img
img

காவியங்கள் தந்த தமிழகமே! நீ காவி மயம் ஆனதேனோ!
திங்கள் 12 ஜூன் 2017 14:20:28

img

வாக்களிக்கும்போது பெரும் வரலாற்றுத் தவற்றை செய்துவிட்ட தமிழக மக்கள் இன்று வரலாற்றில் இல்லாத அழுக்காறு நிறைந்த இழுக்கான ஆட்சிக் குள் சிக்கியிருப்பது இனி வரலாறாகப் போகிறது. தமக்கென ஒரு தலைவன் இல்லாத, தலைகள் மட்டும் தலைமைகளாக சுற்றித்திரிகின்ற பெரும் தலை வலி அரசியலைத் தமிழகம் சந்திக்கும் என்று இந்தியாவின் எந்தத் தலைமைகளும் நினைத்திராது. சினிமாவில் மட்டும் சிந்திக்கும் அரசியலை கொடுக்கின்ற தமிழகத்திற்கு நிஜத்தில் ஒரு நல்ல அரசியலை கொடுக்க தகுதியில்லை. மாரித் தவளைகள் போல் மழைவந்ததும் விடிய விடிய கத்தி கத்தி விடிந்ததும் வயிறு வெடித்து செத்துத் தொலைவதுபோல்தான் தேர்தலிலும், நாடாளுமன்றத்திலும் ஆளுக் காள் அரசியலைப் பேசிப் பேசி கத்திக் கதறி தங்கள் அரசின் கதையை முடித்திருக்கின்றனர் தமிழக மக்கள். சமூகப் பொறுப்போடும் அக்கறையோடும் எவன் தலையெடுக்க முற்படுகிறானோ அவனை தட்டிக் கொடுப்பதற்குப் பதில் அவனது தலையைக் குட்டி, குட்டிச்சுவராக்கிவிட சாதிவாதம், இனவாதம், பயங்கரவாதம் என எந்த வாதத்தையாவது முன்வைத்துவிட்டு இன்னும் திராவிடக் கட்சிகளை மட்டும் அணைத்துப் பயணிக்கிற மூடர் கூட்டமாக தமிழகம் இருக்கும்வரை கடவுளால் கூட நல்ல தலைமையைப் பெற்றுத் தரமுடியாது. ஏர் உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடுமாம் என்கிற கதையாக மோடி அரசின் லீலைகளில் ஆடி அடங்கிப் போயிருக்கிறது தமிழகத்தின் மூச்சு. அதனால்தான் காவியங்கள் பல படைத்த தமிழகம் இன்று காவி அகம் ஆகிறது. இதனையே பாஜகவின் தமிழகத் தலைவி தமிழிசை குறிப்பிடுகிறார் இனி தமிழகம் காவி மயமாகும் என்று. ஜெயலலிதா செய்தது மாபெரும் ஊழல் என்கிறது உச்ச நீதிமன்றம். அவர் மரணித்ததால் தண்டனை தவிர்க்கப்படுகிறது. கூட இருந்தவர்கள் சிறைக் கைதியாகியிருக்கின்றனர். ஊழலரசு வளர்த்த, ஊழலில் பெரும் தலைகள் மத்திய அரசிடம் மாட்டியிருக்கிற, அடிக்கடி உடைந்து ஒட்டுகின்ற அந்த அர சியல் கட்சி அதி முகவை இன்னுமா நம்பியி ருக்கிறது தமிழகம்? கேவலம்! அபத்தம்! அரசியல் அசுத்தம்! தமிழகத்தில் எந்தத் தேர்தலிலும் வாக்குச் சேகரி ப்பதற்கே வெட்கி நடக்கின்ற, இப்படி ஒரு கட்சி தமிழகத்தில் இருக்கிறதா என்பதே பலருக்குத் தெரி யாமலிருந்த, தேர்தலில் எந்த இடத்தையும் கைப்பற்றமுடியாத பாஜக இன்று தமிழகத்தில் ஆழ வேரூன்றியிருக்கிறதே! இது யார் செய்த தவறு? ஜெயா என்ற ஒரு பெண்ணால் ஒரு ராஜ்ஜியத்தையும், நூற்றுக்கணக்கான ஆண் அமைச்சர்களையும், தமிழ் நாட்டு மக்களையும், எதிர்க் கட்சிகளையும், எதிர்ப்பு போராட்டங்களையும், மத்திய அரசையும், டாஸ் மாக்குகளையும், ஊழலையும் என அத்தனையையும் ஒரே கோட்டில் கட்டி ஆள முடிந் திருக்கிறது .ஆனால் தற்போது அதிமுகவை இன்றைக்கு மட்டும் ஸ்திரமாக வைத்திருக்க முடியாமல் தள்ளாடுகின்றனர் அங்கிருக்கும் ஜென்மங்கள். இன்று இரவு முடிந்து நாளை விடிந்தால் கட்சி என்னவாகும் என்பதை கட்டிக் காப்பதிலேயே தூக்கம் தொலைத்து மக்களுக்கான அரசியல் ஆக்கம் மறந்து தடுமாறுகின்றனர் அதிமுக பினாமிகள். ஜெயா இருக்கும்போது ஒரு கட்சி அதற்குப் பெயர் இராணுவக் கட்சி. இறந்த பின் இரு கட்சி. அதற்குப் பெயர் ஓபிஎஸ், ஈபிஎஸ் கட்சி. இப்போது 3 கட்சி. அதற்குப் பெயர் சசிகலா கட்சி, மத்திய அரசின் கைப்பாவை கட்சி. நாளை நான்காக உடையும். நாடு நலிவிழந்து போகும்!!! மக்களைப் பற்றி என்ன சிந்தனை இருக்கிறது இவர்களுக்கு? மத்திய அரசைப் பற்றி என்ன கரிசனை இவர்களுக்கு? 105 எம்எல்ஏக் களுடன் எடப்பாடியும், 11 எம்எல்ஏக்களுடன் பன்னீரும், 29 எம்எல்ஏக்களுடன் தினகரனும் என ஆளுக்காள் முட்டை இட்டு குஞ்சு பொரித்து தங்களுடன் கூட்டித் திரியும் மட்ட அரசியலும், மடமைத்தனமான சட்ட மன்றப் பேச்சுகளும் தமிழ்நாட்டில் மிகப்பெரும் கேலிக்கூத்தாகிவிட்டனவே! தானும் படுக்கமாட்டான், தள்ளியும் படுக்கமாட்டான், ஆனால் பாயைச் சுருட்டிப் கக்கத்தில் வைத்திருப்பானாம் என்ற பழமொழி இவர்களுக்காகவே எழுதப்பட்டதுபோல நெறிபிறழாத அரசியல் செய்யும் தமிழகத் தலைமைகள். எங்களுக்கு வாய்ப்புத் தாருங்கள் நாங்கள் ஆண்டு காட்டுகிறோம் என இளைய சமுதாயம் துடிக்கிறது. இப்படித்தான் எங்கள் ஆட்சி முறை என்ற வரை யறை கொண்டு தமிழர் தாயகத்தை தமிழர்தான் ஆள வேண்டும் என நாம் தமிழர் அமைப்பு தவிக்கிறது. மிகச் சிறந்த அரசியல் ராஜ தந்திரங்களை வகுத்து திறனாய்வு செய்து மாபெரும் திட்டங்களை அறிவிக்கிறார் அன்புமணி ராமதாஸ். மேலும் சகாயம் போன்று அப்துல் கலாம் வாழ்ந்த அந்த மண் ணில் இன்னும் எத்தனை தகுதியான பேராளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வழிவிட அரசியலுக்கும் மனமில்லை,நோட்டுக்காக ஓட்டுப் போடும் சுட்டு விரலுக்கும் எண்ணமில்லை. உன் மனைவியை இன்னொருவன் ஊடல் கொள்ள உனக்கு இஷ்டமானால், உன் மாநிலத்தை இன்னொரு மாநிலத்தான் ஆள நீ விட்டுக்கொடுத்து விலகி நின்று வேடிக்கை பார் என்பது தமிழகத்தில்தான் ஒலிக்கிறது. அரைகுறை ஆடையாக அம்மணமாய் உனக்கு சோறுபோட்ட விவசாயி வீதியில் கிடக்க, மோடி அவர்களைத் தவிர்த்து மேடையில் அரைகுறையாக ஆடும் நடிகைகளுடன் கூடிப் பேச, பாலை உற்பத்தி செய்வதற்குப் பதில் சாராயத்தை காய்ச்சி அரைத் தமிழ்நாட்டை ஆட வைக்கும் அரசை நீ நம்ப, கலைஞரின் வைரவிழாவை தமிழ்நாட்டின் விடுதலை நாள் போல நீ நினைத்துக் கொண்டாட, ராகுல் காந்தியின் வருகையை மகாத்மா காந்தியின் மறுபிரவேசம் போல் நீ மாலை சூடி மகிழ்விக்க, மதவாதமும் இனவாதமும் மாறி மாறி நீ பேச மத்திய அரசு மாட்டிறைச்சிக்கே தடை போட என எல்லா அவலங்களையும் நீ சுமப்பது யார் செய்த குற்றம்? மானத் தமிழகத்தானே! நீ இனத்தால் ஒன்று படு. மதம் மறந்து அரசியல் எடு. உன் விரல் நுனியில் இருந்து ஆட்சிக்கான மாற்றம் தொடங்கு! மிதிபட்டும் வலி இல்லை உனக்கு! ஏனெனில் வலிக்குமென்று தெரிந்தும் வழிவழியே டாஸ்மார்க் இருக்கு! தரம் கெட்ட அரசைத் தூக்கியெறி! தகர் தடை! தமிழ்நாடு தமிழர் நாடாகட்டும்!

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img