சென்னை
சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்;தாமிர உருக்காலை தமிழகத்திற்கு வேண்டவே வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடியாக நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும். போராட்டத்தில் சமூகவிரோதிகள், விஷக்கிருமிகள் இல்லை என்பதால் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என கூறினார்.
இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலையை இனி யார் நினைத்தாலும் திறக்க முடியாது. ஆலைக்கு கொடுக்கப்பட்ட அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்பட்டு நிரந்த ரமாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் உரிமைக்காக போராடுவதில் எந்த தடையும் இல்லை. வன்முறையில் ஈடுபட்டவர்கள்தான் கைது செய்யப்படுகிறார்களே தவிர மக்கள் அல்ல.
உருட்டுக்கட்டைகள்,பெட்ரோல் குண்டுகளுடன் வந்தவர்கள் பொதுமக்களா?. போராட்டத்தில் ஈடுபட்ட விஷமிகள், சமூக விரோதிகளை தான் போலீஸ் தேடி வருகிறது. என கூறினார்.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:- ஸ்டெர்லைட் ஆலையை மூட மாநில அரசு முடிவு எடுத்தாலே போதும்; தீர்மானம் தேவை யில்லை. நீட்,ஜல்லிக்கட்டுத்தான் மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும். ஸ்டெர்லைட் பிரச்னையில் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய நிலை இல்லை என கூறினார்.