இலங்கை போரில் தமிழர்களுக்கு நடந்த கொடுமையை வெள்ளித்திரையில் எடுத்துக் காட்டு கின்ற படம்தான் யாழ். ஏறத்தாழ 2250 ஆண்டுகளுக்கு முன்பாகவே இலங்கையில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதை யாழ் என்ற இசைக்கருவி மூலம் விளக்குகிறார் இயக்குநர் எம்.எஸ்.ஆனந்த்.
யாழ் என்பது தமிழ் வார்த்தை. அக்காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் யாழ் என்ற இசைக்கருவியின் மூலம் தேவாரம் திருவாசகத்தை உலகம் முழுவதும் பரவச் செய்தார்கள்.
அவ்வாறு பாடல்கள் மூலம் தமிழை பரப்பியதால் அவர்கள் பாணர்கள் என்று அழைக்கப்ப ட்டார்கள். யாழ் என்ற கருவியை அவர்களின் பாடல்களுக்கு கையாண்டதால் யாழ்பாணர்கள் என்று ஏனைய உலக்ததவர்களால் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் வாழ்ந்த நாட்டை யாழ்பாணம் என்றும் அழைக்கப்பட்டது.
அந்த யாழ்பாணம்தான் இன்றைய இலங்கை. இது வரலலாறு. இதிகாசகாலத்திலேயே லங்கேஸ்வரன் என்ற அசுரத் தமிழன் இலங்கையை ஆண்டதால் அவன் பெயராலேயே அந்த நாடு இலங்கை என்றும் அழைக்கப்பட்டது. ஆக இலங்கை தமிழர்களின் பூர்வீக நாடு என்பதை யாழ் என்ற திரைப்படம் மூலம் தெளிவாக்கியுள்ளார் இயக்குநர் ஆனந்த்.
தமிழனின் பூர்வீக நாடு எப்போது சிங்களனுக்கு சென்றது என்று தெரியவில்லை. சிங்களனால் அபகரிப்பட்ட நாடுதான் இப்போது இருக்கும் இலங்கை என்பது இதிகாசகாலத்தின்படியும் யாழ்ப்பாணர்களின் வாழ்க்கை முறையிலும் தெரிந்து கொள்ளலாம். ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் என்ன தவறு?.
நாட்டை மீட்க போர்தான் முடிவு என்ற நிலைக்கு தள்ளப்பட்ட தமிழனின் இயக்கத்தால், தமிழ் மக்கள் சிங்களப்படைகளால் சீரலைக்கப்பட்ட வரலாற்றை தத்துரூபமாக எடுத்துக்காட்டுகிறார் ஆனந்த்.
சிங்கள இராணுவ அதிகாரியாக வரும் டேனியல் பாலாஜி கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார். அவரிடம் சிக்கிக்கொள்ளும் நீலிமா தனது நடிப்பால் தமிழ்ச்சிகள் பட்ட துயரத்தை பட்டவர்த்தனமாக காட்டியுள்ளார். அம்மாவை விட்டுப்பிரிந்த குழந்தை ரக்ஷனா படம் பார்ப்பவர்க ளின் கண்களில் நீர்துளிகளாக நிறைந்து நிற்கிறார். கன்னி வெடிகளை அப்புறப்படுத்தும் சசிகுமாரின் உணர்ச்சிகரமான நடிப்பு பாராட்டதலுக்கு உரியது.
தமிழகத்தில் புதைக்குழிக்குள் புதைந்துபோன கன்னியமிக்க தமிழ் வார்த்தைகளை, இன்னும் இலங்கைத் தமிழர்கள்தான் வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள். நம் மூதாதையர்களின் மொழி வளம் எவ்வளவு செழிப்பானது என்று இலங்கைத் தமிழர்கள் மூலம்தான் தெரியவருகிறது. குழந்தைகளைக்கூட பன்மையில் அழைக்கும் பண்பு தமிழனுக்கு உரியது என்பதை இலங்கைத் தமிழர்கள் நமக்கு பாடம் நடத்துகிறார்கள்.
இனம் வாழ அதன் மொழி வாழ வேண்டும். தமிழ் மொழி இலங்கைத் தமிழரின் உதிரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிற படம் யாழ்.