காலத்திற்கேற்றப் படத்தை தந்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழக அரசியலை அலசி எடுத்து தமிழக வாக்காளர்களுக்கு அறிவுறத்தப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்குத்தான் இருக்கிறது என்பதை மறந்து கிடக்கும் வாக்காளர்களுக்கு நினைவுப்படுத்தும் படம். தனது ஓட்டின் வலிமையை உணராத வாக்காளர்களுக்கு இந்தப்படம் நல்ல பாடம் புகட்டியிருக்கிறது.
அமெரிக்காவில் மிகப்பெரிய கார்ப்ரேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மாதம் ரூ. 1500 கோடி சம்பளம் வாங்கும் விஜய், சென்னைக்கு வருதாக இந்தியாவிலுள்ள கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு தகவல் வருகிறது. அவரது வருகையால் இந்தியாவிலுள்ள கார்பேட் நிறுவனங்கள் பயந்து நடுங்குகின்றன. காரணம் அவரது புத்திசாலித்தனத்தால் மற்ற கார்ப்ரேட் நிறுவனங்களின் செயல்பாடுகளை நிலைகுலைத்து விடுவதோடு அந்த நிறுவனங்களை மூடியும் விடுகிறார் என்பதால்தான் இந்தியாவிலுள்ள கார்ப்ரேட் நிறுவனங்கள் பயப்படுகிறது. இப்படி ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலோடு விஜயை ஆரம்பத்தில் அறிமுகம் செய்கிறார் இயக்குநர் முருகதாஸ். (ஓவர் பில்டப்).
சென்னை விமான நிலையத்திற்கு தனது வெள்ளைக்கார பரிவாரங்களோடு வரும் விஜயை நிருபர்கள் சந்தித்து எதற்காக தமிழகம் வந்துள்ளீர்கள். உங்கள் வருகையால் இங்குள்ள நிறுவனங்கள் பயப்படுகின்றன என்று கேள்வி கேட்கிறார்கள். இன்று நடந்து கொண்டிருக்கும் தேர்தலில் எனது ஓட்டை பதிவு செய்வதற்காகத்தான் சென்னை வந்தேன். இப்போது நேரகாக வாக்குச்சாவடிக்குத்தான் செல்கிறேன். வாக்களித்துவிட்டு உடனே அமெரிக்காவுக்கு திரும்பி விடுவேன் என்று கூறுகிறார். இதை கேட்டதும் பயந்து கொண்டிருந்த மற்ற கார்ப்ரேட் நிறுவனங்கள் சந்தோஷத்தில் பெருமூச்சிவிட்டு அப்பாடா தப்பித்தோம் என்று கூறி அவரவர்கள் வேலையை பார்க்க செல்கிறார்கள். (இவ்வளவு பெரிய பில்டப் எந்த சினிமாவிலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்).
விஜய் ஓட்டுச்சாவடிக்கு சென்று தனது வாக்காளர் அட்டையையும் கடப்பிதழ்யையும் காட்டி வாக்குச்சீட்டு கேட்கிறார். ஆனால் அவரது ஓட்டு கள்ள ஓட்டுப்போட்டிருப்பது தெரியவருகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் தனது ஓட்டு திருடுப் போய்விட்டது. அதனால் தான் மறுபடியும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று வழக்குப்போடுகிறார்.
சுமார் 30 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் முன்னணியிலிருக்கும் பழ.கருப்பையா, விஜய்யின் ஒரு ஓட்டால் தோற்றுவிடப் போவதில்லை. இருந்தாலும் பழ.கருப்பையா விஜய்யின் ஒரு ஓட்டால் முதல் அமைச்சர் பதவியை ஏற்க முடியாமல் போய்விடுகிறது. அது எப்படி என்பதான் கதையே.
விஜய்யின் நடிப்பு இந்தப் படத்தில் மாறுபட்டுதான் இருக்கிறது. அலாதியான சுருசுருப்பும் ஒருவகை எதிர்பார்ப்பும் அவரின் நடிப்பில் நன்கு தெரிகிறது. அவரும் நடிகர்கள் விஜயகாந்த், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரின் வரிசையில் அரசியலுக்கு வருவார் என்று அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் ஊட்டியிருக்கிறார். அதற்குறிய அறிகுறியை இயக்குநர் படம் முழுவதிலும் பதியவிட்டிருக்கிறார். ராதாரவி பழ.கருப்பையா ஆகியோரிடம் விஜய் பேசும் வசனங்கள் தூள்.
கதாநாயகி கீர்த்தி சுரேஷ்க்கு வலுவான பாத்திரம் இல்லை, விஜய்யின் அனல் பறக்கும் நடிப்பில் சூடேறியிருக்கும் அவரது ரசிகர்களை குளிரவைக்கவே விஜய்யின் கூடவே வருகிறார் கீர்த்தி சுரேஷ். அழகான சிரிப்பும் அமைதியான முகமும் ரசிகர்களை குளிர வைக்கிறது.
வில்லத்தனத்திற்கு ஏற்ற உடல்வாகு கொண்டவராக மாறிவிட்டார் வரலட்சுமி சரத்குமார். அருமையான நடிப்பு.
தந்தை பழ.கருப்பையாவை சாகடிக்க தனது கைகளாலேயே அதிகளவு மாத்திரைகளை கொடுக்கும் காட்சியில் அவர் பேசும் வசனம் அலாதியாக இருக்கிறது. தனது கைகளாலேயே மாத்திரைகளை அதிகமாக கொடுத்துக் கொண்டே வரும்போது, தந்தை சாவை நெருங்கிறார் என்பதை அறிந்ததும் வரலட்சிமியின் கண்கள் கலங்குகிற காட்சியில், ஒரு சிறந்த நடிகரின் (சரத்குமார்) மகள் என்பதை நிருபிக்கிறார். தனது மகளே தன்னை கொல்கிறாள் என்று தெரிந்தும் சிரித்துக்கொண்டே மாத்திரைகளை வாங்கி சாப்பிடும் பழ.கருப்பையாவின் நடிப்பு நம்மை கண்கலங்க செய்கிறது. இதயம் கனக்கச் செய்யும் காட்சி அமைப்பு. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ரசிகர்களை கவர்கிறது. பாடலும் ஆடலும் அரங்கத்தை அதிரச்செய்கிறது.
ஓட்டுக்குள்ள வலிமையை உணரச்செய்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டுதலுக்குறியவர்.