தூத்துக்குடி
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து சில நாட்களாக பதற்றம் நீடித்தநிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பத் தொடங்கி உள்ளது. துண்டிக்கப்பட்ட இணையதள சேவையும் நேற்று முதல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடிக்கு சென்று அரசு மருத்துமவனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவரிடம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
துணை முதல்வருடன் அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோரும் சென்று பாதிக்கப்பட்டவர்கள் 47 பேரையும் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்களுக்கு நிவாரண தொகை காசோலையையும் வழங்கினார்.
பின்னர் ஓ.பன்னீர் செல்வம நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் நடைபெற்ற இந்த துயர சம்பவம் மனதை உருக்கும் சம்பவமாக அமைந்து விடடது. அரசு சார்பில் ஆழந்த வருத்ததையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். சம்பவத்தின் போது காயம் பட்ட அனைவரையும் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறபட்டு உள்ளது. காயம் அடைந்தவர்கள் விரைவில் உடல் நலம் பெறுவார்கள்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழக அரசு மீது மக்கள் அதிருப்தியில் இல்லை. என கூறினார்.