திங்கள் 06, டிசம்பர் 2021  
img
img

அம்மன் அருள் நல்கும் ஆடித் திங்கள்
புதன் 20 ஜூலை 2016 12:10:38

img

வருடத்தின் எல்லா மாதங்களுமே சிறப்பு வாய்ந்தவை என்றாலும், ஆடி மாதம் தனிச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இம்மாதம்தான் தட்சிணாயனம் தொடங்கும் மாதம். அதாவது சூரியன் தென் திசை நோக்கி நகரும் காலம். அப்போது பல அரிய சூட்சும சக்திகள் வெளிப்படுகின்றன. அதோடு நல்ல கதிர்வீச்சுக்களும் ஏற்படுகின்றன. அதனால் ஆடி மாதத்தில் கோயிலுக்குச் சென்று வழிபடும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள். அப்போதுதான் அந்த நுண்ணிய சக்திகள் இறை சக்தியோடு கலந்து நம் உடலுக்கும் மனதுக்கும் நல்ல ஆரோக்கியத்தை வழங்கும். ஆடி மாதம் அம்மன் மாதம் என பாமரர்களாலும், சக்தி மாதம் என்று படித்தவர்களாலும் போற்றப்படுகிறது. இந்த மாதத்தில் தான் ஈஸ்வரனின் சக்தி அன்னை லோக நாயகியின் சக்திக்குள் ஐக்கியமாகி விடுகிறது. இம்மாதத்தில் அம்மனை வழிபடுதல் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அன்னை மதுரையில் மீனாட்சியாகவும் மைசூரில் சாமுண்டிஸ்வரியாகவும் அவதரித்ததும் ஆடி மாதத்தில்தான். பொதுவாகவே சித்திரை வருடப் பிறப்பு முடிந்ததும் எந்தப் பண்டிகையும் வராது. ஆவணியில்தான் கிருஷ்ண ஜெயந்தி, விநாயக சதுர்த்தி என்று வரிசையாக பண்டிகைகளின் அணிவகுப்புத் துவங்கும். அதனால் ஆடி மாதத்தை பண்டிகைகளை அழைக்கும் மாதம் என்பர். ஆடி மாதத்தில் நடைபெறும் முக்கியமான விழாக்கள் ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகை களாகும். ஆடித்தபசு சங்கரன்கோவில் ஆடித்தபசு பிரசித்தி பெற்ற திருவிழா. ’ஹரியும் அரனும் ஒன்றே’என உலகுக்கு உணர்த்த விரும்பிய கோமதியம்மன், அதன் பொருட்டு இறைவனை வேண்டி ஒற்றைக் காலில் தவமிருந்தாள். அவளது தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சி அளித் தார். இந்த வைபவமே ஆடித்தபசு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அழகன் முருகனுக்கு உகந்த ஆடிக்கிருத்திகை! ( ஜூலை 29) வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை: உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். வளம் பெருக்கும் ஆடிப்பெருக்கு! (ஆகஸ்ட் 2) நதியைப் பெண்ணாக வணங்கும் நாள்! மழை பெய்து காவிரி முதலான நதிகளில் வெள்ளம் பெருகியோடும் ஆடி மாதத்தின், 18ஆம் நாள் ஆடிப் பெருக்காகக் கொண்டாடப்படுகிறது. அன்று புத்தாடை அணிந்து, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, தயிர் சாதம், வடகம் முதலான பதார்த்தங்களை எடுத்துச்சென்று, நதிக் கரைகளில் அமர்ந்து நதிகளை தாயாகக் கருதி பூஜித்து விருந்துண்டு மகிழ்வார்கள். இந்த தினத்தில் செய்யப்படும் மங்கல காரியங்கள் பன்மடங்கு பலன் தரும் என்பது ஐதீகம். ஆடி வரலட்சுமி விரதம் (ஆகஸ்ட் 12) ஆடி மாதம் வளர்பிறையில் கடைசி வெள்ளிக் கிழமை அனுசரிக்கவேண்டிய விரதம் இது. விரத நாளன்று திருமகளை கலசத்தில் எழுந்தருளச் செய்து, தேங்காய், பழம், வெற்றிலை-பாக்கு, கொழுக்கட்டை முதலானவற்றைச் சமர்ப்பித்து, திருமகளுக்கு உரிய துதிப்பாடல்களைப் பாடி, தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும். இந்த வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும் நோன்பு கயிற்றை வயதில் மூத்த சுமங்கலிகளிடம் ஆசி பெற்று, அவர்கள் மூலம் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இதனால் கன்னிப்பெண்களுக்கு விரைவில் நல்ல வரன் அமையும்; சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலம் பெருகும். ஆடிப் பௌர்ணமி (ஜூலை 19) ஆடிப்பௌர்ணமி அன்று குரு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இது குரு பூர்ணிமா என்றும் வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவை (ஆசிரியர்) வழிபடுவதுடன் தட்சிணா மூர்த்தி, கிருஷ்ணன், வேதவியாசர், ஆதிசங்கரர், இராமானுஜர், போன்றோரையும் வழிபடுகின்றனர். ஹயக்கிரீவர் அவதார தினமும் இந்நாளே ஆகும். கல்விச் செல்வம் வேண்டி ஹயக்கிரீவர் வழிபாடும் ஆடிப்பௌர்ணமி அன்று மேற்கொள்ளப்படுகிறது. திருமால் உடலிலிருந்து மதுகைடபர் என்பவர் வியர்வையில் தோன்றினர். இந்த அசுரர்கள் பிரம்மனிடமிருந்து வேதங்களை அபகரித்து குதிரை முகத் துடன் பாதாளத்தில் ஒளித்து வைத்தனர். வேதங்களை இழந்த பிரம்மா திருமாலிடம் முறையிட, திருமால் குதிரை முகம் கொண்டு அவர்களிடம் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். போரிட்டதால் பரிமுகக் கடவுளின் உக்ரம் தணியவில்லை. அதனால் திருமகள் மடியில் அமர, அவர் உக்ரம் தணிந்து லட்சுமி ஹயக்ரீவரானார். ஆடி அமாவாசை (ஆகஸ்ட் 2) ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிக முக்கியமானதாகும். அன்று நதிகள், கடலில் புனித நீராடி முன்னோர்களை வணங்கி திதி கொடுப்பதும் அன்னதானம், வஸ்திர தானம் செய்வதும் இம்மைக்கும், மறுமைக்கும் புண்ணிய பலன்களை சேர்க்கும் என்பது ஐதீகம். ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் (ஆகஸ்ட் 5) பன்னிரு ஆழ்வார்களில் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாகத் திருமாலைப் பூமாலையாலும், பாமாலையாலும் துதிக்கும் பேறு பெற்றவள் ஆண்டாள். இவள் அவதரித்த நன்னாள் ஆடிப்பூரம். உயிர்கள் மீது கொண்ட கருணையால் அவர்களுக்கு அருள்பாலிக்க பூமாதேவி, ஆண்டாள் நாச்சியாராக பிறப்பெடுத்தாள். வேதங்களின் வித்தாக விளங்கும் திருப்பாவையை நமக்கு வழங்கினாள். திருப்பாவையில் முப்பது பாசுரங்கள் உள்ளன. ஏழேழு பிறவிக்கும் கண்ணா நீயே எனக்கு உற்ற உறவு" என பாவைப்பாடலில் வலியுறுத்துகிறாள். ஆயிரமாயிரம் ஆபரணம் இருந்தாலும், பெண் கழுத்துக்கு மாங்கல்யம் தான் உயர்ந்த ஆபரணம். இளம் பெண்களுக்கு மனதிற்கேற்ற நல்ல கணவன் வாய்க்க, ஆடிப்பூர நன்னாளில் ஆண்டாளை அவசியம் வணங்க வேண்டும். ஆன்மிகச் சிறப்புகள் மிக்க ஆடி மாதத்தில் நல்ல காரியங்களை ஆரம்பிக்க கூடாது, செய்யக் கூடாது என்ற கருத்து நிலவுகிறதே. எதனால்? இந்த மாதத்தில் விரதங்கள், வழிபாடுகள், கோயில் திருவிழாக்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். ஆன்மீகத்திலும் இறை வழிபாட்டிலும் மனப்பூர்வமாக ஈடுபட வேண்டியிருப்பதால் மற்ற காரியங்களில், விசேஷங்களில் கவனம் செலுத்துவது சிரமம். இறைவனை துதிப்பதற்கும், அவன் சிந்தனையாகவே ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்வதற்கும் இடையூறாக மற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே மற்ற சுப விசேஷங்கள் இந்த மாதத்தில் தவிர்க்கப்படுகின்றன.

பின்செல்

இந்து

img
இன்று அனுமன் ஜெயந்தி: விரதம் இருப்பது எப்படி?

ஆஞ்சநேயர். அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது.

மேலும்
img
மிதுனம் (சித்திரைப் புத்தாண்டு பலன்கள் 2017)

பிறந்தது ஏழை என்றாலும் மனதில் எப்போதும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற ராஜ

மேலும்
img
சித்திரைப் புத்தாண்டு பலன்கள் 2017

குழந்தை உள்ளம் படைத்த ராசியில் பிறந்தவரே!

மேலும்
img
கைலாசநாதர் திருவருளால் புத்ர பாக்கியம் பெற்றோம்!

பக்தர்கள் படையெடுக்கும் திருத்தலமாக மாறியது ஸ்ரீ செல்வ விநாயகர்.

மேலும்
img
பாம்பின் விஷத்திற்கும், வெற்றிலைக்கும் இம்புட்டு சம்பந்தமா?...

ஆன்மீகத்திற்கு பயன்படும் வெற்றிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் ...

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img