மத்திய வயதுள்ளவர்களுக்கு இன்று அதிகம் தொல்லை தருவது கழுத்துவலி. ‘செர்விக்கல் ஸ்பாண்டி லைட்டிஸ்’ (Cervical Spondylitis) என்று மருத்துவர்கள் இதை அழைக்கிறார்கள். கால் நூற்றாண்டுக்கு முன்புவரை இந்த நோய் வயதானவர்களுக்கு மட்டுமே வருகிற நோயாக இருந்தது. இப்போதோ இது 20 வயது இளைஞனுக்கும் வருகிறது; யுவதிகளுக்கும் வருகிறது. காரணங்கள்? கழுத்துவலிக்கு முக்கியக் காரணம், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்து போவதுதான். அப்போது கழுத்தை அவற்றால் தாங்கிப்பிடிக்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் கழுத்துவலி. அதிக சுமையைத் தலையில் தூக்குவது, நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்துக் கொள்வது போன்றவை இந்த மாதிரி கழுத்துவலிக்கு அடித்தளம் அமைக்கும்.முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு தேய்ந்து போவது அல்லது விலகிவிடுவது போன்ற காரணங்களால் கழுத்துவலி வருவது அடுத்த வகை. பொதுவாக நாற்பது வயதில் இந்த ஜவ்வு தேயத்தொடங்கும். ஆனால், இப்போதோ இளம் வயதிலேயே இவை தேயத் தொடங்கிவிடுகின்றன. காரணம், இவர்கள் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வது இப்போது அதிமாகிவிட்டது. கம்ப்யூட்டர் முன்னால் அதிக நேரம் தொடர்ந்து வேலை செய்வதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.