திங்கள் 02, டிசம்பர் 2024  
img
img

ஒரு குடும்பம் ஒரு வீடு பி40; எம்40 மக்களுக்கான வாங்கும் சக்திக்கு ஏற்ற வீடமைப்புத் திட்டம்
திங்கள் 14 பிப்ரவரி 2022 15:18:11

img

கோலாலம்பூர், பிப். 13-

நாட்டிலுள்ள பி40 மற்றும் எம்40 பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்காக அவர்கள் வாங்கும் சக்திக்கு ஏற்ற விலையிலான வீடமைப்புத் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது. ஒரு குடும்பம் ஒரு வீடு என்ற கருப்பொருளிலான இத்திட்டம் முறையாக நிறைவேறுவதற்கான செயல்முறைகளை அரசாங்கம் வகுத்து வருகிறது என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளார்.

அவ்விரு பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் வீடுகள் வாங்குவதை எளிதாக்கும் பொருட்டு நிதியளிப்பு முறைகளை பேங்க் நெகாரா மலேசியா மறுஆய்வு செய்ய வேண்டும். மக்கள் வீடமைப்புத் திட்டங்களிலும் (பி.பி.ஆர்.) மற்ற வாங்கும் சக்திக்கு ஏற்ற வீடமைப்புத் திட்டங்களிலும் வீடுகளை வாங்குவோருக்கான கடனுதவி வசதிகளை நிதிக்கழகங்கள் எளிமையாக்குவதை இது உறுதி செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.

இவற்றின் கீழ் நேரடியாக வீடுகளை வாங்குதல் மற்றும் வாடகை வாயிலாக வீட்டுரிமையாளராவதற்கு முன்னுரிமை வழங்கப்படும். மக்களின் நடப்பு தேவைகளை கவனத்தில் கொண்டு பி.பி.ஆர். வீடுகளுக்கு புதிய வழிமுறைகள் வரையப்படும். இவற்றுக்கு இணையத் தொடர்பு, ஃபைபர் இணைப்பு, பொது போக்குவரத்து, தரமான வடிவமைப்பு போன்ற வசதிகளுக்கு இங்கு சிறப்பு கவனம் தரப்படும்.

மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கங்கள், தனியார் வீடமைப்பு நிறுவனத்தினரின் ஈடுபாட்டுடன் 12 ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 500,000 வாங்கும் வசதியுடைய வீடுகள் நிர்மாணிக்கப்படும். அதிகரித்து வரும் மக்கள் தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு போதுமான, அதே சமயம் தரமான வீடுகள் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும். ஆதலால், ஹோப் எனும் வீட்டுரிமைத் திட்டத்தை வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சு அறிமுகம் செய்துள்ளது.

 

திட்டத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்

இதன் வழி, வீட்டு வசதி மேம்பாடு, நிதியுதவிக்கான மேலும் முழுமையான ஒரு சூழல் உறுதி செய்யப்படுவதுடன் மலேசியர்கள் வீட்டுரிமையாளர்களாகும் திட்டத்திற்கு உறுதுணையாக இருக்கும் என சப்ரி யாக்கோப் கூறியுள்ளார்.

மேலும்:

* இளைய தலைமுறையினருக்காக வாங்கும் சக்திக்கு ஏற்ற வீடுகளை அதிகமாக மேம்படுத்துவதில் அரசாங்கம் அர்ப்பணிப்பு கொண்டுள்ளது;

* எம்40 பிரிவிலிருந்து அதிகமானவர்கள் வீட்டுரிமையாளர் ஆவதை உறுதிப்படுத்துவதற்காக புறநகர்கள் மற்றும் சிறிய நகரங்களில் வாங்கும் சக்திக்கு ஏற்ற வீடுகளை நிர்மாணிப்பது.

 

இலக்கு நிறைவேறும் வழிவகைகள்

ஒரு குடும்பம் ஒரு வீடு என்ற இலக்கு நிறைவடைவதை உறுதி செய்வதற்கு:

* அரசாங்கம் மானியங்களை வழங்கும்;

* மாநில அரசாங்கங்கள் நிலங்களை ஒதுக்கீடு செய்யும்;

* வங்கிகள் எளிதான நிதியுதவிகளை வழங்கும். பி.பி.ஆர். வீடுகளும் மற்ற வாங்கும் சக்திக்கு ஏற்ற வீடுகளும் நியாயமான விலையில் விற்கப்படுவதை இவற்றின் வழி உறுதி செய்ய முடியும்.

வாங்கும் சக்திக்கு ஏற்ற தேசிய வீடமைப்பு மன்றத்துடனான ஒரு சந்திப்புக்குப் பிறகு சப்ரி யாக்கோப் ஓர் அறிக்கையில் இவ்விவரங்களைக் கூறியுள்ளார். இதனிடையே, ஒரு குடும்பம் ஒரு வீடு என்ற அரசாங்கத்தின்  திட்டத்தை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

 

மக்களிடையே வரவேற்பு                                        

வாங்கும் சக்திக்கு ஏற்ற தேசிய வீடமைப்பு மன்றத்தின் வழி அரசாங்கம் பரிந்துரை செய்திருக்கும் ஒரு குடும்பம் ஒரு வீடு நிச்சயமாக வரவேற்கக்கூடியது என மக்கள் கருதுகின்றனர்.

பி40 மற்றும் எம்40 பிரிவைச் சேர்ந்த வசதி குறைந்த மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் சக்திக்கேற்ப வீடுகளை வாங்கிக் கொள்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் பலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என சுங்கை, துரோலாக், ஈப்போ வட்டாரத்தைச்சேர்ந்த சமூக ஆர்வலர்களான சங்கர், பாலநாராயணன், கிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

வருமானம்  குறைந்தவர்களும் தங்களுக்கென வீடுகளை வாங்கிக் கொள்வதற்கு இத்திட்டம் அரிய வாய்ப்பாக அமையும் என்கின்றனர்.

 

ஏழைகளுக்கு அரிய வாய்ப்பு

இந்த வீட்டுடைமைத் திட்டத்தின் வழி நாடு தழுவிய நிலையில் வசதி குறைந்தவர்களும் வாங்கிக் கொள்ளும் விலையில், தரமான 5 லட்சம் வீடுகள் கட்டப்படவிருப்பது மகிழ்ச்சியளிக்கும் தகவலாகும் என்றனர்.

பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு இத்தகைய வீடுகளைக் கட்டுவதற்கு  மத்திய மாநில அரசுகளுடன் பேங்க் நெகாராவும் உதவிகள் வழங்க முன்வந்திருப்பது ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு எனும் திட்டம் வெற்றி பெற உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தனர்.

வீடுகளை வாங்குவதற்கான கடன் வழங்குவதில் நிபந்தனைகளை வங்கிகள் தளர்த்த வேண்டும், வட்டியைம் குறைக்க வேண்டும். கடன் பெறுவதில் மக்களுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வங்கிகள் வழங்க வேண்டும். குறிப்பாக, கோவிட்-19 தொற்று பரவலின் காரணமாக பொருளாதாரம் பாதிப்படைந்த நிலையில் பி40 மற்றும் எம்40 பிரிவு மக்கள் அவதியுற்று வருவதால் இதுபோன்ற உதவிகள் அவசியமாகிறது என சங்கர், பாலநாராயணன், கிருஷ்ணன்  மூவரும் கருத்துரைத்தனர்.

 

நிலைமை மாற வேண்டும்

தற்போதைய சூழ்நிலையில் வீடுகள் வாங்குவது மக்களுக்கு எட்டாத கனியாக இருந்து வருகிறது. இந்நிலை மாற வேண்டுமானால் அரசாங்கம் சொன்னதைச் செய்ய வேண்டும். அவர்களுக்கு உதவும் பரிந்துரைகள் முறையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

பிரதமர் சப்ரி யாக்கோப் கூறியிருப்பதை போல தேசிய வங்கியான பேங்க் நெகாரா இவ்விஷயத்தில் தலையிட வேண்டும் என அவர்கள் மேலும் கூறினர்.   

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img