img
img

அரசியலாக்கப்படுகிறதா ராணுவ வீரர்களின் மரணம்...
சனி 02 மார்ச் 2019 14:24:09

img

 

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் தொடரும் பதற்றத்துக்கு ஈடாக, பி.ஜே.பி-க்கு எதிராக உள்நாட்டு அரசியலிலும் இவ்விவகாரம் தொடர்பான கருத்து மோதல்கள் கடும் உஷ்ணத்தைக் கிளப்பி வருகின்றன. 

`புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிகழ்வுகளை மத்திய பி.ஜே.பி அரசு அரசியலாக்கக் கூடாது' என்று எதிர்க்கட்சிகள்தான் இதுநாள்வரையில் கூறிவந்தன. இந்நிலையில், திடீர் திருப்பமாக தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனும் `இவ்விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கக் கூடாது' என்று பதில் தாக்குதலில் இறங்கியிருக்கிறார்.

பி ஜே பி மீது குற்றம்சாட்டும் திருச்சி வேலுச்சாமி

 

இதுகுறித்துப் பேசும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, ``5 ஆண்டுகளுக்கு முன்பு, இதே திருச்சிக்கு வந்து பேசிய நரேந்திர மோடி, `ராணுவ வீரர்களைப் பாதுகாக்க முடியாத இந்த அரசாங்கம் எதற்கு... ராஜினாமா செய்துவிட்டுப் போகவேண்டியதுதானே...' என்று அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்களைப் பார்த்து வீராவேசமாகக் கேட்டுச் சென்றார். இப்போது அவரது ஆட்சியில்தான் 44 ராணுவ வீரர்களை நாம் பறிகொடுத்து நின்றுகொண்டிருக்கிறோம். ஆனால், இப்போதும்கூட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல், இறந்துபோன வீரர்களுக்கு சல்யூட் செய்தாரே தவிர, `இந்த ஆட்சி ராஜினாமா செய்யவேண்டும்' என்று சொல்லவில்லை.

இரண்டாவது உலகப் போரில் கதாநாயகனே இங்கிலாந்துதான். ஆனால், அன்றைய  சூழ்நிலையில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில், போர் குறித்த சிறப்பு விவாதம் நடைபெற்றபோது, எதிர்க்கட்சியினர் அனைவரும் ஆளுங்கட்சியை நோக்கி அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும், அன்றைய இங்கிலாந்துப் பிரதமர் சர்ச்சில் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டுவந்தனர். அனைத்தையும் கேட்டுமுடித்த பிரதமர் சர்ச்சில், எதிர்க் கட்சி உறுப்பினர்களின் ஒவ்வொரு விமர்சனத்துக்கும் பொறுமையாகப் பதில் பேசிமுடித்தார். கூடவே, தன் மீது எழுப்பப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கும் தெளிவான பதில் சொல்லி, ஜெயித்தார். இந்த ஜனநாயகப் பண்பு - நேர்மை.... இந்திய பிரதமருக்கும் இருந்திருக்க வேண்டும்.  எந்தப் பிரச்னையையும் பாராளுமன்றத்தில் நேருக்குநேர் சந்திக்கவே  பிரதமர் பயப்படுகிறாரே...!

இதுமட்டுமா... `ஜனநாயகமே இல்லாத நாடு பாகிஸ்தான்' என்று உரக்கப் பேசிவருகிறார் மோடி.  ஆனால், `ஜனநாயகமே இல்லாத' அந்தப் பாகிஸ்தா னின் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டின் பாராளுமன்றத்திலேயே இந்தப் போரைப் பற்றியும் அதன் பின்னணியைப் பற்றியும் பகிரங்கமாகப் பேசுகிறார். அங்கே பிடித்து வைக்கப்பட்டிருந்த வீரர் அபிநந்தனை விடுவிப்பது குறித்தும் உடனே அறிவிக்கிறார். ஆக, கிரிக்கெட் வீரராக இருந்து, பாகிஸ்தான் பிரதமராகியிருக்கும் இம்ரான் கானிடம் இருக்கும் நேர்மையும் ஜனநாயகமும் இந்தியப் பிரதமர் மோடிக்கு இல்லையே... எனவே, ஜனநாயகம் பற்றியும் தேச பக்தி பற்றியும் பேசுவதற்கு பி.ஜே.பி-யினருக்கு எந்தத் தகுதியும் இல்லை. 

 

 

தாய் நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்துள்ள ராணுவ வீரர்களின் புகைப்படங்களுக்கு முன்பு நின்றுகொண்டு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசி யவர்தான் பிரதமர் மோடி. இப்படிப்பட்ட மனநிலை கொண்ட ஒருவர் நாட்டின் பிரதமராக இருப்பது இந்த நாட்டினுடைய துரதிர்ஷ்டம்!'' என்றார் குமுறலாக.

தமிழிசை சௌந்தரராஜன்- பி ஜே பி மாநிலத் தலைவர்

திருச்சி வேலுச்சாமியின் இந்தக் கருத்துகளுக்குப் பதிலளித்துப் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், ``தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருப்போம் என்று ராகுல்காந்தி ஒருபக்கம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, `உளவுத்துறையின் கவ னத்தை மீறி எப்படி இப்படியொரு தாக்குதல் நடைபெற்றிருக்க முடியும்...' என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கேள்வி கேட்கிறார். 

காங்கிரஸ் மட்டுமல்ல... வைகோவும்கூட, `தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக மோடி எந்த நிலைக்கும் இறங்கிப்போவார்' என்கிறார். நாட்டுப்பற்றோடு 24 மணி நேரமும் செயல்படுகிற நம் பிரதமர், ஒரு தேர்தலுக்காக இப்படி ராணுவ வீரர்களைக் கையில் எடுப்பாரா.... என்பதை மக்கள்தான் சிந்திக்கவேண்டும். இதேபோல், `அபிநந்தனை பாகிஸ்தானிலிருந்து விடுவிக்கும் முயற்சிகளைச் செய்யாமல், தேர்தல் பரப்புரையில் பிரதமர் ஈடுபட்டுள்ளார்' என்று திருமாவளவனும் குற்றம் சாட்டுகிறார். ஆக என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற நோக்கத்தில், திட்டமிட்டே இவ்விவகாரத்தை அரசியலாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 

`பாராளுமன்றத்தில் பேச பிரதமர் பயப்படுகிறார்' என்கிறார்கள். எல்லா விஷயங்களையும் அப்படி வெளிப்படையாகப் பேசிவிட முடியாது என்பதை முதலில் இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அபிநந்தன், பெற்றோரை நான்தான் முதன்முதலில் சந்தித்துப் பேசினேன். ஆனாலும் அன்றையதினம் நான் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது. இதேபோல், தீவிரவாதம் நம் நாட்டில் ஊடுருவித் தாக்குதலை நிகழ்த்தும்போது, அந்தத் தாக்குதலை முறியடிப்பதற்காக சர்ஜிகல் ஸ்ட்ரைக் போன்ற வேலைகளை அமைதியாக இருந்து செய்துமுடிப்பதுதான் முக்கியமே தவிர.... பேசிக்கொண்டிருக்க முடியாது!

பாகிஸ்தான் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நாடு. இந்தியா அப்படிப்பட்டதல்ல.... எனவே ஒரு வார்த்தையைப் பேசினாலும் தீர ஆலோசித்து அளந்து பேசவேண்டும்.

இம்ரான்கான்

அடுத்ததாக, இறந்துபோன நம் வீரர்களின் புகைப்படப் பின்னணியில் பிரதமர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார் என்கிறார்கள். அது, இறந்துபோன நம் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள். இதைக்கூட அரசியலாக்கினால் எப்படி...? அப்படியென்றால், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அஞ்சலி செலுத்தக் கூடாது என்கிறார்களா?

ராஜீவ்காந்தி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். ரத்தமும் சதையுமான அந்தப் புகைப்படத்தை தெருவெங்கும் ஒட்டித்தானே இதே காங்கிரஸ் கட்சியினர் ஓட்டுக் கேட்டு ஜெயித்தார்கள்...? காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்த எனக்கு இன்னமும் மறக்கமுடியாத நிகழ்வல்லவா அது. 

முன்பு ஒருமுறை அத்வானி தென்காசி வந்திருந்தார். அப்போது அந்தப் பகுதியில் நிகழ்ந்த படுகொலைச் சம்பவங்களில் இறந்துபோனவர்களின் புகைப்படங்களை மேடையில் வைத்துத்தான் அஞ்சலி செலுத்தினோம். ஆக, இது இயல்பான ஒன்று. 

தேர்தலுக்காக இங்கே சிலர், கொச்சையாகப் பேசுவதைச் சுட்டிக்காட்டும் விதமாகத்தான், கன்னியாகுமரியில் இன்று நடைபெற்ற  கூட்டத்தில் பேசிய பிரதமர், `இங்கே சிலர் இந்திய அரசுக்கு எதிராகப் பேசுகின்ற இதே கருத்துகள்தான் பாகிஸ்தான் பாராளுமன்றத்திலும் வானொலியிலும்கூட பேசப்படுகிறது' என்று குறிப்பிட்டுப் பேசினார்!'' என்றார். 

அரசியல் கட்சியினர் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை வீசி வரும் நிலையில், இவர்களில் யார் சொல்வது உண்மை என்ற குழப்பத்துக்கு தேர்தல் மூலமாக விரைவில் விடை கிடைத்துவிடும் என்று நம்புவோம்!

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
img
கேரளாவில் புது காச்சல்

கோழிக்கோடு, ஏப். 30- கோழிக்கோடு மாவட்டத்தில் பாக்டீரியாவால் மீண்டும் 2

மேலும்
img
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம், ரங்கா ரங்கா கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.

திருச்சி, ஏப். 30- ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம், ரங்கா

மேலும்
img
தப்ளிக் விழா: டில்லி விமான நிலையத்தில் 8 மலேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்! 960 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்

இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற தப்ளிக் சமய விழாவில் கலந்து கொண்ட

மேலும்
img
மோடிக்கு பயங்கரவாதிகள் குறி

பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பயங்கரவாத அமைப்பு டிச.22ஆம் தேதி

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img