திங்கள் 06, டிசம்பர் 2021  
img
img

அனைத்துலக மாணவர்கள் கோவிட்-19 பரிசோதனைக்கான செலவுகளை தாங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்நாட்டிற்குள் நுழையும் 72 மணி நேரத்திற்கு முன்னதாக அவர்கள் இப்பரிசோதனையை செய்திருக்க வேண்டும்.
சனி 18 செப்டம்பர் 2021 14:46:02

img

கோலாலம்பூர், செப். 18-

நாடு முழுவதும் உள்ள உயர் கல்விக் கழகங்கள் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கி கட்டங் கட்டமா  மீண்டும் திறக்கப்படவுள்ளன. எனினும், மாணவர்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய எஸ்.ஓ.பி. விதிமுறைகளை உயர் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. முழுமையான கோவிட்-19 தடுப்பூசிகளைப் பெற்றுள்ள மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் மட்டுமே இக்கல்விக்கழகங்களில் அனுமதிக்கப்படுவர் என்பதை அமைச்சு உறுதி செய்துள்ளது. எனினும், இரு தடுப்பூசிகளைப் பூர்த்தி செய்யாத மாணவர்கள் தடுப்பூசி மையங்களில் நேரடியாக சென்று தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள ஆலோசனைக் கூறப்படுகிறது.

மாணவர்கள் மட்டுமின்றி, உயர் கல்விக் கழக வளாகங்களில் உள்ள உணவகங்கள், மளிகைக் கடைகள், வங்கி, மருந்தகம் போன்றவற்றின் பணியாளர்களும் முழுமையான தடுப்பூசிகளைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதை உயர் கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது. கல்விக்கழக வளாகம் மீண்டும் திறக்கப்படும் நிலையில், மாணவர்களின் கற்றல் கற்பித்தல் எவ்வாறு அமைந்திருக்கும்? கற்றல், கற்பித்தல் இரு வழியாக மேற்கொள்ளப்படும். ஒன்று, கல்விக் கழக வளாகங்களில் உள்ள  மாணவர்கள் கலந்து கற்றல், கற்பித்தலை மேற்கொள்ளலாம். இரண்டாவது, தத்தம் இடங்களில் உள்ள மாணவர்கள் தொடர்ந்து இயங்கலை வாயிலாக கற்றல், கற்பித்தலை மேற்கொள்ளலாம்.

கல்விக் கழகங்களில் உள்ள ஆய்வுக் கூடங்கள், பட்டறைகளைப் பயன்படுத்த நினைக்கும் மாணவர்கள் எஸ்.ஓ.பி. விதிமுறைகளுக்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர். தங்கள் கல்விக்கழக வளாகங்களுக்குத் திரும்ப நினைக்கும் மாணவர்களுக்கு சில விதிமுறைகள் உள்ளன. அவை:

* மாணவர்கள் சொந்த வாகனத்தைப் பயன்படுத்த வேண்டும்;

* பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்கள் மாணவர்களை நேரடியாக அனுப்பலாம். ஆனால் அவர்கள் முழுமையான தடுப்பூசியைப் பெற்றிருக்க வேண்டும்;

* அவர்கள் விமானச் சேவையை பயன்படுத்த வேண்டும்.

* தங்கள் வாகனத்தில் மற்றவர்களை ஏற்றி வர நினைத்தால் சம்பந்தப்பட்ட மாணவரோ அல்லது பயணியோ முழுமையான தடுப்பூசி பெற்றவராக இருப்பது அவசியம். இந்த விதிமுறை பெற்றோர்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் பொருந்தும்;

* சரவா, சபா, லாபுவான் கூட்டரசுப் பிரதேசத்திற்குள் நுழைவதை தவிர்த்து மற்ற வளாகங்களுக்குச் செல்லும் மாணவர்கள் தங்கள் உயர் கல்விக்கழகங்கள் வழங்கும் அனுமதிக் கடிதங்களை பயன்படுத்தினால் போதுமானது. சரவா, சபா, லாபுவான் செல்ல வேண்டிய மாணவர்கள் அரச மலேசிய போலீஸ் படையின் மாவட்ட/மாநில எல்லையைக் கடக்கும் அனுமதிக் கடிதத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

* அது மட்டுமின்றி மாணவர்கள் தங்கள் வளாகங்களுக்குத் திரும்புவதற்கான அனைத்து செலவுகளையும் அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, உயர் கல்வி அமைச்சு அல்லது உயர் கல்விக் கழகம் இதற்கு பொறுப்பேற்காது.

சரவா, சபா, லாபுவானிற்குள் நுழைவதற்கான தகுதிகள்

கே: சரவா, சபா, லாபுவான் கூட்டரசுப் பிரதேசத்திற்குள் நுழையும்போது சுவாப் டெஸ்ட் எனும் கோவிட்-19 பரிசோதனையை மாணவர்கள் செய்திருக்க வேண்டுமா?

ப: நிச்சயமாக. மேற்கண்ட மூன்று இடங்களில் உள்ள உயர் கல்விக் கழகங்களுக்குள் நுழைவதற்கு முன்னதாக மாணவர்கள் ஆர்டி-பிசிஆர் சோதனையை செய்திருக்க வேண்டும். கல்விக் கழகங்களுக்குத் திரும்பும் மூன்று நாட்களுக்கு முன்னதாக மற்றும் அந்தந்த மாநில அரசாங்க உத்தரவுக்கு ஏற்ப இதனைச் செய்ய வேண்டும்.

பரிசோதனையும் செலவுகளும்

கே: இந்த கோவிட்-19 பரிசோதனைக்கான செலவுகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா?

ப: ஆம், மாணவர்கள் மேற்கொள்ளும் அனைத்து ஆர்டி-பிசிஆர் கோவிட்-19 பரிசோதனைக்கான செலவுகளையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும். மலேசிய சுகாதார அமைச்சின் மேற்பார்வையில் செயல்படும் சுகாதார கிளினிக்குகளில் மாணவர்கள் இப்பரிசோதனையைச் செய்ய வேண்டும்.

கே: ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழுமையான தடுப்பூசியைப் பெற்றுள்ள மாணவர்களுக்கு உயர் கல்விக் கழகங்களே சொந்தமாக கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள முடியுமா?

ப: முடியும். ஆனால் இதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட உயர் கல்விக் கழகமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கே: மாணவர்கள் நேரடியாக கல்விக் கழகங்களுக்குள் நுழையும்போது தங்கள் சொந்த கோவிட்-19 பரிசோதனைக் கருவியை எடுத்துச்செல்ல வேண்டுமா?

ப: மாணவர்கள் கல்விக் கழகங்களுக்குள் நுழையும்போது கோவிட்-19 பரிசோதனை கருவிகளை கல்விக் கழகங்களே தயார் செய்ய வேண்டும் என்பதை உயர் கல்வி அமைச்சு வலியுறுத்துகிறது.

கே: முழுமையான தடுப்பூசியைப் பெற்ற மாணவர்களை தனித்து வைப்பது அவசியமா?

ப: அவசியமில்லை.

கே: சரவா, சபா, லாபுவான் கூட்டரசுப் பிரதேச மாநிலங்களுக்குத் திரும்பும் மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டுமா?

ப: சரவா மாநிலத்திற்குள் நுழையும் மாணவர்கள் தத்தம் உயர் கல்விக்கழகங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது அவசியம். முழுமையான தடுப்பூசி பெற்றுள்ள, சபா மாநிலத்திற்குள் நுழையும் மாணவர்கள் மைசெஜாத்ரா செயலியின் வாயிலாக சுயமாக தங்களை கண்காணித்துக் கொள்ள வேண்டும்.

லாபுவான் கூட்டரசுப் பிரதேசத்திற்குள் நுழையும் மாணவர்கள் தத்தம் கல்விக் கழகங்களில் ஐந்து நாட்களுக்கு தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். நான்காவது நாளில் அவர்கள் ஆர்டிகே-ஏஜி பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

கே: தனிமைப்படுத்துவதற்கான செலவுகளை மாணவர்கள் செலுத்த வேண்டுமா? ப: சரவா, சபா, லாபுவானுக்குத் திரும்பும் மாணவர்கள் தனிமைப்படுத்தப்படும்போது அதற்கான செலவுகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.

தடுப்பூசி பெற இயலாத மாணவர்கள்

கே: சுகாதார காரணங்களுக்காக தடுப்பூசி பெற இயலாத மாணவர்கள் சரவா மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்களா?

ப: அம்மாதிரியான மாணவர்கள் முதலில் அரசாங்க மருத்துவமனை அல்லது கிளினிக் மருத்துவரின் அதிகாரப்பூர்வ கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

கே: தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி பெறும் தகுதியுள்ள மாணவர்கள் யார்?

ப: மைசெஜாத்ரா செயலி வாயிலாக தடுப்பூசிக்கான தேதியைப் பெறாத நிலையில், உயர் கல்விக்கழகங்களில் பயிலும் வாய்ப்பை பெற்றுள்ள மாணவர்கள் தடுப்பூசி மையங்களில் நேரடியாக தடுப்பூசி பெறலாம். புதிய மாணவர்கள் கல்வி வாய்ப்புக்கான கடிதம், அடையாள அட்டையைக் கொண்டு செல்ல வேண்டும். பழைய மாணவர்கள் தங்களின் மாணவர் அட்டையையும் அடையாள அட்டையையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

கே: தங்கள் கல்விக்கழக வளாகத்தைச் சென்றடையும் மாணவர்களுக்கு உடல் உஷ்ண அளவு அதிகமாக இருந்தால் அல்லது அறிகுறிகள் இருந்தால் எப்படி?

ப: முழுமையான சுகாதாரப் பரிசோதனைக்கான அந்த மாணவர் பல்கலைக்கழக சுகாதார மையம் அல்லது அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட வேண்டும். அவசியம் ஏற்பட்டால் அவருக்கு கோவிட்-19 பரிசோதனை செய்யப்பட வேண்டும். இந்நோக்கத்திற்காக தனிமைப்படுத்தும் மையத்தை சம்பந்தப்பட்ட கல்விக்கழகம் தயார் செய்ய வேண்டும்.

கே: கல்விக்கழக வளாகத்திற்கு வெளியே அல்லது வாடகை வீடுகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?

ப: முழுமையான தடுப்பூசி பெற்றுள்ள மாணவர்கள் எப்போதும் சுகாதார பரிசோதனைக்கு உட்படுவதுடன்  வளாகத்திற்குள் நுழையும்போது தடுப்பூசி டிஜிட்டல் சான்றிதழைக் காட்ட வேண்டும்.  வளாகத்திற்குள் நுழையும்போது எப்போதும் மைசெஜாத்ரா செயலியைப் பயன்படுத்துவதும் மிகவும் அவசியமாகும்.

அனைத்துலக மாணவர்களின் நிலை என்ன?

கே: மலேசியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படும் அனைத்துலக மாணவர்களின் நிலை என்ன?

ப: முழுமையான தடுப்பூசியைச் செலுத்தியுள்ள, மலேசியாவிற்குள் நுழையும் அனைத்துலக மாணவர்களுக்கு சில விதிமுறைகள் உள்ளன. அவை:

* தடை செய்யப்பட்டுள்ள நாடுகளைத் தவிர்த்து மற்ற எல்லா புதிய மற்றும் பழைய மாணவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி உண்டு;

* பிரிட்டன் பிரஜைகளான அனைத்துலக மாணவர்கள்;

* மொபிலிட்டி மற்றும் கல்விச்சுற்றுலா பிரிவு மாணவர்களுக்கு அனுமதி உள்ளது.

முழுமையான தடுப்பூசி பெற்றிருப்பதுடன் மலேசிய குடிநுழைவு விதிமுறைகளுக்கு உட்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் அனைத்துலக மாணவர்கள் செய்திருக்க வேண்டும். இவர்கள் மலேசியாவிற்குள் நுழைவதற்கு முன்னதாக இ.எம்.ஜி.எஸ். எனும் மலேசிய கல்வி அனைத்துலக சேவை முறையின் வாயிலாக உயர் கல்வி அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும்.

கோவிட்-19 பரிசோதனைக்கான செலவுகளை இம்மாணவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்நாட்டிற்குள் நுழையும் 72 மணி நேரத்திற்கு முன்னதாக அவர்கள் இப்பரிசோதனையை செய்திருக்க வேண்டும். மலேசிய விமான நிலையம் வந்தடைந்ததும் மலேசிய சுகாதார அமைச்சின் பரிசோதனை மையத்தில் அவர்கள் மீண்டும் பரிசோதிக்கப்படுவர். கோவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாத மாணவர்கள் மட்டுமே மலேசியக் குடிநுழைவு சோதனைச் சாவடிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என உயர் கல்வி அமைச்சு கூறுகிறது.       

 

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
100 நாள் Aspirasi #KeluargaMalaysia திரளாகக் கலந்து கொள்ள வாருங்கள்

அரசாங்கத்தின் 100 நாள் Aspirasi #KeluargaMalaysia எனும் நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமான

மேலும்
img
Aspirasi #KeluargaMalaysia கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

அரசாங்கத்தின் 100 நாள் Aspirasi #Keluarga Malaysia எனும் நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமான

மேலும்
img
தொழில் முனைவோர், தொழில் துறை வளர்ச்சிக்கான அத்தியாவசிய திறன்களுடன் மலேசிய இந்தியர்களுக்கு சித்தப்படுத்தும் NCER பயிற்சித் திட்டங்கள்.

மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வலியுறுத்தி வரும்

மேலும்
img
பி.டி.பி.டி.என். வழங்கும் 15%, 12%, 10% - சலுகைக்கான விவரங்கள்

தேசிய உயர்கல்வி நிதியுதவிக் கழகமான பி.டி.பி.டி.என்., தங்கள் கடனை திரும்பச்

மேலும்
img
KEMPEN BELI BARANGAN MALAYSIA

வாருங்கள் ஆதரிப்போம், மற்றும் வாங்குவோம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img