போபால்,
மத்திய பிரதேச மாநிலத்தில் காவலர் பணிக்கான தேர்வின் போது இளைஞர்கள் மார்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி என சாதியின் பெயரை குறிப்பிட்டது பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் மற்றொரு சம்பவம் அங்கிருந்து வெளியாகி உள்ளது. அதா வது, பிந்த் மாவட்டத்தில் காவலர் தேர்வுக்கு வந்த பெண்களுக்கு மருத்துவ பரிசோதனையை ஆண் டாக்டர்களே மேற்கொண்டு உள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பரிசோதனைக்கு வந்த பெண்ணை ஆண் டாக்டர் ஒருவர் பரிசோதனை செய்யும் போது அதே அறையில், தேர்வுக்கு வந்த இரு ஆண்கள் உள்ளாடையுடன் நிற்கும் காட்சியும் இடம்பெற்ற வீடியோ வெளியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிந்த் மாவட்ட மருத்துவமனையின் மருத்துவர் அஜித் மிஸ்ரா பேசுகையில், “இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. 5 மருத்துவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. டாக்டர் ஜெயின் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும்,” என கூறிஉள்ளார். காவலர் தேர்வுக்கு வரும் பெண்களுக்கு தேவையான பரிசோதனைகளை முறையாக மேற்கொள்ள ஒரு பெண் டாக்டரை கூட நியமனம் செய்யவில்லை என மிஸ்ரா கூறி உள்ளார்.
பிந்த் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில் 217 பேர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பட்டு உள்ளனர், அவர்களில் எத்தனை பேர் பெண்கள் என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. சம்பால் பிராந்திய இன்ஸ்பெக்டர் ஜெனரல் சந்தேஷ் சிங் பேசுகையில்,“இது சரியானது கிடையாது. பரிசோதனைக்கு வரும் பெண்களை பெண் டாக்டர்கள்தான் பரிசோதனை செய்ய வேண்டும் என்பது அடிப்படை புரிதலாகும். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளோம், குற்றம் நடந்து இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என கூறிஉள்ளார்.