மும்பை,
மும்பை எல்பின்ஸ்டன் சாலை மற்றும் பரேல் புறநகர் ரெயில் நிலையத்தை இணைக்கும் குறுகிய நடைமேடை மேம்பாலத்தில் வழக்கமாக கூட்டம் அதிகமாக காணப்படும். இன்று காலை 10:30 மணியளவில் ரெயில் நிலையத்தில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மழையை தொடர்ந்து ரெயில் நிலையத்தில் நின்ற பயணிகள், மழை நின்றதும் வெளியேற அவசரம் காட்டிய போது இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது என முதலில் தெரிவிக்கப்பட்டது.
ரெயில் நிலையத்தில் விபத்து நேரிட்டது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டதும் ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடன் தீயணைப்பு படையினரும் மீட்பு பணிக்கு விரைந்தனர். இதற்கிடையே ரெயில் நிலைய நடைமேடை மேம்பாலத்தில் நெரிசலில் சிக்கியவர்கள் அங்கு இருந்த பயணிகள் காப்பாற்ற முயற்சி செய்தனர். மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்ற காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்களில் 22 பேர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரெயில்வே டிஜி சக்சேனா பேசுகையில், எதிர்பாராத விதமாக கனமழை பெய்ததன் காரணமாக பயணிகள் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர். கூட்டம் அதிகமாக இருந்து உள்ளது. மழை நின்றதும் பயணிகள் அனைவரும் வெளியேற ஒரே நேரத்தில் முயற்சி செய்து உள்ளனர். அப்போது துரதிஷ்டவசமாக நெரிசல் நேரிட்டு உள்ளது என கூறிஉள்ளார். மும்பை போலீஸ் மத்திய பிராந்திய கூடுதல் கமிஷ்னர் பேசுகையில், கூட்டம் அதிகமாக காணப்பட்டதே விபத்திற்கு காரணம் ஆகும். 22 சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளது.30 பேர் காயம் அடைந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.
பிரதமர், ஜனாதிபதி இரங்கல்
மும்பையில் ரெயில் நிலையத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கலை தெரிவித்து உள்ளார். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக குறிப்பிட்டு உள்ளார்.
பிரதமர் மோடியும் ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். காயம் அடைந்தவர்கள் உடனடியாக குணம் அடைய பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டு உள்ளார். மும்பை ரெயில் நிலையத்தில் உள்ள சூழ்நிலை தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் மும்பையில் உள்ளார், நிலையை ஆய்வு செய்வார், அனைவருக்குமான உதவியை உறுதிசெய்வார் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
விசாரணைக்கு உத்தரவு
மும்பை ரெயில் நிலைய நெரிசல் குறித்து ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார்.
துரதிஷ்டவசமான நெரிசல் சம்பவத்தினால் அப்பாவி மக்கள் உயிரிழந்த சோக சம்பவத்தினால் மிகவும் வருத்தம் அடைந்தேன். மேற்கு ரெயிவே தலைமை பாதுகாப்பு அதிகாரி தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளேன் என பியூஷ் கோயல் கூறிஉள்ளார்.
5 லட்சம் நிதி உதவி
ரெயில் நிலையத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என மராட்டிய மாநில மந்திரி வினோத் தாவ்டே கூறிஉள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவியையும் மராட்டிய அரசு உறுதிசெய்யும் எனவும் குறிப்பிட்டார்.
மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், ரெயில்வே அமைச்சகம் மற்றும் மராட்டிய அரசு இணைந்து விசாரணை நடத்தும், தேவையான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிட்டு உள்ளார்.