சென்னை
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களிடம் தற்போது ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கையை, ஏற்கனவே அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களும், அப்பல்லோ மருத்துவர்களின் சாட்சியங்களும் சரியாக உள்ளதா? என்பதை கண்டறிய ஆணையம் தனியாக சிறப்பு மருத்துவர்கள் குழுவை ஏற்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி, தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதன்படி, மருத்துவர்கள் குழுவை ஏற்படுத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தது.
அதன்படி, மருத்துவர்கள் குழுவில் இடம்பெறும் மருத்துவர்களை தேர்வு செய்யும் பணியை நீதிபதி ஆறுமுகசாமி நேரடியாக மேற்கொண்டு வந்தார். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான பிரிவில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களை தேர்வு செய்யும் பணி முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மருத்துவக்குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஆணையம் வெளியிடும் என்று கூறப்படுகிறது.
அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஆணையத்தில் தாக்கல் செய்த மருத்துவ குறிப்புகளிலும், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் அளித்துள்ள சாட்சியங்களிலும் பல்வேறு முரண்பாடுகள் இருப்பது ஆணையம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன்மூலம், ஜெயலலிதா வுக்கு அளித்த சிகிச்சையில் குளறுபடி நடந்துள்ளதா? என்ற சந்தேகம் ஆணையத்துக்கு எழுந்துள்ளது.
மருத்துவக்குறிப்பு, சாட்சியங்களில் உள்ள முரண்பாடுகளை சிறப்பு மருத்துவர்கள் மூலம் கண்டறிந்து உரிய தீர்வு காண ஆணையம் முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அப்போது, 3 மாதங்க ளுக்குள் விசாரணையை முடித்து ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கால அவகாசம் முடிடைந்தநிலையில் மேலும் 6 மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் வருகிற 24-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
ஆனால், விசாரணை முடிவடையவில்லை. இதைத்தொடர்ந்து, விசாரணை ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 6 மாதம் கால அவ காசம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது.
இந்த கடிதத்தை பரிசீலித்த தமிழக அரசு, மேலும் 6 மாதம் கால அவகாசம் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்றோ அல்லது நாளையோ வெளியாகும் என்று ஆணையம் தரப்பில் கூறப்படுகிறது.