தங்கமுகையதீன்
இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனின் சிந்தனை, அருவி போல் பெருக்கெடுத்து திரையில் ஓடுகிறது. தனது தொலைக்காட்சியின் பார்வை யாளர்களை அதிகப்படுத்தி விளம்பரம் தேடுவதற்காக செயல்படும் கயமைத்தனத்தின் முகத்திரையை தோல் உரித்து காட்டியிருக்கிறார் இயக்குநர். அத்தோடு நில்லாமல் எய்ட்ஸ் நோயால் அவதிப்படும் அப்பாவிகளின் எண்ணச் சுமைகளை இவ்வளவு எளிமையாக வேறு யாரும் சொல்லிவிட முடியாத அளவுக்கு சித்தரித்திருக்கிறார்.
நடுத்தர வர்க்கத்தில் பிறக்கும் ஒரு பெண் குழந்தைக்கு அருவி என்று பெயர் வைத்து, தாயும் தந்தையும் மிகவும் செல்லமாக வளர்க்கிறார்கள். தான் பெற்ற குழந்தையை கஷ்டப்பட்டு கான்வென்டில் படிக்க வைக்கிறார்கள். மகள் நினைவாகவே வாழ்கிறார் தந்தை. தனது குழந்தையை சைக்கிளில் வைத்து பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார். ஆனால் அருவி பருவம் அடைந்ததும் மிகவும் சந்தோஷப்படும் தந்தைக்கு, தனது மகள் அருவிக்கு, எய்ட்ஸ் பாதித்திருப்பது தெரிய வருகிறது.
பாசமாக வளர்த்த மகளை இப்போது அருவருப்பாக பார்க்கிறார். தாயும் தான் பெற்ற மகளேயே ஒதுக்கி வைக்கிறார் கண்ணீருடன். ஆனால் அருவி, தாய் தந்தை பாசத்திற்காக ஏங்குகிறார். கெட்ட நடத்தையால் இந்த நோய் எனக்கு வரவில்லை என்று தாய் தந்தையிடம் சொல்லியும் அது எடுபடவில்லை. தனது சகோதரியும் தன்னிடம் நெருங்கி பழகுவதை நிறுத்திக் கொண்டாள். இந்த நோய் மற்றவர்களுக்கும் பரவி விடும் என்ற பயத்தில் தனது மகள் அருவியைப் பார்த்து, இனி இந்த வீட்டில் இருக்காதே, வெளியே போய்விடு என்று கூறுகிறார் தந்தை. ஏங்கே போவேன் அப்பா என்று ஏக்கத்துடன் கேட்கும் அருவியிடம், எங்கேயாவது போய்விடு என்று கூறுகிறார் தந்தை.
இந்த கட்டத்தில் அருவியின் கண்களில் மட்டும் கண்ணீர் வரவில்லை, படம் பார்ப்பவர்களின் கண்களையும் ஈரத்தில் நனையவிடுகிறார் இயக்குநர். அப்பாவியாக வெளியேறும் அருவிக்கு அடைக்கலம் கொடுக்க மூன்று பேர் வருகிறார்கள். ஒருவர் அப்பா வயதில் இருக்கும் பெரியவர், அடுத்தவர் ஆன்மீக பிரசங்கவாதி, மற்றொருவர் வாலிப வயதுடைய தொழில் அதிபர். இம்மூவரும் அருவியின் பருவத்தின் மீது ஆசை கொள்கிறார்கள். இவர்களை விட்டால் வேறு வழியில்லை என்று நினைத்த அருவி, மூவரின் ஆசைக்கும் இணங்கி தனது பருவத்தை பங்கு போட்டு கொடுக்கிறாள். இத்துடன் அவள் சோகத்தின் கட்டம் முடிகிறது.
அடுத்துவருவதுதான் அனைவரையும் சிரிக்க வைக்கும் காட்சிகள். சொல்வதெல்லாம் சத்தியம் என்ற தலைப்பில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் அழைத்து நிகழ்ச்சி நடத்தும் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அருவி மனு போடுகிறாள். தன்னை மூன்று பெரிய மனிதர்கள் பாலியல் உறவு கொண்டு ஏமாற்றி விட்டார்கள். அவர்களை அழைத்து எனக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று கூறுகிறாள். அந்த மூவரையும் தொலைக்காட்சி நிறுவனத்தார் அழைத்து வந்து நேருக்கு நேர் அமரவைத்து சொல்வதெல்லாம் சத்தியம் நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்கிறார்கள். அருவிக்கு நீதி கிடைத்தா இல்லையா என்பதை கலகலப்பாகவும் திருப்புமுனையாகவும் கெடுத்தவர்களுக்கு பாடமும் நடத்தியிருக்கும் இயக்குநரை பாராட்ட வேண்டும்.
தனது கதாபாத்திரத்தை உணர்ந்தது மட்டுமல்லாமல் எய்ட்ஸ் நோயாளிகளின் அசைவுகளை உணர்வுகளை அப்படியே படம் பிடித்து காட்டியிருக்கிறார் அதிதி பாலன். அருமையான நடிப்பு என்று சொல்வதைவிட, எய்ட்ஸ் நோயாளிகளின் பதிவு என்றுதான் சொல்ல வேண்டும். தத்ரூபமாக நடித்திருக்கிறார். ஒரு கிராமம், ஒரு வீடு, 10 அல்லது 20 புதுமுக நடிகர்களை வைத்து குறைந்த செலவில் நிறைவான தரமான படத்தை தந்திருக்கிறார். கவர்ச்சியை நம்பால் கதையை நம்பி படம் எடுத்தால் வெற்றி பெறலாம் என்று நிருபித்திருக்கும் படம் தான் அருவி. அருவி பெருக்கெடுத்து ஓடும்.