பெங்களூரு:
அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கொலைக்கைதி ஒருவர் அதிகாரிகள் புடைசூழ கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது அம்பலமாகியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவரே சிறையில் பிறந்தநாள் கொண்டாடியவர் ஆவார். அரசியல் செல்வாக்கு, பணபலம் கொண்ட இவரது பிறந்தநாளை அமர்க்களப்படுத்த நினைத்த சிறை அதிகாரிகள் துப்பாக்கி வடிவிலான 6 கிலோ எடையுள்ள கேக்கை சொந்த செலவில் வரவழைத்தனர். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் ஸ்ரீநிவாஸை அந்த கேக்கை வெட்ட வைத்த அதிகாரிகள் அகமகிழ்ந்து நின்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பரப்பன அக்ரஹாரா சிறையில் விதிகளை மீறி சசிகலா உள்ளிட்ட கைதிகளுக்கு வசதிகள் செய்து தரப்படுவதாக டிஐஜி ரூபா அளித்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை தான் என்பதற்கு சான்றாக அமைத்துள்ளது கொலைக்குற்றவாளியின் பிறந்தநாள் விழா. பரப்பன அக்ரஹாரா சிறை முறைகேடுகளை விசாரிக்கும் உயர்மட்ட குழு கொலைக்கைதி துப்பாக்கி கேக் வெட்டியதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுமா என கேள்வி எழுந்துள்ளது.