பெங்களூரு,
சட்டசபை தேர்தலில் கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால், கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைந்துள்ளது.
தோல்வியை நோக்கி சென்ற நிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்பே, கர்நாடகத்தில் புதிய ஆட்சி அமைக்க ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அவசர அவசரமாக அறிவித்தது. கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தாலும், முதல்–மந்திரி பதவியை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு காங்கிரஸ் விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளது.
அதேநேரத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பா.ஜனதாவும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது. இருதரப்பும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க கோரிக்கை விடுத்து உள்ளது. இவ்விவகாரத்தில் ஆளுநர்தான் இறுதிமுடிவு எடுக்கவேண்டும் என்ற நிலை உள்ளது. இதற்கிடையே பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளமும் குற்றம் சாட்டி வருகிறது. பெங்களூருவில் இன்று பாரதீய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் சார்பில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சிலர் கலந்துக்கொள்ளவில்லை, அவர்கள் மாயமானார்கள் என்பது மறுக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டிகே சிவகுமாருக்கு துணை முதல்-மந்திரி பதவி கேட்கப்படுவதாக வும் தகவல்கள் வெளியாகியது.
இதுதொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்வியை எழுப்பினார்கள். சிவகுமார் பேசுகையில், “நான் துணை முதல்-மந்திரி ஆக வேண்டும் என்பது தொடர்பாக வெளியான செய்திகள் தொடர்பாக எந்தஒரு கேள்வியும் கிடையாது. எங்களுடைய முக்கியத்துவம் எல்லாம் மாநிலத்தில் மதசார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதே. எங்களுடைய 78 எம்.எல்.ஏ.க்களும் எங்களுடனே உள்ளார்கள்,” என்றார். டிகே சிவகுமார் கடந்த ஆண்டு குஜராத்தில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றபோது, பாஜகவிடம் இருந்து குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இதனையடுத்து அவருடைய வீடுகளில் வருமான வரித்துறை திடீர் சோதனையை மேற்கொண்டது, சொகுசு விடுதி, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.