பாசமலர் படத்தை தழுவி இருக்கிற நவீன பாசமலராகும் கொடிவீரன். கதாநாயகனின் அண்ணன் தங்கை பாசத்தையும், வில்லனின் அண்ணன் தங்கை பாசத்தையும் பின்னி பினைத்திருக்கிறார் இயக்குநர் முத்தையா. கதாநாயகனும் வில்லனும் பாசத்தை நோக்கி பயணிக்கும் இரு தண்டவாளங்கள்.
கொடிவீரானக வரும் சசிகுமார் குறி சொல்லும் தொழில் செய்து வருகிறார். இவரது தங்கை சனுஷா. அண்ணன் மீது தங்கையும், தங்கை மீது அண்ணனும் அளவிடமுடியாத சகோதரப் பாசத்தை காட்டுகிறார்கள். அதேபோல்தான் வில்லனான பசுபதியும் அவரது தங்கையுமான பாவனாவும் சகோதரப் பாசத்தில் திளைக்கிறார்கள். பசுபதியும் பாவனாவின் கணவரும் அடியாட்கள். தனது சகோதரியின் கணவனுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காக பசுபதி பாடுபடுகிறார். அதே போல் தனது தங்கையின் கணவனுக்கு அடியாட்களால் எந்தவிதமான ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்ப தற்காக சசிகுமாரும் தங்கையின் கணவனுக்கு காவலாக இருக்கிறார். தங்களுடைய தங்கைமார்களின் கணவன்மார்களுக்காக சசிகுமாரும் பசுபதியும் மோதிக் கொள்கிறார்கள்.
சசிகுமார் தனக்கே உரித்தான புன்புருவல் சிரிப்புடன் படம் முழுக்க வந்து கலக்குகிறார். பசுபதியும் மிரட்டல் விழிகளோடு மிரள வைக்கிறார். இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்கிறார்கள். இப்படத்திற்காக பாவனா உண்மையாகவே மொட்டை அடித்து இருக்கிறார். இது அவர் கதாபாத்தி ரத்தின் மீது உள்ள பற்றுதலா? அல்லது படம் இல்லாமல் இருந்ததினால் வந்த படத்தை விடவேண்டாம் என்று மொட்டை போட்டாரா என்பது தெரிய வில்லை.
நிறைமாத கர்ப்பிணி தூக்கில் தொங்கும் போது கால்கள் உதறல் எடுக்கிறது. இந்த உதறலில் குழந்தை பிறந்து கீழே தொப்புள் கொடியுடன் விழுகிறது. இந்தக் காட்சியை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நினைப்பது தவறு. வக்கிரமாக உள்ளது. பல காலங்களுக்குப் பிறகுதான் இனிமையான பாடல்கள் அதுவும் பாடல் வரிகள் கேட்கும்படியும் உள்ளது. இசையமைப்பாளர் ரகுநத்தன் மனதில் நிற்கிறார். இதுபோன்ற கிராமிய இசையும் பாடலும் தனது படத்தில் வைத்தமைக்காக இயக்குநரை பாராட்டாமல் இருக்க முடியாது.