சிவாஜி சிலையைக் கடற்கரை சாலையிலிருந்து அகற்றி புதிதாக அமைந்திருக்கும் சிவாஜி மணிமண்டபத்தில் வைக்க எந்தத் தடையும் இல்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடற்கரை சாலையில் உள்ள நடிகர் சிவாஜி சிலையை அகற்றி, அடையாறு அருகே கட்டப்படும் சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதை எதிர்த்தும், அகற்றப்படும் சிவாஜி சிலையை, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் காந்தி - காமராஜர் சிலைகளின் வரி சையில் மாற்றி அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் 'நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை' சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், கடற்கரையிலிருந்து அகற்றப்படும் சிவாஜி சிலையை அவரின் மணிமண்டபத்தில் வைக்கத் தடை போட முடியாது என்று கூறியது. கடற்கரை சாலையிலிருந்து அகற்றப்படும் சிலையை காம ராஜர் சாலையில் வைக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.