டெல்லி:
சிபிஐக்கும் மத்திய அரசுக்கும் எதிராக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி செய்து வரும் போராட்டம் அவரை பிரதமர் மோடிக்கு எதிரான தனிப்பெரும் தலைவராக மாற்றிக்கொண்டு இருக்கிறது. வரலாறு மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கிறது.. அந்த வரலாற்றை மறப்பது.. உங்கள் வீட்டு வாசலில் உங்களை தாக்க காத்திருக்கும் நரியை மறப்பது போன்றது!. மமதா பானர்ஜியின் தர்ணாவை பார்க்கும் போது, ''ஏ மோஸ்ட் வாண்டட் மேன்'' புத்தகத்தில் வரும் இந்த வரிதான் ஞாபகம் வருகிறது. ஆம், வரலாறு மீண்டும் ஒருமுறை நடக்க தொடங்கி இருக்கிறது. மீண்டும் ஒருமுறை மமதா பானர்ஜிக்கான நாட்கள் கைகூடி வந்து இருக்கிறது. 2006க்கு பின் மமதாவின் அரசியல் வாழ்க்கையை மாற்றிய அதே வரலாறு தற்போது மீண்டும் நடைபெற தொடங்கி இருக்கிறது.
1997ல்தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மமதா பானர்ஜியால் தொடங்கப்பட்டது. காங்கிரசில் இருந்து பிரிந்து கட்சியை தொடங்கிய அவர், அந்த கட்சியின் ஒரே ஒரு முகமாக இருந்தார். பலமுறை காங்கிரஸ் கட்சியோடுகூட்டணி வைத்து லோக்சபா தேர்தலை சந்தித்தது திரிணாமுல் காங்கிரஸ். ஆனால் மமதா பானர்ஜியை தவிர வேறு யாரும், பெரிதாக திரிணாமுல் கட்சியில் இருந்து வெற்றிபெறவில்லை.
அதேபோல் 1977ல் இருந்து 2006 வரை மேற்கு வங்கம் மாநிலத்திலும் கம்யூனிஸ்ட் கட்சி மிக வலுவாக ஆட்சி நடத்தி வந்தது. புத்ததேப் பட்டாச்சார்யா வலுவான ஆட்சியை 2006 தேர்தலில் வெற்றி பெற்று வழங்கி கொண்டு இருந்தார். மாநில தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெரிய அளவில் அதுவரை வெற்றியை சந்திக்கவில்லை. பெற்ற இடங்களை கூட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இழந்து வந்தது.
திரிணாமுல் காங்கிரஸ் காணாமல் போய்விடும் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் தன்னுடைய நேரத்திற்க்காக காத்துக் கொண்டு இருந்தார் மமதா. அப்போதுதான் அந்த சரியான திருப்பம் வந்தது. நாம் ஒன்றை விரும்பினால்.. உண்மையாக அது நடக்கும் என்று நம்பினால்.. உலகத்தில் உள்ள ஒவ்வொரு அணுவும் நமக்காக உதவும் என்பார்கள்.. அப்படித்தான் மமதாவிற்கான காலம் அதுவாக கனிந்து வந்தது. மேற்கு வங்கத்தில் டாட்டா நிறுவனம் தனது நானோ கார் உற்பத்தியை தொடங்க ஒப்பந்தம் செய்தது.
கடந்த 2006ல் மேற்கு வங்கத்தின் சிங்குரில் டாட்டா நிறுவனம் நானோ தொழிற்சாலை அமைப்பதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. இதனால் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் வாங்கப்பட்ட இருந்தது. இதற்கு எதிராக விவசாயிகள் கொதித்து எழுந்தனர். இதை கட்டுப்படுத்த முடியாமல் கம்யூனிஸ்ட் அரசு திணறியது. பெரிய போராட்டங்கள் தொடங்கியது.
அதுதான் மமதாவின் அந்த நேரம்! விவசாயிகளோடு தெருவிற்கு வந்து போராட்டத்தில் குதித்தார் மமதா. அதுவரை அவரை பல கிராம மக்களுக்கு தெரியாது. ஆனால் போராட்டத்திற்கு பின் அவர் விவசாயிகளின் குரலானார். அந்த நொடியே தீதி என்று மக்களால் அவர் அன்போடு அழைக்கப்பட தொடங்கினார். டாட்டா நிறுவனம் மேற்கு வங்கத்தை விட்டு வெளியே செல்லும் வரை போராடுவேன் என்று உறுதியாக நின்றார்.
போராட்டம் என்றால் சாதாரண போராட்டம் கிடையாது. 26 நாட்கள்.. தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்தார். ஒவ்வொரு நாள் விரதமும் அவரை அரியணை நோக்கி நகர்த்தியது. டாட்டாவிற்கு எதிராக அவர் 26 நாட்கள் உண்ணாவிரம் இருந்தார். அது அவர் அரசியல் வாழ்க்கையில் பெரிய திருப்பமாக அமைந்தது.
மேற்கு வங்கம் மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க இவரின் உண்ணாவிரம் வைரல் ஆனது. தீதி உண்ணாவிரம் இருக்கிறார், நாள் 1..நாள் 10.. நாள் 20 என்று நாட்கள் நீண்டு கொண்டே சென்றது. டாட்டா நிறுவனம் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியது. மாநில அரசும் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் விழிபிதுங்கியது.
அந்த போராட்டம் கடைசியில் வெற்றியில் முடிந்தது. டாட்டா நிறுவனம் ''உங்கள் நிலமே வேண்டாம்'' என்றுவிட்டு ஊரைவிட்டு சென்றது. மோடியின் ஆதரவுடன் கடைசியில் தனது தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை குஜராத்திற்கு மாற்றியது டாட்டா. அப்போது மமதாவிற்கு குவிந்த விவசாயிகளின் ஆதரவுதான் இப்போதும் அவரை பெரிய தலைவராக வைத்து இருக்கிறது.
அடுத்த தேர்தல் நடக்க அம்மாநில மக்கள் 5 வருடம் காத்து இருந்தனர். மமதாவும் அந்த தேர்தலுக்காக 5 வருடம் காத்திருந்தார். 2011 மேற்கு வங்க சட்டசபை தேர்தல் வந்தது. வந்தோர், போனோர் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு மமதாவிற்கு வாக்களித்தனர். அந்த போராட்டம் மமதாவை வங்கத்தின் முதல் பெண் முதல்வராக்கியது! அந்த போராட்டம் நடந்த இடம் கொல்கத்தா மெட்ரோ சேனல் பகுதி.
கொல்கத்தா மெட்ரோ சேனல் பகுதியில்தான் அப்போது மமதா 26 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். தற்போது அதே இடத்தில்தான் தர்ணாவை தொடங்கி இருக்கிறார் மமதா. அதே இடத்தில் உண்ணாவிரதத்திற்கு பதில் தர்ணாவை தொடங்கி உள்ளார். ஆனால் தற்போது அவர் எதிர்ப்பது மத்திய அரசை! ஒரு கொல்கத்தா கமிஷ்னருக்காக அவர் இவ்வளவு இறங்கி போராடுகிறாரா? என்றால இல்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
ஆம் அவரின் கணக்கு வேறு!. பிரதமர் மோடிக்கு எதிராக தன்னை நிலையாக நிறுத்திக் கொள்ள, எதிர்க்கட்சிகளின் தலைவியாக தன்னை காட்டிக்கொள்ள, இந்தியா முழுக்க தன்னை தனி தலைவராக கட்டிக்கொள்ளவே இந்த போராட்டம். மோடியின் காலம் முடிந்துவிட்டது என்று மமதா அறைகூவல் விடுத்தற்கும் இதுதான் காரணம் என்கிறார்கள். வங்கத்தை தொட்டால் என்ன நடக்கும் என்பதை காட்டுகிறேன் என்று மமதா கூறியதற்கு இதுதான் காரணம்.
முதலில் சொன்ன வரிகள் போல.. வரலாறு மீண்டும் நடந்தேறுகிறது.. ஆம் வரலாறு மீண்டும் ஒருமுறை மமதாவிற்கு கனிந்து இருக்கிறது. 2006ல் டாட்டா மூலம் வந்த வாய்ப்பு 2019ல் சிபிஐ மூலம் வந்து இருக்கிறது. அந்த தர்ணா அவரை முதல்வராக்கியது.. இந்த தர்ணா அவரை பிரதமர் ஆக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கக் வேண்டும்!
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்