img
img

மோடி அரசின் 3 ஆண்டுகால “ஒளிவெள்ளம்” இதுதானா?
வியாழன் 15 ஜூன் 2017 13:14:53

img

பிரதமர் மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த அரசின் சாதனைகளை மக்களுக்குக் கொண்டு செல் லும் வகையில், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் நாடு முழுவதும் பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது. 'மோடி ஃபெஸ்ட்' என்ற பெயரில் நடைபெறும் கண்காட்சியில், மூன்றாண்டுகளில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள், முடித்துள்ள வளர்ச்சிப் பணிகள், விவசாயிகளுக்கான பல்வேறு சலுகை அறிவிப்புகள் என எண்ணற்ற அம்சங்கள் இடம்பெற்று, மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. அரசின் சாதனைகளை பல்வேறு மத்திய அமைச்சகங்களும் புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டு வருகின்றன. இதில், நாம் கவனிக்க வேண்டிய மிகவும் முக்கியமான, நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய உள்துறை அமைச்சகம் தனது சாதனையாக இந்திய எல்லைப்பகுதியில், 647 கிலோ மீட்டர் தொலைவுக்கு, தீவிரவாத ஊடுருவலைத் தடுக்கும் வகையில், ஒளிவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து இருப்பதுதான். ஒளிவிளக்குகள் ஜொலிக்கும் எல்லைப்பகுதியின் வண்ணப்புகைப்படத்தையும் உள்துறை வெளியிட்டுள்ளது. ஆனால், எந்த நாட்டின் எல்லை என்று மட்டும் கேட்டுவிடக்கூடாது. அதில்தான் சிக்கல் தொடங்குகிறது. ஒளிரும் வண்ண விளக்குகளுடன் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புகைப்படம் ஸ்பெயின் - மொராக்கோ எல்லைப்பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரியவந்துள்ளது. சாம் ஜாவித் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் இத்தகவலை ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளார். "இந்திய எல்லையில் மோடி அரசு மேற்கொண்ட பணிகளைப் பார்த்தால், நீங்கள் பெருமை அடைவீர்கள்; மிகவும் பாராட்டுவீர்கள்" எனும் கவர்ச்சிகரமான தலைப்புடன் உள்துறை அமைச்சக இணையதளத்தில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. "இந்திய எல்லையில், மோடி அரசு 647 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒளிவிளக்குகளை அமைத்துக் கொடுத்து, பணிகளை நிறைவேற்றியிருப்பது இந்திய மக்களைப் பெருமையடையச் செய்கிறது" என்று குறிப்பிட்டு, அதற்கான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. "பார்ப்பதற்கு என்னவோ அந்தப் புகைப்படங்கள் மிகவும் அழகாகவும், இந்திய எல்லைப்பகுதியைப் போன்றே காட்சியளித்தாலும், நிலப்பகுதியை உற்று நோக்கும்போது, அது இந்திய எல்லைபோன்று தெரியவில்லை. மிகவும் குறைந்த தொலைவில் கடலைப் பார்க்கும்படியாக அந்த புகைப்படம் உள்ளது. எனவே, அது போலி புகைப்படம் என்று நான் உணர்ந்தேன். இதையடுத்து, அதுதொடர்பாக மேலும் ஆய்வு செய்தபோது, அது போலி என்பது உறுதிப் படுத்தப்பட்டது" என்கிறார் கட்டுரையாளர். அவர் மேலும் தெரிவிக்கையில், "2014 ஆம் ஆண்டிலேயே இந்திய எல்லையில் ஒளிவிளக்குகள் அமைக்கப்பட்டதாக வெளியான செய்திகள் நினைவுக்கு வரவே, அதுபற்றி, மேலும் தகவல்களை திரட்டத் தொடங்கினேன். ஆழமாக யோசித்து எல்லைப்பகுதி குறித்து உள்துறை அமைச்சக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களை முழுவதுமாகப் படித்தேன். இந்த சாதனை ஒரு ஆண்டிலா அல்லது மூன்று ஆண்டிலா என்று ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த மூன்று ஆண்டில், எல்லையில் விளக்குகள் அமைக்கப்பட்டதாகத் கூறப்பட்டிருந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு, என்.டி.டிவி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்திகளும் வெளியாகின. உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவரை மேற்கொள்காட்டி வெளியிடப்பட்ட அந்த செய்திகளில், ஒரு ஆண்டில் எல்லைப்பகுதிகளில் விளக்குகள் அமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இது வரை இல்லாதவகையில், நாட்டிலேயே இதுபோன்ற ஒளிவிளக்குகள் அமைக்கப்பட்டிருப்பது முதல்முறை என்று அந்த செய்திகள் தெரிவித்தன. ஆனால், எல்லையில் முந்தைய நிலை என்ன என்பதுபற்றி தெரிவிக்கப்படவில்லை. எனவே, அதன் உண்மைத்தன்மை பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவு செய்தேன். உள்துறை அமைச்சகம் வெளியிட்டது போன்ற புகைப்படங்களை நான் எங்கேயோ பார்த்ததுபோன்று தோன்றியது. உள்துறை அமைச்சகத்தின் ஆண்டறிக்கையில் 45-வது பக்கத்தில், "எல்லையோரத்தில் ஒளிவிளக்குகள்" என்ற தலைப்பில் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. "நமது எல்லைப்பகுதியை ஒட்டி ஒளிவிளக்குகள்" என்று குறிப்பிட்டிருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளலாம். அந்த புகைப்படமும், அரு காமையில் உள்ள நீர் நிலையும் எனக்கு ஏதோ ஒரு உணர்வை தூண்டின. அப்போதுதான், அந்தப் புகைப்படம் ஸ்பெயின் - மொராக்கோ எல்லையில் இரு நாடுகளையும் பிரிக்கும் கடல் பகுதியை ஒட்டி, அமைக்கப்பட்டிருந்த ஒளி விளக்குகள் என்று எனக்குத் தெரியவந்தது. ஆப்பிரிக்காவின் வடக்குக் கடற் கரையோரம், ஸ்பெயினை ஒட்டிய பகுதிகளில் அமைக்கப்பட்ட ஒளி விளக்குகள் அவை என்பதும், இந்தப் புகைப்படம் ஸ்பெயின் புகைப்பட கலைஞர் 'ஜாவியர் மோயனோ'-வால், கடந்த 2006 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது என்பதையும் கண்டறிந்தேன். ஏதாவதொரு இணையதளத்திலோ அல்லது வாட்ஸ் அப் தகவலாகவோ அந்தப் புகைப்படம் இடம்பெறவில்லை. உள்துறை அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையில் போலியான புகைப்படம் இடம்பெற்றிருப்பதுதான் மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியது. இதுபோன்ற போலியான தகவலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றொரு இணையதளத்திலும் இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2016 ஆம் ஆண்டு வெளியான தகவலில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. உள்துறை அமைச்சக தகவலின்படி, எல்லையில் விளக்குகள் அமைக்கும்பணி 2003 ஆம் ஆண்டு தொடங்கியதாகவும், 2013-2014-ஆம் ஆண்டு அறிக்கை யில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஒரு குறிப்பிட்ட பகுதி தவிர அனைத்துப் பகுதிகளிலும் விளக்குகள் அமைக்கப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில் 62 சதவீதம் எல்லையோரம் விளக்குகள் அமைக்கும் பணி நிறைவடைந்ததாகவும், மொத்தம் 647 கிலோ மீட்டரில் மோடி அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி 45 கிலோ மீட்டரும், எஞ்சிய பகுதி பங்களாதேஷ் எல்லையை ஒட்டியும் விளக்குகள் அமைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் 2011 ஆம் ஆண்டிலேயே ஏறக்குறைய விளக்குகள் அமைக்கும் பணி நிறைவடைந்ததாகவும், அதுதொடர்பான புகைப்படத்தை நாசா எடுத்து அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே ஆயிரத்து 861 கிலோ மீட்டர் தொலைவிலான இந்திய எல்லையில் ஒளிவிளக்குகள் அமைக்கப்பட்டு விட்டது. புகைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, உள்துறை அமைச்சகம் ஏன் நம் எல்லையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தவிர்த்து விட்டு, மற்ற நாட்டின் எல்லையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு தவறான தகவலை வெளியிட்டுள்ளது. அரசின் அதிகாரபூர்வ இணையதளத்திலேயே இதுபோன்ற போலியான புகைப்படம் வெளியிடப்பட்டால், போலியான செய்திகளை வெளியிடும் இணையதளங்களுக்கும் அரசுத்துறை இணையதளங்களுக்கும் என்ன வேறுபாடு?" என கட்டுரையாளர் கேள்வி எழுப்பியுள்ளார். 'அனைத்துத் துறைகளிலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி' என்பதே மத்திய அரசின் இலக்கு, 'புதிய இந்தியாவைப் படைப்போம்' என் றெல்லாம் சாதனைகளாகப் பலரும் தெரிவித்து வருவதும், இதுபோன்ற போலியான புகைப்படங்களையும், பொய்யான தகவல்களையும் வெளியிடுவது போன்றது தானா? என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுகிறது. "ஒளிர்கிறது இந்தியா" என்று தெரிவிக்கும் மத்திய அரசின் விளம்பரங்களும், எல்லைப்பகுதியில் ஒளிரும் விளக்குகள் புகைப்படம் போன்று போலியானவைதானா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. சிலரை சில காலமும், பலரை பல காலமும் ஏமாற்றலாம். ஆனால், நாட்டு மக்களை தொடர்ந்து ஐந்து ஆண்டுகாலமும் ஏமாற்ற முடியாது என்பதை மத்திய ஆட்சியாளர்கள் உணர்ந்தால் அவர்களுக்கு நல்லது!

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img