வியாழன் 12, டிசம்பர் 2024  
img
img

2021 செப்டம்பர் 30 வரை 384,113 ஆசிரியர்கள் முழுமையான தடுப்பூசி பெற்றுள்ளனர்
செவ்வாய் 05 அக்டோபர் 2021 16:46:31

img

2021 செப்டம்பர் 30 வரை 384,113 ஆசிரியர்கள் முழுமையான தடுப்பூசி பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், அக். 5-

முழுமையான தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆசிரியர்கள் மட்டுமே வகுப்பறையில் கற்றல், கற்பித்தலை மேற்கொள்ளவும் மாணவர்களுடன் நேரடியாகத் தொடர்பு வைத்திருக்கவும் அனுமதிக்கப்படுவர் என்பதை மூத்த கல்வி அமைச்சர் டத்தோ முகமட் ரட்ஸி ஜிடின் திட்டவட்டமாகக் கூறினார்.

இது போக முழுமையான தடுப்பூசியைப் பெற்றுள்ள நிர்வாகக் குழுவினரும் மற்ற பணியாளர்களும் மட்டுமே பள்ளி வளாகத்திற்குள் பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்படுவர் என நேற்று நாடாளுமன்ற மக்களவையில் அவர் தெரிவித்தார். உலுதிரெங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரசாலி இட்ரிஸ் மக்களவையில் எழுப்பிய எழுத்துப்பூர்வமான கேள்விக்கு கல்வி அமைச்சர் பதில் அளித்தார். இதுவரை தடுப்பூசிகளைப் பெற்றுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை, ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் இலக்கு, கோவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்படும் எஸ்.ஓ.பி. விதிமுறைகள் என்ன என்பது குறித்து அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கான பதிலில் ரட்ஸி ஜிடின் மேலும் கூறியிருப்பது:

பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் மத்தியில் கோவிட்-19 தடுப்பூசி நிலவரத்தை மலேசிய கல்வி அமைச்சு அணுக்கமாக கண்காணித்து வருகிறது. 2021 செப்டம்பர் 30 ஆம் தேதி வரையில் மொத்தம் 384,113 பேர் அல்லது 92.8 விழுக்காட்டு ஆசிரியர்கள் முழுமையான தடுப்பூசி பெற்றுள்ளனர். இது தவிர, 59,622 பேர் அல்லது 88.9 விழுக்காட்டு நிர்வாகத்தினரும் 94,725 பேர் அல்லது 80.6 விழுக்காட்டு பொதுப் பணியாளர்களும் முழுமையான தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். பொது பணியாளர்கள் வரிசையில் பாதுகாவலர்கள், துப்புரவாளர்கள், உணவருந்தும் மண்டப பணியாளர்கள், பள்ளி சிற்றுண்டி சாலை பணியாளர்கள் மற்றும் பள்ளி வேன் ஓட்டுநர் ஆகியோர் அடங்குவர்.

பள்ளி மாணவர்களுக்கான கோவிட்-19 தடுப்பூசியைப் பொறுத்த வரையில் அது மொஸ்தி அல்லது அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சு மற்றும் மலேசிய சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. தடுப்பூசி விநியோகத்தையும் பொறுத்துள்ளது. 2022 பள்ளி தவணை தொடங்குவதற்கு முன்னதாக நாடு முழுவதும் 12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட, மாணவர்கள் உள்ளிட்ட  பதின்ம வயதினரில் சுமார் 80 விழுக்காட்டினர் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என்ற சுகாதார அமைச்சின் இலக்கை கல்வி அமைச்சு வரவேற்கின்றது.

குறிப்பாக, பதின்ம வயதினருக்கான கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் 4 மற்றும் 5 ஆம் படிவ மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. இந்த தடுப்பூசி திட்டத்தை கோவிட்-19 சிறப்பு பணிக்குழு மேற்கொள்கின்றது. சரவா மாநிலத்தில் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி இது தொடங்கியது. தொடர்ந்து லாபுவான் கூட்டரசுப் பிரதேசம், சபாவிற்கு மற்ற மாநிலங்களுக்கும் இது விரிவாக்கம் செய்யப்படும். இதனிடையே, பள்ளிகளில் எஸ்.ஓ.பி. விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு பள்ளிகளின் நிர்வாக, செயல்பாடுகள் 3.0 என்ற சிறப்பு வழிகாட்டுதலை கல்வி அமைச்சு தயார் செய்துள்ளது. மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகளில் கீழ்க்காண்பவை அடங்கும்:

* மாணவர்கள் உட்பட பள்ளி வளாகத்திற்குள் உள்ள அனைவரும் முகக்கவரி அணிந்திருப்பதை கட்டாயமாக்குவது;

* வகுப்பறையில் காற்றோட்டம் சுமுகமாக இருப்பதை உறுதி செய்வது;

* குளிரூட்டியை பயன்படுத்தும் வகுப்பறைகளைப் பொறுத்த வரையில் ஆசிரியர்களின் மேற்பார்வையுடன் மாணவர்கள் திறந்த வெளியில் உணவருந்துவதை உறுதி செய்வது;

* முழு தங்கும் வசதியுடனான பள்ளிகளுக்குத் திரும்பும் மாணவர்களுக்கு மூன்று முறை கோவிட்-19 சுயபரிசோதனை செய்யப்படும்; மற்றும்

* தினசரி உறைவிட பள்ளிகளில் நுழைவதற்காகப் பதிவு செய்யும் மாணவர்களுக்கு ஒரு முறை கோவிட்-19 சுயபரிசோதனையை உறுதி செய்வது ஆகியன அவற்றுள் அடங்கும்.

பள்ளி நடவடிக்கைகள் சுமுகமாக மேற்கொள்ளப்படுவதையும் மாணவர்களின் பாதுகாப்பையும் கல்வி அமைச்சு எப்போதும் உறுதி செய்யும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

 கோலப்பிலா துங்கு குர்ஷியா பள்ளிக்கு வருகை

 இதனிடையே, கோலப்பிலாவில் உள்ள துங்கு குர்ஷியா இடைநிலைப் பள்ளிக்கு ரட்ஸி ஜிடின் நேற்று வருகை மேற்கொண்டார். அச்சமயம் நிருபர்களிடம் பேசிய அவர் தடுப்பூசி பெறத்தவறியுள்ள ஆசிரியர்களின் நிலவரம் குறித்து விளக்கம் அளித்தார். ஒரு சில ஆசிரியர்கள் மட்டும் கோவிட்-19 தடுப்பூசியை பெறத் தவறியிருந்தாலும் ஒட்டுமொத்தமாக பள்ளிகளில் கற்றல் கற்பித்தலை சிறிதளவு அது பாதித்துள்ளது என அவர் சொன்னார். நாட்டிலுள்ள 415,000 ஆசிரியர்களில் தடுப்பூசி பெறாதவர்களின் எண்ணிக்கை சுமார் 2,000 மட்டுமே என்றாலும் பள்ளிகளில் நிர்வாகத்தை இது பாதிக்கின்றது என அவர் கருத்துரைத்தார்.

சில பள்ளிகளில் இந்த ஆசிரியர்கள் மட்டுமே குறிப்பிட்ட பாடத்தை போதிப்பவர்களாக இருக்கின்றனர். எனவே, இந்த பள்ளிகளில் குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டும் ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். தடுப்பூசி பெறாத இந்த ஆசிரியர்களை மற்ற இடங்களுக்கு மாற்றுவது ஒரு மிரட்டல் கிடையாது. மாறாக அது பள்ளி நிர்வாகங்கள் சம்பந்தப்பட்டது. மேலும், அரசாங்க பணியாளர்கள் அனைவரும் நவம்பர் முதல் தேதிக்குள் முழுமையான தடுப்பூசியைப் பெற்றிருக்க வேண்டும் என்பது பொதுச் சேவை இலாகாவின் தேவையாகும் என்பதை அவர் நினைவுறுத்தினார். 

 

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img