வியாழன் 12, டிசம்பர் 2024  
img
img

மலேசியப் பொருட்களை வாங்குவோம் சரியான நேரத்தில் சரியான திட்டம்
வெள்ளி 22 அக்டோபர் 2021 14:12:20

img

கோலாலம்பூர், அக். 22-

கோவிட்-19 தொற்றுப் பரவலின் காரணமாக நாடு முழுவதும் பொருளாதார நிலைமை மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு நிலையில் மலேசியப் பொருட்களை வாங்குவோம் (கே.பி.பி.எம்.) எனும் இயக்கத்தை உள்நாட்டு வர்த்தக, பயனீட்டாளர் விவகார அமைச்சு வலியுறுத்தி வருகிறது.

இவ்வியக்கம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டாலும் கோவிட்-19 தொற்று தாக்கத்தை கருத்தில் கொண்டு இவ்வாண்டும் தொடரப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் கே.பி.பி.எம். இயக்கத்தின் அமலாக்கத்தின் வாயிலாக சில்லறை வணிகத்துறைக்கான 326,000க்கும் மேலான கையிருப்பு கண்காணிப்பு பிரிவுகள் (எஸ்.கே.யு. எனும் குறியீடு) சம்பந்தப்பட்ட 330 கோடி வெள்ளி பெறுமானமுள்ள விற்பனைகள் பதிவாகின. உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் விவகாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி அண்மையில் இவ்விவரங்களை வெளியிட்டார். அதே சமயம், இணையம் வாயிலான விற்பனை தளங்கள் வாயிலாக 14 கோடியே 50 லட்சம் வெள்ளிக்கும் மேலான மதிப்புள்ள பொருட்களின் விற்பனையைப் பதிவு செய்தன.

2019 ஆம் ஆண்டின் கணக்குப்படி, எஸ்.கே.யு. குறியீடு வாயிலாக 287 கோடி வெள்ளி பெறுமானமுள்ள பொருட்களின் விற்பனை பதிவானது. இணையம் வாயிலான சந்தைகள் 68 லட்சத்து 40 ஆயிரம்  வெள்ளி பெறுமானமுள்ள விற்பனையை செய்துள்ளன. மலேசிய பொருளாதாரம் தொடர்ந்து அதன் போட்டா போட்டி தன்மையை நிலைநிறுத்தி, கோவிட்-19 சவால்களை எதிர்கொள்ளும் சக்தி உடையதாக மாறுவதை உறுதி செய்வதில் கே.பி.பி.எம். இயக்கம் முன்னணி பங்கை ஆற்றியுள்ளது என மை காயா மந்த் எனும் திட்டத்தை தொடக்கி வைத்த நிகழ்ச்சியில் பேசும்போது அமைச்சர் கூறினார்.

2021 ஆம் ஆண்டுக்கான மலேசியப் பொருட்களை வாங்குவோம் இயக்கத்தை முன்னிட்டு மலேசிய பூமிபுத்ரா வடிவமைப்பாளர் சங்கம் இணையம் வாயிலாக இத்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. மலேசியப் பொருட்களை வாங்குவதை ஊக்குவிக்கும் இயக்கம் கடந்த 1984 இல் தொடங்கப்பட்டது. மலேசியப் பொருட்களை வாங்குவதற்கு மலேசியர்களை ஊக்குவிப்பது மற்றும் உள்நாட்டு தொழில் முனைவர்களின் பொருளாதார வளர்ச்சியில் உதவுவது இதன் பிரதான நோக்கங்கள் ஆகும்.

அனைத்துலக தரத்திற்கு ஏற்ப மலேசியாவிலும் தரமான பொருட்களும் சேவைகளும் உள்ளன என்பதை மலேசியர்களுக்கு உணர்த்தி, அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இவ்வியக்கம் தொடங்கப்பட்டது. இதில் இரண்டு அணுகு முறைகள் அடங்கும். ஒன்றும் ஊடகம் மற்றும் சமூகவலைத்தளங்கள் வாயிலான விழிப்புணர்வு. இரண்டாவது, மலேசிய பொருட்களை வாங்குவோம் இயக்கத்தின் அமலாக்கம். இதன் மற்ற அம்சங்கள் கீழ்வருமாறு:

* மலேசியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும்  சேவைகளுக்காக மலேசியர்கள் மத்தியில் நாட்டுப்பற்றை வளர்ப்பது;

* உள்நாட்டுத் தேவைகளுக்காக உள்நாட்டுப் பொருட்களின் கொள்முதலை அதிகரிப்பதன் வாயிலாக உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது;

* உள்நாட்டுத் தேவைகளை மேம்படுத்துவதன் வாயிலாக சந்தைத் தொடர்புகளை விரிவாக்கம் செய்வதில் தொழில் முனைவர்களுக்கு உதவுவது;

* அனைத்துலக ரீதியிலான தரத்திற்கு ஈடாக உள்ள மலேசிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பது ஆகியன அவற்றுள் அடங்கும்.

கோவிட்-19 காரணமாக மந்தமான நிலையில் உள்ள நாட்டின் பொருளாதாரத்தை இந்த இயக்கத்தின் வாயிலாக மேம்படுத்த முடியும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. நாட்டிலுள்ள பேரங்காடிகள், வர்த்தக மையங்கள், இணைய வர்த்தகத் தலங்கள் ஆகியன தற்போது மலேசியப் பொருட்களை வாங்கும் இயக்கத்திற்கு பேராதரவை தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பயனீட்டாளரின் கருத்து

* நான் எப்போதும் மலேசிய தயாரிப்பு பொருட்களையே வாங்குவேன். அவை தரமானவை என்பதில் எனக்கு ஐயம் இருந்ததில்லை. விலையும் நியாயமாகவே இருப்பதால் நான் அவற்றை அதிகமாக நாடுகிறேன் என்கிறார் ஒரு குடும்ப மாதான ரேவதி கோபால்.

மலேசியாவில் தயாரிக்கப்படும் சரும பாதுகாப்பு மற்றும் அழகு சாதனங்கள் கூட தரமானவையாக இருக்கின்றன. நான் ஆரம்பத்தில் வெளிநாட்டு தயாரிப்புகளையே அதிகமாகப் பயன்படுத்தி வந்தேன். ஆனால், இப்போதெல்லாம் மலேசிய அழகு சாதனங்கள், சரும பாதுகாப்பு பொருட்களையே அதிகமாக பயன்படுத்துகிறேன் என்பது அவரின் கருத்தாகும். நான் ஒரு மலேசியன். மலேசிய தயாரிப்பிலான பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என நினைக்கிறேன். மலேசியர்கள் செலவிடுவதன் வாயிலாக நம் நாட்டின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சியடைய வாய்ப்பு உள்ளது. அதிலும், இங்குள்ள வணிகர்களுக்கும் அது மிகப்பெரிய ஊக்குவிப்பாக இருக்கும்.

கோவிட்-19 தொற்று காலத்தில் எல்லா வணிகங்கள் போலவே மலேசிய வணிகர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உதவுவது மலேசியர்களாகிய நமது கடமை அல்லவா? ஆகவே சரியான நேரத்தில் அரசாங்கம் இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளது. நமக்கு நாமே உதவி. அதுதான் இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கம் என்கிறார் ரேவதி.  

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img