தர்மம் தலைகாக்கும் மாத இதழ் சார்பாக பாரத ரத்னா எம்.ஜி ஆர் நூற்றாண்டு விழா மற்றும் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா சென்னை காமராஜ் அரங்கில் நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக தீபம் மருத்துவ மனையோடு இணைந்து ரத்த தான முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம். நடைபெற்றது. விழாவிற்கு மனித நேய சிகரம் பாலம் கல்யாணசுந்தரம் தலைமையில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, மூத்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், பழம்பெரும் நடிகை லதா ஆகியோர் கலந்து கொண்டு வாழ் நாள் சாதனையாளர் விருதினை வழங்கினார்கள். கடின உழைப்பால் உயர்ந்த மலேசிய வாழ் தமிழ் பெண்மணி லட்சுமி ரவிக்கு வாழ் நாள் சாதனையாளர் விருதை நடிகை லதா வழங்கினார். விருதினை லட்சுமிரவி, ரவி ஆகியோர் இணைந்து பெற்றுக்கொண்டார்கள்.
வாழ் நாள் சாதனையாளர் விருது பெற்ற லட்சுமிரவி மலேசியாவில் ஷாலாம் என்ற இடத்தில் ஸ்ரீ மயூரி என்ற பெயரில் சிறிய உணவகத்தை ஆரம்பித்து தன் கடின உழைப்பாலும், நேர்மையாலும் தொழிலதிபராகவும், ஏழைகளுக்கு கல்வி, ஆதரவற்ற அனாதை குழந்தைகளுக்கு உதவுதல், தமிழக இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தல் போன்ற சமூக ஆர்வலராகவும் உயர்ந்து விளங்கியதால் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.