அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகக் கடுஞ்சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (1911-2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள சூடகொண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நித்திஷ் – சுவாதி ஆகிய இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதால் சாதிய ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கிறது.
சாதியத்தினையும், அதன் விளைவாக நடந்தேறும் இதுபோன்ற கொடூரச்செயல்களையும், வன்முறை வெறியாட்டங்களையும் எதன்பொருட்டும் ஏற்க முடியாது. இவையாவும் அரசாங்கத்தினால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டிய பெருங்கொடுமைகள். இதனைச் சகித்துக் கொள்வது என்பது மனிதத்தன்மையே அற்றக் கொடுஞ்செயல்.
சாதி என்பது சமூகத்தில் புரையோடிப் போகியிருக்கிற கொடிய நஞ்சு; மனிதனின் ஆழ் மனதில் படிந்திருக்கிற பெரும் அழுக்கு. நம்மைப் போல நாடி, நரம்பு, இரத்தம், சதை, உறக்கம், கனவு, பசி என எல்லாவற்றையும் கொண்டிருக்கிற சக மனிதனைச் சாதியின் பெயரால் பிளவுப்படுத்துவதும், பாகுபடுத்தித் தீண்டாமை கொடுமைக்குள் தள்ளுவதுமான செயல்கள் யாவும் மனிதனைப் பிடித்திருக்கிற மனநோய்.
அம்மனநோயை சிந்தையிலிருந்தே அகற்றி சாதிய உணர்வற்றத் தமிழ் தலைமுறையை வளர்த்தெடுக்க வேண்டியது தமிழர் ஒவ்வொருவருக்குமான சமூகப் பெருங்கடமை. தமிழ்ச்சமூகத்தைப் பிளந்து பிரித்தாளுவதற்கு வசதியாக இடைக்காலத்தில் பார்ப்பனீயம் உட்புகுத்தியச் சூழ்ச்சியே சாதி. அதனை அடிப்படையாகக் கொண்டு சக மனிதனை அடிமைப்படுத்துவதும், அவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு கொலை செய்வதுமான இக்கொ டூரங்கள் யாவும் வன்மையானக் கண்டனத்திற்குரியது.
நாகரீகமும், விஞ்ஞானமும் வளர்ந்து நிற்கிற இருப்பத்தோராம் நூற்றாண்டில் நடந்தேறும் ஆணவக்கொலைகளும், சாதிய வெறியாட்டங்களும் வெட்கித் தலைகுனிய வைக்கின்றன. இச்சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும், சாதியக் கருத்தாக்கத்திற்கு எதிராகவும் களப்பணியும், கருத்தியல் பணியும் ஆற்ற வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தத் தருணமிது.
மனமொத்த ஒரு ஆணும், பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு வாழ்வதற்கு அவர்களுக்கு முழு உரிமையிருக்கிறது. அதில் பிறிதொருவர் தலையிடுவதற்கோ, அத்துமீறி அதிகாரம் செய்வதற்கோ எவ்வித உரிமையுமில்லை. அறவுணர்ச்சியும், சட்டதிட்டங்கள் இரண்டுமே இதனைத்தான் கூறுகின்றன. நமது பாட்டன் சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் அவர்கள் சாதியினைத் துடைத்தெறிவதற்கு இருக்கிற பெரும் வாய்ப்பாக சாதி மறுப்புத் திருமணங்களைத்தான் குறிப்பிடுகிறார்.
சாதியை மறுத்து நிகழும் இவ்வகைத் திருமணங்கள் யாவும் வரவேற்கத்தக்கவை. அவற்றை கலப்புத் திருமணங்கள் என்பதே அபத்தமானது. அவை சாதி மறுப்புத் திருமணங்கள் அவ்வளவே.சாதி மறுப்புத் திருமணங்கள் செய்வதாலேயே ஆணவக் கொலை செய்யும் போக்கு அண்மைக்காலத்தில் அதிகமாகி வருவது பெரும் வேதனையளிக்கிறது. திருப்பூரில் பட்டப்பகலில் தம்பி உடுமலைப்பேட்டை சங்கர், சேலம் ஓமலூரைச் சேர்ந்தத் தம்பி கோகுல்ராஜ் எனத் தொடரும் இக்கொலைகள் யாவும் இச்சமூகத்தின் நல்லிணக்கத்தையும், மனித உணர்வையும் அடியோடு கொன்று மிருகத்தன்மையை வளர்க்கும் பெருந்தீங்குகளாகும்.
அதனைப் போல, தற்போது நித்தீஷ் – சுவாதி இணையர் இருவரும் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டு இருக்கின்றனர். சேலத்தில் தங்கை இராஜலட்சுமி சாதியத்தால் கொலை செய்யப்பட்ட சோகத்தின் வடுக்களே ஆறாதநிலையில் நிகழ்ந்திருக்கும் இப்படுகொலை பெரும் மனவலியினைத் தருகிறது.
ஆணும், ஆணும், பெண்ணும், பெண்ணும் திருமணம் செய்துகொள்ளும் ஓரினச்சேர்க்கை முறையினையே மேலை நாடுகள் அங்கீகரித்துக் கொண்டி ருக்கையில், இயல்பாக நிகழ்ந்தேறும் காதல் திருமணங்களை இங்கு சாதியத்தின் பெயரால் முறித்துவிடுவதும், கொலைசெய்வதுமானச் செயல்கள் தமிழ்ச்சமூகத்தைப் பல நூற்றாண்டுகள் பின்நோக்கி இழுத்துச் செல்கின்றன.
சாதிய உணர்வினையும், சாதிய வன்முறை வெறிச்செயல்களையும் அழித்தொழிக்க பலத் தளங்களிலும் களப்பணியாற்றுவதே அதனை முழுமையாக இச்சமூகத்திலிருந்து அகற்றுவதற்குரிய மாமருந்தாக இருக்கும். அதற்குக் கல்வியிலிருந்து மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.சாதியினைப் பார்த்து வேட்பாளர்களை நிறுத்தி வாக்கு அரசியல் செய்யும் இருபெரும் திராவிடக் கட்சிகளும் சாதியக் கொலைகளின்போதும், சாதிய மோதல்களின்போதும் கள்ளமௌனம் சாதிக்கிறபோதே இவர்களின் உண்மை முகத்தையும், இவ்வகை சாதிய மோதல்கள் யாருக்குப் பயனளிக்கிறது என்பதனையும் உணர்ந்துகொள்ள முடியும்.
சாதிய எண்ணம் கொண்டு மிகச் சாதாரணமாகக் கொலைசெய்யும் துணிவு வருகிற அளவில்தான் சாதியத்தை அலட்சியப் பார்வையோடு ஆளும் வர்க்கங்கள் அணுகி வருகின்றன. அது ஏற்புடையதன்று! ஆகவே, அதிகரித்து வரும் ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக கடுஞ்சட்டங்கள் இயற்றி அவற்றை முழுதாய் ஒழித்திட வேண்டும் எனவும், இப்படுகொலையினால் பாதிக்கப்பட்டு இருக்கிற குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மேலும்நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு
மேலும்சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
மேலும்மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
மேலும்பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற
மேலும்