பட்டியலிட்ட ஸ்டாலின்:
இது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:
இந்த சோதனையை எப்படி பார்க்கிறீர்கள்?
ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள முடியாது, எழுதி வைத்துதான் படிக்க வேண்டும். பாஜக ஆட்சியில் கரூர் அன்பு நாதனிடம் கைப்பற்றிய பணம் என்ன ஆனது. திருப்பூரில் சிக்கிய ரூ.570 கோடி என்ன நிலையில் உள்ளது, நத்தம் விஸ்வநாதன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை, சைதை துரைசாமி, அவரது நண்பர்கள், உறவினர்கள் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை, தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் வீடுமட்டுமல்ல, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம், மகன் வீட்டில் நடந்த சோதனை, மணல் மாஃபியா சேகர் ரெட்டியிடம் நடந்த சோதனை, குட்கா புகழ் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனை, ஆர்.கே.நகர் தேர்தலை ஒட்டி நடத்தப்பட்ட சோதனை ரூ.89 கோடி பரிமாற்றத்துக்கான ஆவணம், முதலமைச்சர் எடப்பாடிக்கு நெருக்கமான ஈரோடு ராமலிங்கத்திடம் நடத்தப்பட்ட சோதனை, குட்கா புகழ் விஜயபாஸ்கரின் கூட்டாளி சுப்ரமணியத்திடம் நடத்தப்பட்ட சோதனை, தற்போது காவல் உயர் அதிகாரி டிஜிபி டி.கே.ராஜேந்திரன், விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட குட்கா வியாபாரிகளிடம் நடந்த சோதனை, சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் நடத்தப்பட்ட ரெய்டு என்ன ஆனது, எந்த பதிலும் இல்லை.
இந்த ரெய்டுகள் எல்லாம் என்ன ஆனது, எதன் அடிப்படையில் நடந்தது. என்ன முடிவு, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதற்கெல்லாம் பதில் இல்லை, அந்த அடிப்படையில் தான் இந்த ரெய்டும் நடந்துள்ளது. தொடர்ந்து இதே போன்ற நிலைதான் உள்ளது.
இது பற்றி உங்கள் பதில்?
என் பதில் என்ன வென்றால் நான் மேற்சொன்ன விஷயங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு பதிலை பெற்று வாருங்கள் என் பதிலை நான் சொல்கிறேன்.
பெரிய பட்டியலே இருக்கிறது. என்ன நோக்கம் என்ன நடவடிக்கை எந்த பதிலும் இல்லை.
இதற்கு பின்னால் அரசியல் இருக்கிறதா? அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை உள்ளதா?
அரசியல் காரணம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை நீங்கள் எப்படி கருதுகிறீர்கள் சொல்லுங்கள், அப்புறம் என்னுடைய பதிலை நான் சொல்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.