தங்கமுகையதீன்
பழைய ஆள்மாறாட்டக்கதையை பிரம்மாவோடு தொடர்புபடுத்தி புதிய கோணத்தில் சொல்கின்ற படம்தான் பிரம்மா.காம். அதாவது பழைய சோறில் வெண்ணீர் ஊற்றி சுடுசோறாக்கி பரிமாறப்பட்டுள்ளது.
ஒரு விளம்பர நிறுவனத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருக்கிறார் நகுல். அந்த நிறுவனத்தில் விளம்பர ஒப்பனை அழகியாக (மாடலிங்) வேலை பார்க்கிறார் ஆஷ்னா. இருவரும் ஒருவெருக்கொருவர் சொல்லிக்கொள்ளாமலேயே காதலிக்கிறார்கள். நகு லைவிட திறமை குறைந்த சித்தார்த் விபின் அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணிபுரிகிறார். இதை சகித்துக் கொள்ள முடியால் தவிக்கும் நகுல், பிரம்மா கோவிலுக்கு சென்று முறையிடுகிறார்.
பிரம்மா நகுலை தலைமை அதிகாரியாகவும் சித்தார்த் விபினை நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் மாற்றிவிடுகிறார். இப்போது நிகழ்ச்சி தயாரிப்பாளராக சித்தார்த் விபின் வேலை பார்ப்பதால் ஆஷ்னா சித்தார்த் விபினை காதலிக்கிறார். இதைப்பார்த்த நகுல் தவியாய் தவிக்கிறார். காரணம் ஆசைப்பட்ட பதவி வந்துவிட்டது ஆனால் காதலி கைமாறிவிட்டாள். கைமாறிய காதலி திரும்ப வும் வரவேண்டும் என்றால் நகுல் மறுபடியும் நிகழ்ச்சி தயாரிப்பாளராக மாறவேண்டும். அவர் மாறினாரா காதலியை கை பிடித்தாரா என்பதை வெள்ளித்திரையில் காணலாம்.
தனது சுறுசுறுப்பான நடிப்பால் நகுல் மிளிர்கிறார். ஆஷ்னா விளம்பர நிறுவனத்தின் ஒப்பனை அழகிக்கு ஏற்றாற்போல் தோற்ற மளிக்கிறார். பாடலும் ஆடலும் அவருக்கு வலுவூட்டுகிறது. பூசாரியாக வரும் கே.பாக்கியராஜ் இறுதிக் கட்டத்தில் நாரதராக வந்து சிரிப்பது, நீங்க சிரிக்காவிட்டாலும் பரவாயில்லை நான் சிரிக்கிறேன் என்று ரசிகர்களுக்கு சொல்வது போல் இருந்தது.