உங்களுக்குச் செல்வாக்குள்ள தொகுதிகளை ஒதுக்குகிறோம்’ எனக் கூறி, 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கினர்.
இந்த அளவுகோலை தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் எதிர்பார்க்கவில்லை. இதன் பிறகு, `தே.மு.தி.க-வோடு கூட்டணி உடன்பாடு ஏற்படும்' எனக் காத்திருந்தார் பியூஷ் கோயல். பேச்சுவார்த்தையில் தே.மு.தி.க-வின் பிடிவாதம் குறித்து பா.ஜ.க தலைவர்களிடம் எடுத்துக் கூறியுள்ளனர் அ.தி.மு.க நிர்வாகிகள். இதையடுத்து, விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த்தின் வீட்டுக்குச் சென்றார் பியூஷ்.
இந்தச் சந்திப்பு குறித்துப் பேட்டியளித்தவர், அரசியல் மட்டுமன்றி திரை உலகிலும் முக்கிய அங்கம் வகித்தவர் என் நண்பர் விஜயகாந்த். அவர் உடல்நலக்குறைவு காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரை சந்தித்து நலம் விசாரித்தேன். அவர் வேகமாக உடல்நலம் தேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல ஆயுளோடும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்று பிரதமர், தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கவந்தேன். எல்லாவற்றையும் அரசியலாகப் பார்க்கக் கூடாது. மனிதாபிமானம் மற்றும் அக்கறை உணர்வுடன் மட்டுமே விஜயகாந்த்தை சந்தித்து உடல்நலம் விசாரித்தேன். வேறு ஒன்றும் கிடையாது’’ எனக் கூறினார்.
``வேறு ஒன்றும் கிடையாது என பியூஷ் கோயல் வலியுறுத்திச் சொன்னாலும், கூட்டணி விஷயத்தில் தே.மு.தி.க நடந்துகொள்ளும் முறையால் கொந்தளிப்பில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி’’ என விவரித்த அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர்,``கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கிய கால கட்டத்தில், பா.ம.க-வுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பின் தூதுவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
பா.ம.க முன்வைத்த அனைத்து டிமாண்டுகளையும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார். ஆனால், ஆரம்பத்திலிருந்தே எங்களோடு நல்ல அணுகு முறையில் தே.மு.தி.க இல்லை. கூட்டணி தொடர்பாக சுதீஷ் கொடுத்த பேட்டியிலும்,``நாங்கள் பா.ஜ.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டி ருக்கிறோம்’’ என்றார். அ.தி.மு.க என்ற பெயரைக் குறிப்பிடாமல் பா.ஜ.க-வை மட்டும் அவர் அழுத்திச் சொன்னதை எடப்பாடி பழனிசாமி ரசிக்கவில்லை. `தேசியக் கட்சியான பா.ஜ.க-வுக்கே எத்தனை சீட் என்பதை நாங்கள்தான் முடிவு செய்கிறோம். இவர்கள் டெல்லியில் பேசும் அளவுக்கு அவ்வளவு பெரி யவர்களா?’ என முதல்வர் தரப்பு கோபத்தைக் காட்டியது. இருப்பினும், டெல்லியின் விருப்பத்துக்கேற்க தே.மு.தி.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி னோம்.
இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், ``பாட்டாளி மக்கள் கட்சிக்கு எவ்வளவு இடங்களை ஒதுக்குகிறீர்களோ, அதே அளவு இடங்களை எங்களுக்கும் ஒதுக்க வேண்டும். கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அணியில் 14 இடங்களில் போட்டியிட்டோம். இந்தமுறை இரட்டை இலக்கத்தில் போட்டியிடலாம் என நினைக்கிறோம்’’ எனக் கூற, ``அவ்வளவு இடங்களை ஒதுக்க முடியாது. 3 சீட்டுகளை ஒதுக்க லாம்’’ என அ.தி.மு.க தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதை சுதீஷ் விரும்பவில்லை. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், ``பா.ம.க-வுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை ஒதுக்கியிருக்கிறீர்கள். எங்களுக்கும் ஓர் இடத்தைக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு என்ன கொடுக்கப்படுகிறதோ, அதே அளவு எங்களுக்கும் வேண்டும்’ எனக் கூற, `எல்லோரும் ராஜ்யசபா சீட்டைக் கேட்டால், நாங்கள் எங்கே போவது?’’ என முதல்வர் தரப்பினர் ஆதங்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இந்தமுறை தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த்தால் முன்புபோல பிரசாரம் செய்ய முடியாது என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.
இறுதியில், விஜயகாந்த்துக்கு ராசியான எண்ணாக இருக்கும் 5 என்ற அளவில் சீட்டுகளை ஒதுக்குவதற்கும் அ.தி.மு.க தலைமை முன்வந்துள்ளது. இதில், இழுபறி நீடிப்பதால்தான் நேற்று விஜயகாந்த் வீட்டுக்கே சென்று பேசினார் பியூஷ் கோயல். இன்னும் ஓரிரு நாள்களுக்குள் தே.மு.தி.க முடிவு என்ன என்பது தெரிந்துவிடும்’’ என்றார் உறுதியாக.
கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்து நம்மிடம் பேசிய தே.மு.தி.க நிர்வாகிகள் சிலர்,``ஜெயலலிதாவின் கடந்த ஆட்சிக்காலத்தில் கடுமையான துன்பங்களை எதிர்கொண்டோம். எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது ஏராளமான வழக்குகள் போடப்பட்டன. அவர்களுக்கு (அ.தி.மு.க) எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறோம்.
இப்போது அவர்களுடன் கூட்டணி வைத்தால் மக்கள் மத்தியிலும் கட்சிக்காரர்கள் மத்தியிலும் வெறுப்பு தோன்றிவிடும் என நினைக்கிறார் பிரேமலதா. அதனால்தான், `பா.ஜ.க-வோடு பேசி வருகிறோம்’ எனப் பேட்டி அளித்தார் சுதீஷ். தேர்தல் செலவுகள், கட்சி எதிர்காலம் ஆகியவற்றையெல்லாம் கணக்கில் வைத்துக் கொண்டுதான் தே.மு.தி.க தலைமை முடிவெடுக்கிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில், `மோடி பிரதமர்' எனப் பிரசாரக் கூட்டங்களில் பேசிய முதல் தமிழகத் தலைவர் விஜயகாந்த்தான். அதனால்தான் பதவி யேற்பு விழா அன்று விஜயகாந்த் கன்னத்தைத் தட்டிக்கொடுத்தார் மோடி. இந்த முறையும் பா.ஜ.க-வோடு கூட்டணியில் இருக்கிறோம். எங்களுக்கு உரிய இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது?’’ என்றனர் அழுத்தமாக.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்