சென்னை,
2018-ம் ஆண்டுக்கான இந்திய அழகி போட்டியின் இறுதிச் சுற்று நேற்றிரவு மும்பையில் நடைபெற்றது.30 பேர் கலந்துக்கொண்ட அழகி போட்டியில் வெற்றியாளர்களை கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்டோர் அடங்கிய குழு தேர்வு செய்தது. போட்டியில் சென்னையைச் சேர்ந்த 19 வயதான அனு கீர்த்தி வாஸ் இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு 2017-ம் ஆண்டு இந்திய அழகி பட்டம் மற்றும் உலக அழகி பட்டத்தை வென்ற மனுஷி சில்லார் மகுடம் சூட்டினார். 2017 நவம்பரில் சீனாவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லார் 2017-ம் ஆண்டுக்கான உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
அனுகீர்த்தி வாஸ் சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பிரெஞ்ச் படித்து வருகிறார். 2018-ம் ஆண்டிற்கான இந்திய அழகியாக தேர்வுசெய்யப்பட்டதன் மூலம் உலக அழகி போட்டிக்கு தகுதிப்பெற்றார். நடிப்பிலும், மாடலிங்கிலும் ஆர்வம் உடைய அனு கீர்த்திவாஸ், இந்த ஆண்டு நடைபெறும் உலக அழகிப்போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பார். போட்டியில் அரியானாவை சேர்ந்த மீனாட்சி சௌத்ரி, ஆந்திராவை சேர்ந்த ஷ்ரேயா ராவ் ஆகியோர் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்தார்கள். அனு கீர்த்திவாஸ் ஒரு நடன கலைஞரும் மற்றும் தடகள வீரரும் ஆவார்.
இந்திய அழகி பட்டத்தை வென்று உலக அழகி போட்டிக்கு செல்லும் அனு கீர்த்திக்கு பல்வேறு தரப்பில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.