ஸபாவின் அரசி பல்கீஸ், இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களைக் காண தனது சேனைகளுடன் புறப்பட்டு, சுலைமான் (அலை) அவர்களின் அரண்மனையை அடைந்தார். சேனைகள் வெளியில் காவலிருக்க, சுலைமான் (அலை) அரசியை மிகுந்த மரியாதையோடும் அன்போடும் வரவேற்று, அரசிக்காக அமைத்திருந்த மேடை அருகே அழைத்து வந்து, அரசியின் அரியணையைச் சுட்டிக்காட்டி, "தங்களின் அரியாசனம் இப்படி இருக்குமா?" என்று கேட்டார். அரசிக்கு தன் கண்களை நம்ப முடியவில்லை. தன் முன் இருப்பது தனது அரியாசனமென்று உணர்ந்தவர். அதனைப் பூட்டி காவலில் வைத்து வந்திருந்தது எப்படி இங்கே வந்திருக்க முடியும் என்று எண்ணியவராக, தமது அரியணை மிகவும் அழகாக மாற்றப்பட்டிருப்பதை இரசித்து வியந்தவராக, தடுமாறியபடி "ம்ம்... ஆமாம், இது என்னுடைய அரியணைப் போலுள்ளது" என்று கூறினார். இறைத்தூதர் சுலைமான் (அலை) சற்றும் தாமதிக்காமல் "இது உங்களுடைய அரியணைதான்" என்று கூறியதும் அரசி அவரை ஆச்சர்யத்தோடு பார்த்தார். "எப்படி இது உங்களுக்குச் சாத்தியமாயிற்று?. நான் இதனை மிகுந்த காவலுக்குட்படுத்தி இருந்தேனே?" என்று பிரமிப்பிலிருந்து மீளாதவராகக் கேட்டார். அதற்கு சுலைமான் (அலை), "உண்மையில் இது தங்களுடைய அரியாசனம்தான். உங்கள் நகரத்திலிருந்துதான் எடுத்து வரப்பட்டது. நீங்கள் விரும்பினால், அதற்கு மிக அருகில் சென்று பார்வையிடுங்களேன்" என்றார்கள்.