சசிகுமார் படம் என்றாலே கலகலப்பும் விறுவிறுப்பும் சமமாக இருக்கும். ஆனால் அசுரவதம் கலகலப்பு இல்லாமல் படம் முழுவதும் விறுவிறுப்பாகவே அமைந்திருக்கிறது. குறைவான வசனங்களும் அதிகமான வெட்டுக் குத்தும் நிறைந்த படம்தான் அசுரவதம். குற்றவாளியை எடுத்த எடுப்பிலேயே கொலை செய்துவிட்டால் அது நிறைவான தண்டணையாகாது. வேதனையை அனுபவித்து அனுபவித்து அவனை கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து சிந்தித்து படம் எடுத்திருக்கிறார் இயக்குநர் மருதுபாண்டியன்.
கட்டிட பொறியாளராக பணிபுரியும் சசிகுமார், பெட்டிக்கடை வைத்திருக்கும் வசுமித்ராவை துரத்தி துரத்தி பழிவாங்குகிறார். ஆனால் வசுமித்ராவுக்கு சசிகுமாரை யார் என்றே தெரியாது. ஏன் தன்னை பழிவாங்குகிறான் என்றும் தெரியாது. இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய படத்தின் கடைசி அரை மணி நேரத்தில்தான் சசிகுமார் யார் என்பதும் ஏன் பழிவாங்கப்படுகிறோம் என்பதும் வசுமித்ராவுக்கு தெரியவருகிறது. மர்ம முடிச்சை அழகாக அவிழ்திருக்கிறார் இயக்குநர்.
சசிகுமாரின் புன்சிரிப்பை இந்த படத்தில் காணமுடிவில்லை. (மனைவி நந்திதாவுடன் எடுத்திருக்கும் திருமண போட்டோவில் மட்டும்தான் அவரது சிரிப்பை காண முடிந்தது). இது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகத்தான் இருக்கும். தனது நடிப்பில் கோபத்தின் உச்சிநிலையை தொட்டு இருக்கிறார் சசிகுமார்.
அவருக்கு மனைவியாக வரும் நந்திதாவும் படத்தின் கொஞ்சப்பகுதியில்தான் தெரிகிறார். அதிலும் பாதி மனநலமருத்துவமனையிலும் மீதி கடைசிப் பகுதியிலும் வந்து போகிறார். எதற்காக வில்லன் கொடுரமாக பழிவாங்கப்படுகிறான் என்பது புரியாமல் சசிகுமார் மீது வெறுப்பு ஏற்பட்டாலும், பழி வாங்கப்படும் காரணம் ரசிகர்களுக்கு தெரியவந்ததும் இன்னும் அதிகமாக வில்லனை கொடுமைபடுத்தியிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றும். வில்லன் செய்த அந்த வேலையை வெள்ளித்திரையில்தான் காண வேண்டும்.
மொத்தத்தில் போர் பூமியில் சுற்றிவரும் உணர்வுதான் படம் முழுக்க ஆக்கிரமித்துள்ளது.