சென்னை
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு விவசாய சங்கத்தினர், கல்லூரி மாணவர்களும், போராட் டத்தில் குதித்துள்ளனர்.காவிாி மேலாண்மை வாாியம் அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தொிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் நேற்று (வியாழன் கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடை பெற்றது. தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாா்பில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் 45 பேருந்துகளின் கண்ணாடிகள் சேதப்படுத்தப்ப ட்டுள்ளதாக காவல் துறையினா் தொிவித்துள்ளனா்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 85ஆயிரம் போ் கைது செய்யப்பட்டு பின்னா் விடுதலை செய்யப்பட்டனா். சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க. ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா். மு.க. ஸ்டாலின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய - மாநில அரசை கண்டித்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் தபால் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருச்சி காவிரி ஆற்றில், அய்யாக்கண்ணு தலைமையில் மணலில் புதைந்து, விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருச்சியில் தமாகா தலைவர் வாசன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னை அண்ணாசாலையில் உள்ள தபால் அலுவலகத்தை புரட்சிகர மாணவர் முன்னணியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.காவிரி வாரியம் அமைக்கக்கோரி சென்னை மயிலாப்பூரில் உள்ள மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையத்தில் கையில் பதாகைகளை ஏந்தி 50க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது போல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் போராட்டம் தீவிர மடைந்துள்ளது.இந்த நிலையில் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து நேற்று கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு சாலை மறியல் போராட்டமும் நடத்தினர்.
இன்று 2-வது நாளாக தஞ்சை சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மாணவர் இயக்க மாவட்ட செயலாளர் அருன்சூரி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தின் போது 'வேண்டும்.. வேண்டும்.. காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்... மத்திய- மாநில அரசுகளே உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடு”என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.