அமராவதி,
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக மத்திய பா.ஜனதா அரசில் இருந்து தெலுங்கு தேசம் விலகியது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் அரசு நடைபெற்று வருகிறது. தெலுங்கு தேசம் தலைவர்கள் பா.ஜனதாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் ‘எல்லோரும் பிரதமர் மோடியை அவமதிக்கிறார்கள்’ என தெலுங்குதேசத்திற்கு எதிராக பா.ஜனதா புகார் கொடுத்து உள்ளது.
ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற பா.ஜனதா குழு, தெலுங்குதேசம் கட்சியின் தலைவர்களுக்கு எதிராக புகாரை கொடுத்து உள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக மிகவும் மோசமான மற்றும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள், அவர்களுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.
பா.ஜனதா தலைவர் கண்ணா லட்சுமிநாராயணா பேசுகையில், “எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் என அனைவரும் பிரதமர் மோடிக்கு எதிராக மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். அவர்கள் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள். மந்திரி அகிலா பிரியா உள்பட இது போன்ற மோசமான வார்த்தைகளை பிரயோகிக்கும் அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க நாங்கள் வலியுறுத்தி உள்ளோம்,” என கூறி உள்ளார்.
ஆந்திராவில் ஜனநாயகமற்ற முறையில் ஆட்சி நடக்கிறது, ஆபத்தான நிலை மாநிலத்தில் ஏற்பட்டு உள்ளது. அரசு அதிகாரிகள் தெலுங்குதேசம் உறுப்பி னர்கள் போன்று செயல்படுகிறார்கள். மாநிலத்தில் போலீஸ் நிலையங்கள் தெலுங்கு தேசம் அலுவலகம் ஆகிவிட்டது எனவும் விமர்சனம் செய்து உள்ளார். ஆந்திராவில் அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.