தங்கமுகையதீன்
இளமைக்கால பருவம் பள்ளிப் பருவம்தான். எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்பதை முடிவெடுக்கும் காலம் அது. அதை பெற்றோர்கள் நன்கு ஆராய்ந்து அதன்படி தங்களது பிள்ளைகளை வளர்க்க வேண்டும். பிள்ளைகளுக்கு அதிக செல்லம் கொடுத்து அவர்களின் வாழ்க்கைப் பாதையை அடைத்துவிடக்கூடாது. காதல் வசப்படும் வயதும் அந்தப் பள்ளிப் பருவத்தில்தான் வருகிறது. இந்தக் காலக்கட்டத்தில் எடுக்கும் முடிவுதான் அந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணியிக்கிறது. இந்த காலத்தை தவறவிட்டால் ஏற்படும் விளைவுகளுக்கு விதியின் பெயரைச் சொல்லி தப்பித்துவிட முடியாது. முயற்சி செய்தால் வெற்றி என்பது விதி. தவறு செய்தால் தோல்வி என்பதும் விதிதான். இதை மையக்கருத்தாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் பள்ளிப்பருவத்திலே. இந்தப்படத்தில் வரும் கதை, ஒரு குடும்பத்தின் உண்மையான கதை. சினிமாத்தனம் இல்லாத வாழ்க்கை பாதையில் பயணித்திருக்கிறார் இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர்.
தஞ்சை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறார் பொன்வண்ணன். அவருக்கு மகளாக வரும் வெண்பா தன்னுடன் படிக்கும் மாணவன் நந்தன்ராமை இளைமறைவுக் கனியாக காதலிக்கிறாள். இதை குறிப்பால் உணர்ந்த நந்தன்ராமும் வெண்பாவை வெளிப்படையாக காதலிக்கிறான். இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். தன் மகள் வேறு ஜாதியைச் சேர்ந்த இளைஞனை காதலிப்பதை விரும்பாத பொன்வண்ணன், தனது உறவுக்காரப் பையனுக்கு வெண்பாவை திருமணம் செய்து வைக்கிறார். வெண்பா வேறு ஒருவனுக்கு மனைவி என்றாலும் அவளை மறக்க முடியாமல் தவிக்கிறான் நந்தன்ராம். நந்தன்ராமின் தந்தையாக வருகிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.
நந்தன்ராமும் வெண்பாவும் படிக்கும் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியரும் கே.எஸ்.ரவிக்குமார்தான். அவர் பள்ளியில் படிக்கும் அனைத்துப் பிள்ளை களுக்கும் நல்ல ஆசிரியர் என்று பெயர் எடுத்த ரவிக்குமார், தனது சொந்த மகனுக்கு நல்ல தந்தையாகவும் இல்லை நல்ல ஆசிரியராகவும் இல்லை என்பதை உணர்ந்ததும் ரவிக்குமார் மாரடைப்பால் மரணமடைந்துவிடுகிறார். தான் கொண்ட காதலால்தான் தனது குடும்பம் சீரழிந்துவிட்டது என்ப தையும் சிந்திக்காமல், வெண்பாவின் வீட்டுக்கே சென்று என்னை காதலித்தாயா இல்லையா என்று கேட்கிறான். இதைக்கேட்ட வெண்பாவின் கணவன் என்ன செய்தான், வெண்பாவின் தந்தை பொன்வண்ணன் என்ன செய்தான். கணவன் ரவிக்குமாரை இழந்த ஊர்வசியின் நிலை என்ன என்பதுதான் மீதிக்கதை.
படத்தின் முதல்பாதியை பார்த்த ரசிகர்கள் இடைவேளையில் வெளியே போய்விடாமல் இருந்தால், பின்பாதி படம், அவர்களுக்கு ஒரு படிப்பினையாக அர்த்தம் உள்ளதாக இருக்கும்.