நாளைய சமுதாயம் இளைஞர்களுக்கு உரியது. அவர்களுக்கு சமுதாய சிந்தனையை தூண்டக்கூடிய கடமை, இன்றைய ஊடகங்களுக்கு உரியது. அதிலும் குறிப்பாக மிகப்பெரிய ஊடகமான திரைத்துறைக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்பதை திரைப்பட தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் உணர்ந்து படமெடுக்க வேண்டும். கூட இருந்து குழி பறிப்பதை கச்சிதமாக விறுவிறுப்பாக இளைஞர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் ராஜூ.
விரோதிகளை மன்னித்துவிடலாம் ஆனால் கூட இருந்து குழி பறிக்கும் துரோகிகளை மன்னிக்க கூடாது என்று சொல்வார்கள். உள்குத்தில் துரோகியைத்தான் காட்டியிருக்கிறார் இயக்குநர். பழிக்குப்பழி வாங்க விரோதிகளாக இருந்து கொண்டே பழிதீர்க்கும் படங்களைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் இதில் துரோகியாக இருந்து கொண்டே பகைவனை பழி தீர்ப்பது எப்படி என்பதை இளைஞர் சமுதாயத்திற்கு சொல்லிக் கொடுக்கிறாரா இயக்குநர்?. சரி இனி கதைக்கு வருவோம்.
தினேஷ் பூவியாபரம் செய்யக்கூடிய தனது அக்கா சாயாசிங்கிற்கு உதவியாக இருக்கிறார். சாயாசிங்கின் கணவர் ஜான்விஜய் கந்து வட்டி வசூல் செய்யும் ரவுடிக்குப்பல் தலைவன் சரத்திடம் ரவுடியாக வேலை பார்க்கிறார். தான் ஒரு ரவுடி என்று அவரது மனைவிக்கும் மைத்துனன் தினேஷ்க்கும் தெரியாது. ரவுடி சரத்திடம் ரவுடியாக வேலைபார்க்கும் ஸ்ரீமனும் ஜான்விஜயும் நண்பர்கள்.(இருவரும் கந்துவட்டி வசூல் செய்யும் ரவுடிகள்தான்). ஒரு கட்டத்தில் ஸ்ரீமன் கண் முன்னேயே தனது நண்பன் ஜான்விஜயை முதலாளி சரத்தின் மகன் கொலை செய்கிறான்.
இது சிறிமனுக்கு மிகுந்த வேதனையை தருகிறது. அதே நேரத்தில் தனது அக்காவின் கணவரை கொலை செய்தவன் அவரின் முதலாளியின் மகன்தான் என்று தினேஷ்க்கும் தெரியவருகிறது. அதனால் ஸ்ரீமனும் தினேஷ்ம் ஒன்று சேர்ந்து ரவுடி சர்த்தின் கூடவே இருந்து எப்படி பழி தீர்க்கிறார்கள் என்பதை வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் சலிப்புத் தட்டாமல் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போல் நடித்திக்கிறார் தினேஷ். அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் அவர் வரும் காட்சிகள் ரசிகர்களை பேசவைக்கும். அறமும் அருவியும் பனைமரத்தில் கட்டப்பட்டிருக்கும் பதநீர் பானை. உள்குத்து கள்ளுப்பானை.