கொல்கத்தா,
காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் சூழல் தற்போது நாட்டில் நிலவவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி யுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், 2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்தால் பிரதமர் பதவி ஏற்க தயாராக உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
இது தொடர்பாக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது:- “ தனது கருத்தை சொல்ல ராகுல் காந்திக்கு உரிமை உள்ளது. ஆனால், உண்மையில், காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைப்பதற்கான சூழ்நிலை ஏற்படவில்லை.
பல மாநில கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் வலுவாக உள்ளன. அவை ஒன்றாக சேர்ந்து ஒரு அணியை அமைத்தால், அது நாட்டிற்கு நல்லதாக இருக்கும். அனைத்து கட்சிகளும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். நாட்டின் நலனுக்கு எது தேவையோ அதனை செய்ய வேண்டும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மூன்றாவது அணிக்கு நீங்கள் தலைமை தாங்குவீர்களா? என்று மம்தா பானர்ஜியிடம் கேள்வி எழுப்பியபோது, தெளிவாக பதில் அளிக்க மறுத்துவிட்டார்.