வியாழன் 12, டிசம்பர் 2024  
img
img

இன்னும் வயிற்றைக் கட்டி, வாயைக்கட்டி வாழ வேண்டுமா? மலிவான இடம் சிக்கனமான செலவு சாமானிய மலேசியர்களின் நிலை
வியாழன் 15 செப்டம்பர் 2022 15:56:40

img

கோலாலம்பூர், செப். 10

அனைத்து வகை கடன்களுக்குமான அடிப்படை வட்டி விகிதாச்சாரத்தை 2.50 விழுக்காடாக மத்திய வங்கி அதிகரித்திருப்பதை தொடர்ந்து மலேசியர்களின் கொள்முதல் சக்தி சரிவடைந்துள்ளது என்றும் மலிவான இடங்களைத் தேடி, சிக்கனமாக செலவு செய்யும்  நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

பொருட்களை அவர்கள் தொடர்ந்து வாங்குவதை நிறுத்த முடியாது. ஆனால், குறைந்த வருமானம் பெறும் பிரிவினர் இரவுச் சந்தைகள் அல்லது அங்காடி கடைகள் என மலிவாகப் பொருட்களை வாங்கக்கூடிய இடங்களைத் தேர்வு செய்யக்கூடும் என கூட்டரசுப் பிரதேச மலாய் அங்காடி மற்றும் சில்லறை வணிகர்கள் சங்கத்தைச் சேர்ந்த முகமட் அப்துல்லா கூறுகிறார். இந்த வட்டி விகித அதிகரிப்பால் உணவு மற்றும் அடிப்படை பொருட்கள் வியாபாரிகளுக்கு தொடர்ந்து வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். தொழிற்சாலைகளிலிருந்து பொருட்களை வாங்கி விற்பவர்கள் இதன் தாக்கத்தை அதிகமாக உணர்வார்கள். மேலும், நடுத்தர வருமான வாடிக்கையாளர்கள் செல்லும் வர்த்தக மையங்கள், பேரங்காடிகள் ஆகியன அதன் விளைவுகளை உணரும் என்றும் அவர் கூறினார்.

றைந்த வருமானம் பெறும் பிரிவினரைப் பொறுத்த வரையில் அவர்கள் கையைக் கட்டி, வாயைக்கட்டி சிக்கனமாக வாழும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று அவர் மேலும் கூறினார். உரிமங்கள், உணவு டிரக்குகள் மற்றும் வர்த்தக இடங்களுக்கான தேவை இப்போது அதிகரித்துள்ளது என்றும் கூறிய முகமட் அப்துல்லா, மக்கள் அதிகமாக சில்லறை வணிகங்களில் ஈடுபடுவதை இது காட்டுகிறது. நிதி உதவிகளை வழங்குவது போக, பயனீட்டாளர்கள் செலவு செய்வதையும் அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும் என அவர் கருத்துரைத்தார்.

இதனிடையே, குறைவாக செலவு செய்வது மட்டுமின்றி, மலிவான பொருட்களைத் தேடும் நிலைக்கு பயனீட்டாளர்கள் ஆளாவதால், வங்கிக் கடன்களுக்கான அடிப்படை வட்டி விகித அதிகரிப்பு அவர்களின் வாங்கும் சக்தியை மேலும் குறைத்துவிடும் என்று சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக உரிமையாளர்கள் கூறுகின்றனர். இவ்வாண்டின் இரண்டாவது கால் பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மலேசியா 8.9 விழுக்காடு அதிகரிப்பை பதிவு செய்தது. இது முந்தைய இதே காலகட்டத்தை விட 5.0 விழுக்காடு அதிகரிப்பாகும்.  கோவிட்-19 தொற்று பாதிப்பிலிருந்து மீட்சியடைந்து கொண்டிருக்கும் மலேசியர்களுக்கு இது நற்செய்தி என்றுதான் சொல்ல வேண்டும்.

2022 இன் முதல் ஆறு மாதங்களில் மொத்தத்தில் பொருளாதாரம் 6.9 விழுக்காடு வளர்ச்சிக் கண்டது. ஆனால், இந்த எண்ணிக்கை ஊக்குவிக்கும் வகையில் இருந்தாலும் நாடு முழுவதும் உள்ள எஸ்.எம்.இ. நிறுவனங்கள் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கின்றன. கோவிட்-19 தொற்றுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதிலும் விற்பனை இன்னும் மோசமாக உள்ளது என்பதே இதற்கு காரணமாகும் என எஸ்.எம்.இ. நிறுவனங்கள் கருதுகின்றன. 2023 இல் மிகப்பெரிய பணவீக்கம் ஏற்படும் என சில பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இவ்வாறானால் பயனீட்டாளர்கள் செலவுகளைக் குறைத்துக் கொண்டு, சேமிப்பை அதிகரிப்பார்கள் எனஅவர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2020 ஜூலை மாதம் கோவிட்-19 தொற்றுப் பரவல் உச்சத்தில் இருந்தபோது கடன் வட்டிக்கான அடிப்படை விகிதாச்சாரத்தை 1.75 விழுக்காடாக மத்திய வங்கி குறைத்தது. மலேசியாவின் மிகவும் குறைவான அளவாக இது கருதப்படுகிறது. இவ்வாண்டு மே மாதம் வரையில் இது நிலைநிறுத்தப்பட்டது. கடந்த மே மாதத்தில் வட்டி விகிதாச்சாரம் 1.75 விழுக்காட்டிலிருந்து 2 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டது. பிறகு கடந்த ஜூலை 6 ஆம் தேதி 2.25 விழுக்காடாக மீண்டும் அதிகரிப்பை மத்திய வங்கி அறிவித்தது. நேற்று இது 2.50 விழுக்காடாக மீண்டும் அதிகரிப்பு செய்யப்பட்டது.

வரும் நவம்பர் மாதம் மேலும் ஓர் அதிகரிப்பு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சந்தையில் பணப்புழக்கத்தை குறைப்பதன் வாயிலாக மலேசியாவின் பணவீக்க விகிதாச்சாரத்தைக் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என மத்திய வங்கி கூறியுள்ளது. மத்திய வங்கி அதன் இந்நடவடிக்கையைத் தற்காத்துப் பேசலாம். ஆனால், வங்கிகளில் கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தும் சாமானிய மக்களுக்குத்தான் சுமை அதிகரிக்கும் என்பதால் மத்திய வங்கியின் இக்கூற்று விவாதத்திற்கு உட்பட்டது என எஸ்.எம்.இ. நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.  

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img