தங்கமுகையதீன்.
காதலுக்கு கண் இல்லை என்பார்கள். இப்படத்தின் காதலுக்கு எதுவும் இல்லை. மானம் இழந்து உருக வைக்கும் காதல். இளைஞர்கள் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை இயக்குநர் சொல்லத்தவறியது ஏன் என்று புரியவில்லை. காதலின் உணர்வுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தி ருக்கக் கூடாது. கண் முன்னாள் கல்லை வைத்தாள் அது இந்த உலகத்தையே மறைத்துவிடும். இப்போது இளைஞர்களின் கண்ணுக்கு அருகில் காதலைத்தான் இப்போதுள்ள இயக்குநர்கள் வைக்கிறார்கள்.
கதையின் கரு இதுதான். ஒரு பெண்ணை ஒருவன் ஒருதலைப் பட்சமாக காதலிக்கிறான். அவளது செருப்பை பஸ்சில் தவறுவிடுகிறாள். அதே நேரத்தில் அந்தப் பெண்ணின் தந்தையை சிரியாவிலுள்ள தீவரவாதிகள் கடத்தி விடுகிறார்கள். தந்தை மீண்டு வந்துவிடுவாரா என்று குறி கேட்கிறார்கள். காணாமல் போன செருப்பு கிடைத்தால் தந்தை தீவிரவாதிகளிடமிருந்து தப்பித்து வந்து விடுவார் என்று குறி சொல்கிறார் ஒரு பெண் சாமியார்.
இதற்காக தொலைந்து போன தனது செருப்பை தேடித்தேடி அலைகிறாள் அந்தப் பெண். காதலி செருப்பைத் தேடி அலைவதை தாங்கிக் கொள்ள முடியாத இளைஞன் தானே அந்த செருப்பை தேடி பிடித்து தரவேண்டும் என்று படம் முழுக்க தேடித் தேடி அலைகிறான். இதற்காக பலரின் கால்களில் விழு கிறான். பலரிடம் அடி வாங்குகிறான். கதறி அழுகிறான். இறுதியில் எப்படி செருப்பைக் கண்டு பிடிக்கின்றான். ஒருதலைக் காதல் நிறைவேறியதா என்பதை வெள்ளித்திரை விவரிக்கிறது.
காதலிக்கும் இளைஞான நடித்திருக்கும் தமிழ் என்ற பாண்டி மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார்.அடிவாங்குவதிலும் கெஞ்சுவதிலும் அவர்போல் நடிக்க முடியுமா என்ற சொல்லும் அளவுக்கு கனகச்சிதமாக நடித்திருக்கிறார். காதலியாக வரும் ஆனந்தி தமிழ் சினிமாவுக்கு அழகான வரவு. அரசியல்வா தியாக நடித்திருக்கும் பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரை மூளைச் சலவை செய்து நடிக்க ஒப்புதல் வாங்கியுள்ளார் இப்படத்தின் இயக்குநர் ஜெகன்நாத். செருப்படி வாங்கும் பாத்திரத்தில் ரவிக்குமார் நடிக்க தேவை இல்லைதான். செருப்படி வாங்க நன்றாக மூளைச் சலவை செய்யப்பட்டி ருக்கிறார் என்பது தெரியவருகிறது.
பாடலும் ஒளிப்பதிவும் கேட்கும்படியும் பார்க்கும்படியும் அழகாக இருக்கிறது. கதையின் கருவில் பிழை இருந்தாலும் ரசிகர்களே உங்களை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.