img
img

சாதனைப் பெண் வைஷ்ணவிக்குப் பின்னால் இத்தனை துயரங்களா?
செவ்வாய் 19 மார்ச் 2019 17:27:31

img

புற்றுநோய் - இதுதான் வாழ்க்கையின் இறுதி எல்லை என்று பலரும் நினைத்து விடுகின்றனர். ஆனால், சோகத்தின் உச்சியில் கண்களிலிருந்து கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்து விட்டு, எதிர்நீச்சல் போடுவதில்தான் வாழ்வில் புதிய நம்பிக்கை, ஏன், புதிய வாழ்க்கையே கிடைக்கிறது என்கிறார் சிலாங்கூர், ஷா ஆலமைச் சேர்ந்த 28 வயது வைஷ்ணவி இந்திரன் பிள்ளை.

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வைஷ்ணவி, அதற்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டார். அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் மீண்டும் இரண்டா வது முறையாக முதுகெலும்பு புற்றுநோய் தாக்க, மீண்டும் சிகிச்சை பெற்று மீண்டு வந்திருக்கிறார். அண்மையில் மணப்பெண் கோலத்தில் இவர் எடுத்துக்கொண்ட நிழற்படங்கள் சமூக வலை தளங்களில் மிகவும் பரவலாகப் பகிரப்பட்டு வந்தன. 

பட்டுப்புடவை, அலங்காரம், நெற்றிச்சூடி, ஆரம் நெக்லஸ் என நகைகள் அணிந்து முகத்தில் நாணச் சிரிப்புடன் புகைப்படத்தில் மணப்பெண் கோலத்தில் இவர் காணப்படுவார். இதுபோன்ற எல்லா அலங்காரங்களுடன் காணப்பட்டாலும் தலையலங்காரம் மட்டும்தான் இல்லை.நாணச் சிரிப்புக்கு பதிலாக தன்னம்பிக்கையுடன் கூடிய புன்னகை, கை கால்களில் மருதாணி சிவப்பு, உதட்டில் லிப்ஸ்டிக் சிவப்பு, செந்நிறப் புடவை என அழகாக தோற்றமளித்தாலும், தலையில் முடி இல்லாதது ஒரு குறையாகத் தெரிகிறதா?

இந்த மணப்பெண்ணின் தலையில் மலர்கள் இல்லாததை ஒரு குறையாக அவர் நினைக்கவே இல்லை. நாமும் அப்படி நினைத்து விடக்கூடாது. காரணம்,   இந்தப் பெண் கடந்து வந்த பாதையும் மலர்ப்பாதை அல்ல. இவர்தான் வைஷ்ணவி.

“கீமோதெராப்பி” சிகிச்சை காரணமாக தன் கூந்தலை இழந்தார்.  அழகில் அதிக கவனம் செலுத்தும் பெண்கள், நோயின் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தாலும், அதன் தாக்கத்தினால் ஏற்படும் மனசோர்விலிருந்து மீண்டு வருவது அரிது. ஆனால், வைஷ்ணவி அப்படியல்ல.  அவரின் தன்னம்பிக்கை மற்றவர்களுக்கு   உந்துசக்தியாக மாறிவிட்டது.

கீமோதெராப்பி சிகிச்சையால் தலைமுடி கொட்டிப்போக, உடல் பொலிவிழந்துவிட்டது. இது வைஷ்ணவிக்கு  மன உளைச்சலைத் தந்தாலும்  தன் துக்கத்திலிருந்து விடுபட்டு, இன்று உலகிற்கே தன்னம்பிக்கை நட்சத்திரமாய் மிளிர்கிறார்.

புன்னகையில் கவலையை மறைத்தார்

வைஷ்ணவியின் முகத்தில் வருத்தமோ சோகத்தையோ நாம் காண முடியாது. அவரின் நிழற்படங்கள் இதற்கு சான்று. அதற்குப் பதிலாக மலர்ந்த புன்சிரிப்பும் தன்னுடைய கனவு நனவான மகிழ்ச்சியும்தான் அதில் தென்படுகிறது. வைஷ்ணவி தமது அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்துகொள்கிறார்:

“இந்தியா, தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட நான், குடும்பத்துடன் மலேசியாவில் வசிக்கிறேன். அம்மா, அப்பா, அக்கா என்ற ஒரு சிறு குடும்பம். நான் பொறியியல் துறையில் கல்வியை முடித்து விட்டு, சில ஆண்டுகள் பணிபுரிந்தேன்”.

“பரதநாட்டியமும், கர்நாடக இசையும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. நன்றாக சமைப்பேன். ஊர் சுற்ற மிகவும் பிடிக்கும், நண்பர்களும் அதிகம். அது மட்டுமா? அலங்காரம் செய்து கொள்வதும், நன்றாக உடுத்துவதிலும் ஆர்வம் அதிகம்”.

“எனக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக 2013-இல் தெரியவந்தது. உண்மையில் அப்போது நான் மிகவும் உடைந்து போனேன். அதுவரை வாழ்க்கையை விளையாட்டாகவே எடுத்துக் கொண்டிருந்த எனக்கு புற்றுநோய் என தெரிந்ததும் வாழ்க்கையே மாறிவிட்டது. ஆனால், எப்படியும் மீண்டு விடுவேன் என்ற நம்பிக்கையை மட்டும் நான் கைவிடவில்லை”.

“சில ஆண்டுகள் சிகிச்சைக்குப் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பினேன். ஆனால் 2018-இல் மீண்டும் முதுகெலும்பையும் கல்லீரலையும் புற்றுநோய் தாக்கியது. என் தன்னம்பிக்கை அந்த கனம் தடம் புரண்டது.  வாழ்வா சாவா என்ற நிலைக்கு என்னை தள்ளியது”.

“புற்றுநோய் உடலை மட்டுமல்ல, மனதையும் அரித்து கவலைகளையும் அச்சத்தையும் கூடுதலாகத் தரும் ஒரு நோய். அது நோயாளியை மட்டுமா பாதிக்கிறது? அதன் தாக்கத்தை குடும்பமே உணர்கிறது. என் குடும்பம் முற்றாக  நிலை குலைந்து போனது. என் வேதனைகளைப் பார்த்து என் குடும்பத்தினர் பட்ட துயரத்தை வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாது” 

மலேசியாவில் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான சிறப்பு வசதிகள் இல்லாததால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம். எனவே பொருளாதாரச் சிக்கல்களும் எழுந்தன. இதுவரை 16 முறை கீமோதெராப்பி சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன்.இந்நோயைப் பற்றி வெளியில் சொல்ல ஆரம்பத்தில் தயங்கினேன்.  குடும்பத்தினரும், சில நண்பர்களும் ஆறுதலாக துணை நின்றா லும், உலகத்தில் இருந்து தனித்து விடப்பட்டது போல் உணர்ந்தேன். 

என்னுடைய நோயைப் பற்றி வெளியே தெரிந்தால், உலகத்தில் இருந்து நான் தனிமைப்படுத்தப்படுவேன், ஆண்கள் விலகுவார்கள், திருமணத்தில் பிரச்சினை ஏற்படும் என்று பெற்றோர் பயந்தார்கள்.ஆனால், நான் இன்ஸ்ட்ராகிராமில் என்னுடைய புற்றுநோய் பற்றி பதிவிட்டேன். பலரிடமிருந்து ஆக்கப்பூர்வமான எதிர்வினைகள் வந்ததைப் பார்த்து எனக்கு புதிய நம்பிக்கை பிறந்தது.

ஒருநாள் நெட்ஃபிலிக்ஸில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, மணப்பெண்ணாக போட்டோஷுட் ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற எண்ணம் திடீர் என்று தோன்றியது. யாரும் என்னை காதலிப்பார்களா, எனக்கு காதலன் கிடைப்பானா, திருமணம் நடக்குமா? என்று எனக்குத் தெரியாது. ஆனால் மணப்பெண் அலங்காரத்தில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள விரும்பினேன்.

உடனே, புகைப்படக் கலைஞர், ஒப்பனைக் கலைஞர்களை தொடர்பு கொண்டு ஆலோசித்தேன். அவர்கள் எனக்கு உற்சாகமளித்தார்கள். அப்போதுகூட எனது புகைப்படங்கள் இவ்வளவு பிரபலமாகும் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஆனால் நிறைய பெண்கள் என்னுடைய புகைப்படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அதேபோல் நடந்தும்விட்டது.

இன்ஸ்ட்ராகிராமில் புகைப்படம் வெளியிட்ட பிறகு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் எனக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்கள். அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் உந்துசக்தியாய் நான் இருப்பதாகச் சொன்னார்கள். அது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

“உண்மையில் அழகு என்பது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது” என புத்தகங்களில் படித்திருக்கிறேன்; அதை நிதர்சனமாக இன்று உணர்கிறேன். அழகாக இருப்பதாக நாம் உணர்ந்தால், உண்மையில் நாம் அழகாகத்தான் இருப்போம் என்பதை புரிந்து கொண்டேன். அழகு என்பது, நம்மை நாமே நேசிப்பது என்பதும், தன்னம்பிக்கையாக இருப்பதுதான் என்றும் புரிந்து கொண்டேன் என்றார் வைஷ்ணவி.

பின்செல்

மகளிர்

img
சாதனைப் பெண் வைஷ்ணவிக்குப் பின்னால் இத்தனை துயரங்களா?

உண்மையில் அழகு என்பது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது”

மேலும்
img
பெண்களே! உங்கள் முடிவு உங்கள் தலைவிதியை மாற்றும். : சாதனைப் பெண் ஜெயலதா

ஒரு சரியான பாதைக்கு நம்மை இட்டுச்செல்லும்

மேலும்
img
சிவராத்திரியை முன்னிட்டு,10,000 நடனக் கலைஞர்கள் ஒன்றாக பங்கேற்று கின்னஸ் சாதனை

உலகம் முழுவது மிருந்து பல நாடுகளைச் சேர்ந்த

மேலும்
img
நெகிரி இந்து சங்க மகளிருக்கு சிகை அலங்கார, முக ஒப்பனைப் பயிற்சி

குடும்ப பெண்கள் சமய தொண்டு ஆற்றினாலும்

மேலும்
img
வியாபாரத்தில் சாதிக்கத் துடிக்கும் மலேசியப் பெண்கள் வரிசையில் விநோதினி!

அழகியல் கலையில் வினோதினிக்குச் சிறு வயதிலிருந்தே ஆர்வம்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img