புதன் 11, செப்டம்பர் 2024  
img
img

அறுவடையால் திருவடையும் தைத்திருநாள்!
ஞாயிறு 12 ஜனவரி 2020 13:42:29

img

கைம்முதல் நெல்லைக் கொண்டு

கழனியிற் விதையாய்ப் பாவி

மெய்முதல் உழைப்பால் ஈந்த

மேன்மைகொள் பொங்கல் ஆகும்!

 

தமிழர்கள் எத்தனையோ திருநாள்களைக் கொண்டாடினாலும் பொங்கல் திருநாளே அனைத்திலும் முத்தாப்பாய்த் திகழ்கிறது. இந்நாளில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டால் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கூடிய ஆனந்தமும் பெறலாம்.

தை மாதத்தின் பிறப்பை அறுவடைத் திருநாளாக, பொங்கல் விழாவாக உலகத் தமிழினம் கொண்டாடி வருகிறது.

பொங்கல் விழா என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழாவாகும். தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரீஷியஸ் என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் என்பதற்கு சாப்பிடும் பொங்கல் என்று பொருள் அல்ல; பொங்கிப் பெருகி வருவது என்பதே பொருளாகும்.

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியை சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டு, புத்தடுப்பில் கொதிக்க வைத்து, பொங்கல் சோறாக்கிச் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

பொங்கல் விழாவை தமிழர் தேசிய விழாவாகப் பலர் கருதுகின்றனர். பொங்கலைத் தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது. தமிழ்நாடு போன்ற நாடுகளில் தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளாக இந்நாள் கருதப்படுகிறது.

ஆடியில் விதை விதைத்து, அதை ஆறு மாதம் கழித்து அறுவடை செய்யும் உழவர்கள், தை முதல் தேதியில் உழவுக்கு உதவியாய் இருந்த இயற்கைக்கு நன்றி சொல்கிறார்கள். இதையொட்டி உருவானதே தை பிறந்தால் வழி பிறக்கும் எனும் பழமொழி. 

பொங்கல் விழா மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழர்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும் தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா பொங்கலாகும். மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதம் இருப்பர். தை முதலாம் தேதியில் விரதத்தை நிறைவு செய்வர். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். இதுவே நாளடைவில் நான்கு தினங்களுக்குக் கொண்டாடும் பொங்கல் திருநாளாகியது.  

முதல் நாள்: போகிப் பண்டிகை

தை முதல் தேதியில் இப்பொங்கல் விழா  ஆரம்பித்தாலும், இதற்கான பிள்ளையார் சுழியை மார்கழி மாத இறுதியிலேயே போட்டுவிடுகிறோம். இதுதான் போகியாக கொண்டாடப்படுகிறது.

பழையனவற்றை போக்கியதால் போக்கி என்றழைக்கப்பட்டு பின்னாட்களில் போகி என உருமாறியது. இந்நாளில் வீட்டில் பழையதாகி தேவையில்லாமல் ஆகிவிட்ட பொருட்களை தீயிலிட்டு கொளுத்தும் வழக்கத்தைக் கொண்டுள்ளோம். அல்லவை அழிந்து நல்லவை வரட்டும், பழையன கழிந்து புதியன புகும் நாளாகக் கொண்டாடப்படுகிறது இந்நாள்.

இரண்டாம் நாள்: தைப்பொங்கல்

தை தமிழ் மாதம் முதலாம் தேதியில் கொண்டாடப்படும் இவ்விழா உழைக்கும் மக்கள் இயற்கை தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும் மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.

புதுப்பானை எடுத்து, மஞ்சள் உள்ளிட்டவற்றைப் பானையைச் சுற்றிக் கட்டி, புதுப் பாலில் புது அரிசியிட்டு, வெல்லம், நெய் ஆகியவற்றைக் கலந்து பொங்கலிடுவர். வீட்டிற்கு வெளியே சூரியன் இருக்கும் திசையை நோக்கி இந்தப் பொங்கலிடும் நிகழ்வு நடைபெறும்.

அரிசி நன்கு சமைந்து பொங்கி வரும்போது குலவையிட்டும் பொங்கலோ பொங்கல், பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக என்ற குரலோடு பொங்கல் பானையை இறக்க வேண்டும். நன்கு பொங்கி வந்தால் அந்த ஆண்டு முழுதும் நல்ல வளமும் நலமும் நிலவும் என்பது ஐதீகம்.

மூன்றாம் நாள்: மாட்டுப் பொங்கல்

உழவுத் தொழிலுக்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் நன்னாளே மாட்டுப் பொங்கல். ஆண்டெல்லாம் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.

பசுவின் உடலில் தேவர்கள் உறைவதாக ஐதீகம். எனவே, பசுவை வணங்குவதன் மூலம் அனைத்து தேவர்களின் ஆசியும் நமக்குக் கிடைக்கின்றன.

இன்றைய தினத்தின்போது மாடுகளுக்கு ஒரு வேலையும் தர மாட்டார்கள். கழுத்தில் புது மணி கட்டி, கொம்புகளை சீவி விட்டு வண்ணம்பூசி சுதந்திரமாக திரிய விடுவார்கள். பின் அவற்றுக்கு படையல் இட்டு வணங்குவர்.

இங்குதான் ஜல்லிக்கட்டு தோன்றியிருக்கிறது. மாட்டுப் பொங்கலின்போது கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

நான்காம் நாள்: காணும் பொங்கல்

இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சந்தித்து தங்கள் அன்பையும்  உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர்.

இக்காணும் பொங்கலை கன்னிப் பொங்கல், கன்று பொங்கல் எனவும் அழைக்கின்றனர். திருமணமாகாத பெண்களுக்காக கன்னி பொங்கலும் ஆண்களுக்காக கன்று பொங்கலும் வைத்து கூடிய விரைவில் திருமணம் நடக்கும்படி வேண்டுகின்றனர்.

மனம் இனிக்க பொங்கல், மனை சிறக்க மஞ்சள், நலம் சிறக்க கரும்பு இவை அனைத்தும் பொங்கல் திருநாளில் கிடைக்கும் சிறப்புகள்.

இத்தனை சிறப்புகள் கொண்ட தமிழர்களின் பண்பாட்டு விழாவை நாம் இனிதே கொண்டாடி மகிழ்வோம்!

பின்செல்

சிறப்புக் கட்டுரைகள்

img
அறுவடையால் திருவடையும் தைத்திருநாள்!

மனம் இனிக்க பொங்கல், மனை சிறக்க மஞ்சள், நலம் சிறக்க கரும்பு

மேலும்
img
தமிழ்ப்பள்ளிகளில் திருக்குறளை கட்டாயப் பாடமாக்க வேண்டும்: மு. வரதராசு

’திருக்குறளை தமிழ்ப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நாள்தோறும் ஒரு

மேலும்
img
குரங்கிலிருந்து பிறந்தவர்கள் நாமென்று சொன்ன டார்வின் பிறந்ததினம் இன்று!

நீயும், உன் குடும்பத்தினரும் தான் குரங்கிலிருந்து வந்தவர்கள்

மேலும்
img
சிடி விற்பனை முதல் சிஎம் பதவி வரை குஷியில் சசி!

(சாணக்கியனின் தமிழக சிறப்புக் கட்டுரை)

மேலும்
img
பாண்டுரங்கன் கோயில் கும்பாபிஷேகம்

கும்பகோணத்திலிருந்து மாயவரம் செல்லும் வழியில் உள்ளது கோவிந்தபுரம்.

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img