முழு நீள நாவல் கதைபோல் சத்யா கதை செல்கிறது. தெலுங்கில் வெற்றிபெற்ற ஷனம் படத்தின் மறுபதிப்புதான் சத்யா. தொழில் நுட்ப அலுவலகத்தில் வேலை பார்க்கும் சிபிராஜும் ரம்யா நம்பீசனும் காதலிக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு ரம்யா நம்பீசனின் தந்தை நிழல்கள் ரவி எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் விரக்தி அடைந்த சிபிராஜ் தனது நண்பன் யோகிபாபுடன் வெளிநாட்டுக் சென்றுவிடுகிறார்.
இதற்கிடையில் நிழல்கள் ரவிக்கு உடல்நிலை மோசமடைந்து வருவதால் தான் இறப்பதற்க்குள் மகள் ரம்யா நம்பீசனுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று நினைத்து திருமணமும் செய்துவைக்கிறார். சில வருடங்கள் கழிந்த பிறகு வெளிநாட்டிலிருக்கும் சிபிராஜூக்கு ரம்யா நம்பீசன் போன் செய்து தனது மகளை காணவில்லை அவளை கண்டுபிடிக்க உதவி செய்யுங்கள் என்று கூறுகிறார்.
இதை கேட்டதும் வெளிநாட்டிலிருந்து வந்த சிபிராஜ் தனது காதலியின் மகளை கண்டுபிடிக்க முயல்கிறார். இதுபற்றி காவல்நிலையத்தில் விசாரிக்கும் சிபிராஜ்க்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதாவது ரம்யா நம்பீசனுக்கு குழந்தையே பிறக்கவில்லை என்றும் ஒரு விபத்தில் தலையில் அடிபட்டதால் நினைவிழந்து பிறகு கண் விழித்தபோது தனது மகளை எங்கே என்று கேட்டதாகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகிறார். ரம்யா நம்பீசனின் கணவரும், தங்களுக்கு குழந்தையே பிறக்கவில்லை என்றும், எனது மனைவி ரம்யா நம்பீசன் விபத்தில் சிக்கியதால் மூளை குழம்பி தனக்கு ஒரு மகள் இருப்ப தாகவும் அவள் தொலைந்துவிட்டால் என்றும் கற்பனை செய்கிறாள் என்று சிபிராஜிடம் கூறுகிறார்.
ஆனால் தனக்கு குழந்தை இருக்கிறது அது தொலைந்துவிட்டது என்னை நம்புங்கள் என்று சிபிராஜிடம் ரம்யா நம்பீசன் வாதாடுகிறார். உண்மையிலேயே தனது காதலி ரம்யா நம்பீசனுக்கு குழந்தை பிறந்ததா இல்லையா என்ற சந்தேகத்துடனே அந்த குழந்தையை தேடுகிறார் சிபிராஜ். குழந்தை கிடைத்ததா?
தங்களுக்கு குழந்தையே பிறக்கவில்லை என்று ரம்யா நம்பீசனின் கணவர் ஏன் சொல்கிறார்? போன்ற கேள்விக்கான பதிலை மிகவும் நாவல் போல் இயக்குநர் கதையை விறுவிறுப்புடன் நகர்த்தி இருக்கிறார்.
சிபிராஜ் மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். காதலியின் குழந்தையை தேடும்போது காதல் தோல்வியையும் கலந்து சோக உணர்வுடன் நடித்திருக்கும் நடிப்பு அலாதியானதுதான். இதில் போலீஸ் அதிகாரியாக வரும் வரலட்சுமி சரத்குமார் மிகவும் அசால்ட்டாக நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது ரசிக்க வைக்கிறது. எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் உயர் அதிகாரியாகவே மாறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அற்புதமான நடிப்பு. யோகிபாபு தனது பார்வையிலேயே ரசிகர்களை சிரிக்க வைக்கிறார். கதையை ஒரு புதிய கோணத்தில் இயக்குநர் காட்டியிருப்பது வரவேற்கத்தக்கதுதான்.