அரசாங்கத்தின் அவலங்களையும் அரசியல்வாதிகளின் யோக்கியதைதையும் அலசிப்பார்த்த இயக்குநர் கோபி நாயரை பாராட்டாமல் இருக்க முடியாது. இப்படி ஒரு இயக்குநர் தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்தது வரம் என்றுதான் சொல்ல வேண்டும். சினிமா ஒரு பலம் வாய்ந்த செய்தி நிறுவனம் என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார். அரசாங்கத்தின் அலட்சியத்தை அப்படியே படம் பிடித்திக்கிறார். வறுமையின் பிடியில் சிக்கியிருக்கும் ஒரு கிராமத்தின் கதை.
தூத்துக்குடி கடலோரத்தில் இருக்கும் கிராமத்தில் முத்துச் சிப்பி குவியல்களில் வேலை பார்க்கும் மனைவி சுனு லட்சுமி. பெயிண்டர் வேலைபார்க்கும் கணவன் ராம். மகன்கள் ரமேஷ், விக்னேஷ். இருவர்களும் சிறுவர்கள். மகள் தன்ஷிகா 4 வயது சிறுமி. எளிமையான குடும்பம் ஏழ்மையான வாழ்க்கை. அமைதியாக அழகாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அந்தக் கிராமத்தில் கார்ப்பரேட் கம்பெனிகள் குளிர்பானம் தயாரிக்க குடிதண்ணீரை உறிஞ்சிக் கொண்டு போகிறார்கள். அதனால் கிராம மக்களுக்கு நிலத்தடி தண்ணீர் இல்லை. தண்ணீருக்காக கலெக்டர் நயன்தாராவின் காரை வழிமறித்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். கவர்ச்சி உடையில் பார்த்த நயன்தாராவை கதர்ச் சேலை கட்டிய தமிழச்சியாக ரசிக்கும்படி செய்திருக்கிறார்
இயக்குநர். மாவட்ட கலெக்டராக வருகிறார் நயன்தாரா. பாதிக்கப்பட்ட மக்களிடம் பக்குவமாக நிலைமையை எடுத்துச் சொல்லும் விதம், தங்களில் ஒருத்தியாகவே கலெக்டரை மக்கள் நினைக்கும் அளவுக்கு திரைக்கதையை அமைத்திருக்கும் விதமும் அற்புதம்தான். கலெக்டர் கதாபாத்திரத்தையே மறந்து பாதிக்கப்பட்ட மக்களில் ஒருத்தியாகவே தனது உணர்வை அற்புதமாக வெளிப்படுத்துகிறார் நயன்தாரா. குளிர்பானம் தயாரிக்க எடுத்துச் செல்லும் தண்ணீர் லாரியை திருப்பி ஊர்மக்களுக்கு விநியோகம் செய்து வைத்து இப்போது இருக்கும் மாவட்டக் கலெக்டர்களுக்கு பாடம் நடத்துகிறார் இயக்குநர் கோபி நாயர். வாழ்த்துக்கள் கோபி நாயர்.
ஊரின் காட்டுப்பகுதியில் ஆழ்துளை கிணறை தோண்டி அதில் தண்ணீர் இல்லாததால் விரக்தியில் அதை மூடாமல் விட்டுவிடுகிறார் நிலத்தின் சொந்தக்காரர். அந்த ஆழ்துளை கிணற்றில் ராமின் மகள் 4 வயது சிறுமி தன்ஷிகா விழுந்துவிடுகிறாள். அச்சிறுமியை உயிருடன் மீட்க போராடுகிறார்கள் நயன்தாராவும் அக்கிராம மக்களும். படம் முழுக்க இந்த போராட்ட காட்சிகள்தான். படம் பார்ப்பவர்களின் உணர்வை உறைய வைக்கும் காட்சிகள். குழிக்குள் இருக்கும் குழந்தை நமது குழந்தை என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
குழந்தை என்னவாகுமோ ஏதுவாகுமோ என்ற பயம், படம் பார்ப்பவர்களின் மனதில் குடிகொண்டுவிட்டது. அறிமுக இயக்குநர் தான் கோபி நாயர். வெள்ளித்திரையை காந்தமாக்கி நமது கண்களை இருப்புத் துண்டுகளாக மாற்றிவிட்டார்.
அத்துடன் விடவில்லை, அலட்சியாக இருக்கும் அதிகாரிகள் ஒருபக்கம், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அரசியல்வாதிகள் மறுபக்கம். இவர்க ளோடு நயன்தாராவின் தாய் உள்ளம் போராடுகிறது. அப்பப்பா நயன்தாராவா இது. என்ன அருமையான நடிப்பு. ஆழ்துளை கிணற்றில் நமது குழந்தைதான் விழுந்திருக்கிறது என்ற உணர்வை உள்வாங்கிய பிறகுதான் நடிக்க வந்திருக்கிறார் நயன்தாரா. கதர் சேலைக்கும் கலெக்டர் உத்தி யோகத்திற்கும் பெருமை தேடி தந்திருக்கிறார்.
கிணற்றுக்குள் கிடக்கும் குழந்தை எப்படி மூச்சு திணறுமோ அதை அப்படியே வெளிப்படுத்துகிறது குழந்தை நட்சத்திரம் தன்ஷிகா. வில்லன் வேடத்தில் நடித்த ராம், ஒரு தந்தையின் உருக்கத்தை படம் முழுக்க ஓடவிட்டிருக்கிறார். இப்படத்தில் வசனம்தான் முக்கிய கதாநாயகன். அலட்சிய அதிகாரி களையும் அரசியல்வாதிகளையும் இந்த அளவுக்கு எந்தப் படத்திலும் விமர்சிக்க வில்லை. அவர்களின் உண்மை முகத்தை உரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர். எப்படி குழந்தையை மீட்கிறார்கள் என்பதுதான் உச்சக்கட்ட காட்சி. குழந்தை இறந்து விட்டதாக காட்டியிருந்தால், நிச்சியமாக படம் பார்த்தவர்கள் இயக்குநரை அடித்து நொறுக்கி இருப்பார்கள்.அந்த அளவுக்கு ரசிகர்களை ஈர்த்துவிட்ட படம்தான் அறம்.